நூற்றாண்டைத் தொட்ட தனித்தமிழ் இயக்கம்


ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த அதே காலகட்டத்தில், தமிழகத்தில் மொழி திணிப்புக்கு எதிரான முழக்கங்களும் வெளிப்பட்டு வந்தன. குறிப்பாக தமிழோடு கலந்த வடமொழி, தமிழின் தனித்தன்மையை குலைத்து வந்தது. இதை மணிப்ரவாள நடை என்பார்கள். அதாவது மணி ஒன்றும் பவளம் ஒன்றும் அடுத்தடுத்துக் கோத்து உருவாக்கப்படும் மாலையைப் போலத் தமிழ்ச்சொல் ஒன்றும் வடச்சொல் ஒன்றுமென அடுத்தடுத்துப் பயன்படுத்தி எழுதுவது மணிப்ரவாளம் எனப்படுவதாகும். 
இது தமிழ்மொழியின் சிறப்பை, அடையாளத்தை மாற்றுவதாக இருக்கிறது என்று அப்போது எழும்பிய முழக்கங்களில் முக்கியமானவை மறைமலை அடிகள் எழுப்பியதாகும். இந்த மணிப்ரவாள நடைக்கு எதிராக, சமஸ்கிருத மயத்துக்கு எதிராக தனித்தமிழ் மொழியை முன்னுறுத்தி மறைமலை அடிகளால் எடுக்கப்பட்ட இயக்கம் தனித்தமிழ் இயக்கமாகும். 1916இல் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்துக்கு தற்போது வயது ‘நூறு’. ஆம், நூற்றாண்டைத் தொட்ட தனித்தமிழ் இயக்கத்துக்கு மூன்று நாள் விழாவை அறிவித்து நடத்தவுள்ளது உலகத் தமிழர் பேரமைப்பு. இதுகுறித்து, உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: 
‘1916இல் மறைமலை அடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், தமிழக வரலாற்றில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தி, வடமொழி உள்ளிட்ட பிற மொழிகளின் கலப்பினால் சீரழிந்து கிடந்த தமிழ்மொழியின் தூய்மையைக் காத்தது. தமிழர்களுக்கும், ஊர்களுக்கும் சூட்டப்பட்டிருந்த பிற மொழிப் பெயர்களை நீக்கி, தமிழ்ப் பெயர்களைச் சூட்டுதல், தமிழிசை இயக்கம், தமிழே ஆட்சி மொழி, பயிற்று மொழி, நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழி ஆகியவற்றுக்காக எழுந்த கிளர்ச்சிகள், திருக்குறளை தமிழ் மறையாக ஏற்றுக்கொண்டது, இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்ற பிற்கால இயக்கங்கள், எழுச்சிகள் அனைத்துக்கும் தனித் தமிழ் இயக்கமே வழிகாட்டியது. இந்த இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை 2016ஆம் ஆண்டு முழுவதும் கொண்டாடுமாறு, உலகத் தமிழர் பேரமைப்பு வேண்டுகோள் விடுத்தது. அதையொட்டி, இந்த இயக்கத்தின் நூற்றாண்டு விழா, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு கலையரங்கில் ஜூலை 15, 16, 17ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில், தனித்தமிழ் இயக்க நூல்கள் - இதழ்கள் கண்காட்சி, நூல்கள் வெளியீட்டு விழா, உலகப் பெருந்தமிழர் விருதுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. தமிழறிஞர்கள், மானுடவியலாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார் வல்லுநர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர். மூன்றாம் நாளில் உலகத் தமிழர் பேரமைப்பின் 9ஆவது மாநாடு நடைபெறுகிறது’ என்றார்.
‘தனிப்பெரும் தமிழ்நாட்டில் தமிழ்தான் இல்லை’ என்று வேதனையோடு அன்று பாடினார் பாவேந்தன் பாரதிதாசன். அந்த நிலை இன்று வரை மாற்றமடையவில்லை என்பதே வேதனையான உண்மை.
மீண்டும் சமஸ்கிருத திணிப்பை மத்திய அரசு தொடங்கிவிட்டது என்று தமிழ் உணர்வாளர்கள் கொந்தளிக்கும் இத்தருணத்தில் இந்த மாநாடு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
நூற்றாண்டைத் தொட்ட தனித்தமிழ் இயக்கம் நூற்றாண்டைத் தொட்ட தனித்தமிழ் இயக்கம் Reviewed by நமதூர் செய்திகள் on 23:50:00 Rating: 5

No comments:

Powered by Blogger.