' தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியை தவறவிட்டது ஏன்?' -இடதுசாரிகளை குறிவைத்த 'திடீர்' குரல்


" சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக, சி.பி.எம்மின் மத்தியக் குழு எடுத்த முடிவுகள் தவறாகவே அமைந்துவிட்டன. தேர்தல் தோல்வி அளித்த அனுபவங்களில் இருந்து அவர்கள் இன்னமும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக தமிழ்நாடு இருக்கிறது. 

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, - காங்கிரஸ் கூட்டணியில் இடதுசாரிகள் இடம்பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்காதா? அதற்கேற்ப கூட்டணியை அமைத்திருக்கலாம். தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதைப் போல, வெளிப்புற மக்களின் அனுதாபத்தையும் கட்சி அதிகளவில் பெற வேண்டும்" என மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோவுக்கு விரிவான ஆலோசனைகளைக் கூறியிருக்கிறார் ஹபீப். 

ஹபீப்பின் கருத்து பற்றி நம்மிடம் பேசிய சி.பி.எம் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், " இந்தியாவில் உள்ள வரலாற்று ஆசிரியர்களில் முதன்மையானவர் இர்பான் ஹபீப். அவரை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டு தேர்தல் முடிவுகளை வைத்து அவர் கூறிய கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்து அவர் முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொண்டுதான் செயல்பட்டு வந்தோம். மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்க, இந்த இரண்டு கட்சிகளுமே முயற்சி செய்யவில்லை. இவர்களின் கொள்கைக்கும் பா.ஜ.க, காங்கிரஸ் அரசுகளின் கொள்கைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 

சமூகப் பிரச்னைகளில் இவ்விரு கட்சிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சாதி ஆணவக் கொலை நடந்தால், அது சாதி ஆணவக் கொலைதான் என கருணாநிதியோ, ஜெயலலிதாவோ எங்காவது சொல்லியிருக்கிறார்களா? இந்தத் தேர்தலில் எங்களை ஒரு மாற்றாக மக்கள் நினைக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நாங்கள் எடுத்த முயற்சிகள் அசாதாரணமானவை. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்குப் பதிலாக முழுமையான மாற்று தேவை என்பதற்காகத்தான், மக்கள் நலக் கூட்டணியை கட்டமைத்தோம். நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில்கூட, மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல், கச்சத்தீவு என்ற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டே நாட்களைக் கடத்தினார்கள். இந்த இரண்டு கட்சிகளுக்குப் பதிலாக மாற்றுத் தேவை என்பதை சட்டமன்றக் கூட்டத் தொடரே உறுதிப்படுத்துகிறது" என்றார் உறுதியாக. 

-ஆ.விஜயானந்த்

' தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியை தவறவிட்டது ஏன்?' -இடதுசாரிகளை குறிவைத்த 'திடீர்' குரல் ' தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியை தவறவிட்டது ஏன்?' -இடதுசாரிகளை குறிவைத்த 'திடீர்' குரல் Reviewed by நமதூர் செய்திகள் on 04:23:00 Rating: 5

No comments:

Powered by Blogger.