காஷ்மீரில் வன்முறைத் தாக்குதலைக் மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்: திருமாவளவன்

union government must immediately stop the violence in Kashmir - thirumavalavan
சென்னை: காஷ்மீர் மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள ஜனநாயக விரோத வன்முறைத் தாக்குதல்களை மத்தியஅரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக ராணுவத்தாலும் துணை ராணுவப் படைகளாலும் அந்த மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையில் 30க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பெண்கள், குழந்தைகள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. வீடுகள் எரிக்கப்பட்டு பொதுச் சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டுள்ளன. ராணுவப் படையினரின் தாக்குதலில் சுமார் 100 பேர் கண் பார்வையை இழந்துள்ளனர். ஹிஜ்புல்முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்கான்வானி என்பவர் ஜூலை 8ஆம் தேதி கொலை செய்யப்பட்டதிலிருந்து இந்தக் கலவரம் ஆரம்பமானது எனத் தெரிகிறது.
காஷ்மீரில் நீண்டகாலமாக நடைமுறையிலிருக்கும் ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டம் (AFSA) அங்கே நிலைகொண்டுள்ள ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் எல்லையில்லா அதிகாரத்தை வழங்குவதன் காரணமாக தொடர்ந்து அந்த மக்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடந்தவண்ணம் உள்ளன. தற்போது அந்தத் தாக்குதல்கள் உச்சமடைந்துள்ளன.
காஷ்மீர் பிரச்சினையை இப்படியான தாக்குதல்கள் மூலம் தீர்த்துவிட முடியாது. பகை நாட்டின் மீது படையெடுப்பு நடத்துவதுபோல காஷ்மீர் மீது ராணுவத்தை ஏவுவது அந்த மக்களை மேலும் அந்நியப்படுத்துவதற்கும் பிரிவினைவாதிகளின் பிரச்சாரம் வலுப் பெறுவதற்குமே உதவும்.
வாஜ்பாய் பிரதமாக இருந்தபோது அவர் காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகருக்குச் சென்று அங்கு அமைதியை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார். தற்போதைய பிரதமர் மோடியும், வாஜ்பாய் வழியைப் பின்பற்றி காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
காஷ்மீர் மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த ஜனநாயக விரோத வன்முறைத் தாக்குதல்களை மத்தியஅரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். ராணுவத் துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.
படையினருக்கு வரைமுறையற்ற அதிகாரத்தை வழங்கும் ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தை (AFSA) உடனடியாக ரத்து செய்ய வேண்டும். காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட அரசியல் அமைப்புச் சட்டத்திற்குட்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்'' என திருமாவளவன் கூறியுள்ளார்.
காஷ்மீரில் வன்முறைத் தாக்குதலைக் மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்: திருமாவளவன் காஷ்மீரில் வன்முறைத் தாக்குதலைக் மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்: திருமாவளவன் Reviewed by நமதூர் செய்திகள் on 21:07:00 Rating: 5

No comments:

Powered by Blogger.