பெருமாள் முருகனின் மாதொருபாகன் வழக்கு;கருத்துரிமைக்காகக் கரம் உயர்த்துவோருக்கு நம்பிக்கை தரும் தீர்ப்பு!

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்காகப் போராடுவோருக்கு ஒரு முக்கிய வெற்றியாக, எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவலுக்குத் தடை விதிக்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 5) அளித்துள்ள தீர்ப்பைப் பார்க்கிறேன், வரவேற்கிறேன்.
எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானதுதான் எழுத்தாளர்களின் சமூகப் பொறுப்பும். கருத்துரிமை, சமூகப்பொறுப்பு இரண்டிற்கும் சம முக்கியத்துவம் அளிக்கிற இயக்கம்தான் எமது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். ஒரு ஊரைப்பற்றி, அதன் வாழ்க்கை நிலைமைகள் பற்றி, சமூகச் சூழல்கள் பற்றி, வரலாற்றுத் தடங்கள் பற்றியெல்லாம் ஒரு இலக்கியப் படைப்பில் பதிவாவது அந்த ஊரின் வளர்ச்சிக்கும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் உதவக்கூடியதே.
அதே வேளையில், ஒரு படைப்பாக்கத்தில் உண்மையைத் திரித்தோ, உள்நோக்கத்துடனோ எழுதப்பட்டிருப்பதாக ஒரு தனி மனிதர் அல்லது ஒரு அமைப்பு கருதும் நிலையில், அதற்கு எழுத்தாகவே எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும், கருத்தியல் தளத்திலேயே கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும், பொது விவாதங்களை நடத்த வேண்டும். அதை விடுத்து எழுத்தாளரையும் அவரது குடும்பத்தாரையும் மிரட்டுவதை, அச்சுறுத்துவதை, வன்முறைகளில் ஈடுபடுவதை ஏற்பதற்கில்லை.
பெருமாள் முருகனுக்கு அப்படிப்பட்ட அச்சுறுத்தல்களும் நெருக்கடிகளும் தரப்பட்டன. அரசமைப்பு சாசனப்படி கருத்துரிமையைப் பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு, இந்தப் பிரச்சனையில் எழுத்தாளருக்கு நெருக்கடி ஏற்படுத்தியவர்களுக்கு சாதகமாக நடந்துகொண்டதுதான் வேதனைக்குரியது, நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை, ஒரு கட்டப்பஞ்சாயத்து என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு எதிர்புத்தெரிவித்த மதவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் அதில் கலந்துகொள்ள, பெருமாள் முருகன் தரப்பில் அவர் மட்டுமே பங்கேற்றார். இறுதியில் அங்கே அளிக்கப்பட்ட நிர்ப்பந்தத்தின் காரணமாகத்தான் அவர் தனது புத்தகத்தில் சில பகுதிகளை நீக்க ஒப்புக்கொண்டார்.
பின்னர் இரண்டு நாட்களில், எழுதுவதையே நிறுத்திக்கொள்வதாக அறிவித்தார். ‘பெருமாள் முருகன் செத்துவிட்டான்’ என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்தார். ஒரு எழுத்தாளர் தனது எழுத்தை நிறுத்திக்கொள்வதென்பது அவர் கொலை செய்யப்படுவது போன்றதுதான்.
இப்போது, ‘மாதொருபாகன்’ நாவலுக்குத் தடை விதிக்க முடியாது, எழுத்தாளர் மீது குற்றவியல் வழக்குத் தொடர ஆணையிட முடியாது என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா நாராயணா ஆகியோர் கொண்ட அமர்வுக்குழு தீர்ப்பளித்துள்ளது. எதிர்காலத்தில் இத்தகைய பிரச்சனைகள் வருமானால், அதை மாவட்ட அதிகாரிகளிடம் விடுவதற்கு மாறாக, மாநில அளவிலான அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு அதன் வழிகாட்டலுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதிகாரிகளிடம் விடுவதை விட ஒப்பீட்டளவில் இது நல்லதுதான் என்றாலும், அந்தக் குழுவே ஒரு அதிகார அமைப்பாகிவிடுமா, அதில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பதெல்லாம் ஜனநாயக அமைப்புகளின் விவாதத்திற்கு உரியது என்றும் கருதுகிறேன்.
இந்த வழக்கில், ஆட்சியர் அலுவலக பேச்சுவார்த்தை நிர்ப்பந்த முடிவுகளை எதிர்த்துவழக்குத் தொடுத்தது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளார் கலைஞர்கள் சங்கம் சார்பில் அதன் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன். சங்கத்தின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் ச.செந்தில்நாதன் பாராட்டுக்குரியவர். பெருமாள் முருகனின் சார்பில் வாதாடிய பியுசிஎல் அமைப்பின் வழக்குரைஞர் சுரேஷ், கருத்துச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்த கலை இலக்கிய அமைப்புகள், அரசியல் இயக்கங்களைச் சார்ந்தோரையும் வாழ்த்துகிறேன். சமூக அக்கறையோடு பேனாவை எடுககும் படைப்பாளிகளும், கருத்துரிமைக்காகக் கரம் உயர்த்துவோரும் தொடர்ந்து நம்பிக்கையோடும் ஊக்கத்துடனும் இயங்கிட இந்தத் தீர்ப்பு துணையாக வரும் என்று கருதுகிறேன்.
– சன் தொலைக்காட்சியிலிருந்து ‘மாதொருபாகன்’ தீர்ப்பு பற்றி கருத்துக் கேட்டபோது  நான் பகிர்ந்துகொண்ட சிந்தனைகள் இவை.
அ. குமரேசன், பத்திரிகையாளர். இவருடைய தமிழாக்கத்தில் வெளியான நூல் நந்தனின் பிள்ளைகள்; பறையர் வரலாறு. 
பெருமாள் முருகனின் மாதொருபாகன் வழக்கு;கருத்துரிமைக்காகக் கரம் உயர்த்துவோருக்கு நம்பிக்கை தரும் தீர்ப்பு! பெருமாள் முருகனின் மாதொருபாகன் வழக்கு;கருத்துரிமைக்காகக் கரம் உயர்த்துவோருக்கு நம்பிக்கை தரும் தீர்ப்பு! Reviewed by நமதூர் செய்திகள் on 23:42:00 Rating: 5

No comments:

Powered by Blogger.