நான் படித்த புத்தகம். - வி.களத்தூர் எம்.பாரூக்



நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான வரலாற்றினை அறிந்துகொள்ளும் மகிழ்ச்சி ஏற்பட்டது. தோழர் தா.பாண்டியன் அவர்களின் கை வண்ணத்தில் வந்த "ஜீவாவும், நானும்" என்ற நூல்தான் அது. சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த புத்தகம்தான். நூலகத்தில் பார்த்தவுடன் எடுத்துவிட்டேன். பல வேலைகளுக்கு நடுவே சில பக்கங்களை படித்து விடலாம் என்று எண்ணி புரட்ட துவங்கினேன். உட்கார்ந்த இடத்திலிருந்து நகர விடவில்லை அந்த புத்தகம். இரண்டு நாட்களிலேயே முழுவதும் முடித்துவிட்டேன் பல வேலைகளுக்கு மத்தியிலும். அந்த அளவிற்கு என்னை ஈர்த்துக்கொண்டது. 

ஆரம்பத்தில் ஜீவாவைப் பற்றிய வரலாறு என்பதாகத்தான் நினைத்தேன். ஆனால் அது ஒட்டுமொத்த அரசியல் வரலாற்றை போதித்துவிட்டது. ஒரு விஷயத்தை குறிப்பிட வேண்டும். ஏற்கனவே தோழர் ஜீவாவைப்பற்றி, திமுகவை பற்றி, இடதுசாரிகளை பற்றி, ஆரம்பகால அரசியலை பற்றி, காங்கிரஸ் பற்றி ஒரு சில புத்தகங்கள் படித்திருக்கிறேன். 

ஆனால் இவையெல்லாவற்றையும் ஒருங்கே தந்திருப்பதில், ஆரம்பகால அரசியல் வரலாற்றை அறிமுகப்படுத்திருப்பதில் தோழர் தா.பாண்டியன் மனதை வென்று விடுகிறார். ஜீவாவின் வரலாறு என்றுகூட சொல்லமுடியவில்லை. ஜீவாவின் இறுதிக்கால செயல்பாடுகளும், தனது தோழர்களுடன் வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட செய்திகளும் நிறைந்து இருக்கின்றன. தேச விடுதலை போராட்டத்தில் துவங்கி, சமதர்ம பிரசாரம் என வந்து பொதுவுடைமை என்ற மகா கடலில் கலந்த நதிதான் தோழர் ஜீவா.

"தோல்வி கண்டு மலைக்காதே. இலட்சியத்தில் நம்பிக்கையுள்ள வரை விடாது முயற்சி செய்" என்ற சொல்லோடு நிறுத்தாமல் கடைசி வரை அதில் உறுதியாக நின்றவர் ஜீவா. அதனால் அவர் பட்ட துன்பங்களும், சோதனைகளும் கொஞ்சநஞ்சமல்ல. அதற்கெல்லாம் கலங்காமல், முடங்கி கிடைக்காமல் தனது இலட்சிய பாதையில் உறுதியுடன் செயலாற்றியவர் ஜீவா. எதற்கும் கலங்காத ஜீவாவையே கலங்க வைத்த சம்பவமும், வேதனை பட வைத்த நிகழ்வுகளும் அரங்கேறி இருக்கின்றன. அதையும் சிறப்பாக பதிவு செய்கிறது இந்நூல். இடதுசாரிகளின் ஒற்றுமை குறித்து பல இடங்களில் மிகவும் வலியுறுத்தியுள்ளார்.

"உலகமே கம்யூனிஸ்ட்களின் ஒற்றுமை, கட்டுப்பாடு பற்றிப் புகழ்ந்து பேசி வந்தது. நமது ஒற்றுமைதான் நமது வலிமையாகவும் இருந்தது. இப்பொழுது அது உடைகிறது என்றால் வேதனையாக இருக்கிறது".

"நான் கம்யூனிஸ்ட் கட்சியை மேடைகளிலும், எழுத்திலும் கரும்பாறையில் எக்கை வார்த்துக்கட்டிய உருக்குக்கோட்டை என வருணித்து வந்தேன். பேசும்போது கம்பீரமாக இருந்தது. இப்பொழுது கட்சி பிளவுபட்டது ஏன் என பேச நினைக்கிறபோது நெஞ்சம் பதறுகிறது. எனவே நீங்களும் தோழர்களை வெளியேற விடாமல் அரவணைத்து பாருங்கள்". என்று தோழர்களுக்கு வேண்டுகோளாகவும் வைத்தார்.

அவர் இருக்கும் வரையில் இடதுசாரிகள் இரண்டாக பிரியவில்லை. ஆனால் அதற்கான முஸ்தீபுகள் அப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டன. ஒருவரை ஒருவர் குறை கண்டுகொண்டிருந்தனர். அது அவரை வெகுவாக பாதித்தது. அது மீளமுடியாத பாதிப்பாக அமைந்துவிட்டது.

ஒரு மாபெரும் இயக்கத்தின் வளர்ச்சியை மட்டும் சொல்லிவிட்டு செல்லாமல் அது சறுக்கிய காரணங்களையும் அலசுகிறது இந்நூல். இதில்தான் தோழர் தா.பாண்டியன் நம்மை கவர்ந்து விடுகிறார். 1952 ல் மத்தியிலும், மாநிலத்திலும் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக இருந்த இடதுசாரிகள் ஏன் இப்படி தேய்ந்து போனார்கள். எப்படி தனது கடமையில் இருந்து விலகினார்கள் என அனைத்தையும் படம் பிடிக்கிறார். 

நமது தேசம் இன்று சென்றுகொண்டிருக்கும் பாதையில் இந்துத்துவம் வளர்ந்து வருகிற நேரத்தில் இடதுசாரிகள் வலுப்பெற வேண்டியது அவசியமாகும். அதற்கு அதன் நிறை-குறைகளை அலசுவதும் அவசியமாகிறது. அதை நோக்கிய பயணத்திற்கு இந்த புத்தகம் நமக்கு உதவும்.

'கம்யூனிஸ்ட்கள் தங்கள் கடமையை செய்ய தவறுகிறபோது வழங்கப்படும் தண்டனைதான் பாசிசம்' என்கிறார் ரோசா லக்ஸம்பர்க். எவ்வளவு உண்மையான வரிகள். 

- வி.களத்தூர் எம்.பாரூக்
நான் படித்த புத்தகம். - வி.களத்தூர் எம்.பாரூக் நான் படித்த புத்தகம். - வி.களத்தூர் எம்.பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 03:37:00 Rating: 5

No comments:

Powered by Blogger.