சமஸ்கிருதம் நன்மையா? திணிப்பா? - சே.த.இளங்கோவன்

1938இல் அப்போதைய சென்னை மாநில பிரதம அமைச்சராக இருந்த ராஜாஜி, லயோலா கல்லூரியில் “சமஸ்கிருதத்தைப் படிப்படியாக புகுத்தவே இப்பொழுது இந்தியைப் புகுத்துகிறேன்" என்றார். 2016இல் ஏறக்குறைய அந்த நோக்கத்தை நிறைவேற்றத் தொடங்கியுள்ளது மத்திய பாஜக அரசு.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி. கல்வி மையங்களுக்கு அனுப்பிய உத்தரவில், 'வேதங்களில் கூறப்பட்டுள்ள அறிவியலை, மாணவர்கள் படித்து தெரிந்துகொள்ளும்வகையில் சமஸ்கிருத மொழியைப் பயிற்றுவிக்க, தனிப்பிரிவு தொடங்கப்பட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியா முழுவதும் மத்திய அரசின்கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. போன்ற கல்விக் கூடங்களில் வரும் கல்வியாண்டு முதல் சமஸ்கிருதம் மூன்றாம் மொழிப் பாடமாகக் கற்பிக்கப்படும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. பாஜக ஆட்சிக்கு வந்தவுடனே சமஸ்கிருதமயமாக்கும் முயற்சிகளைத் தொடங்கிவிட்டது.
1. 2014ஆம் ஆண்டு சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக பல்கலைக்கழகங்களுக்கு ரூ.70 கோடி ஒதுக்கீடு.
2. ஐ.நா-வின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தியை அறிவித்தால் அதற்காகச் செலவாகும் சுமார் ரூ.270 கோடியை இந்திய அரசு ஏற்கத் தயாராக இருப்பதாகவும் இதில் செலவு ஒரு பொருட்டே அல்ல என்றும் சுஷ்மா அறிவித்தார்.
3. 23.7.2015 சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரகம் ரூ. 320 கோடி ஒதுக்கியது.
4. 2015ஆம் ஆண்டு, ஜூலை மாதம் பாங்காக்கில் நடைபெற்ற சமஸ்கிருத மாநாட்டுக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
5. 2016ஆம் ஆண்டு ரூ.70 கோடி ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தான் என்ற சமஸ்கிருத மொழி வளர்ச்சித்துறைக்கு, புதிய ஆய்வு மாணவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய ஒதுக்கியுள்ளது.
இப்படி முழுக்க முழுக்க சமஸ்கிருதத்துக்கான பாதையை அகலத் திறந்தது மத்திய அரசு. இதற்கு நாடு முழுக்கவே கடும் எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கின.
‘ஆர்எஸ்எஸ்-ஸின் கொள்கையைத் திணிக்கும்வகையில், மத்திய அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது’ என்கிறார் டில்லி மாநில துணைமுதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. டி.ராஜா கூறுகையில், ''சமஸ்கிருதம் மட்டும் ஏன்? தமிழ் மொழியை ஏன் பயன்படுத்தக்கூடாது? ஆர்எஸ்எஸ் கொள்கைப்படி, சமஸ்கிருதத்தைத் திணிக்க மத்திய அரசு முயல்கிறது'' என்றார்.
காங்., மூத்த தலைவர் பிரமோத் திவாரி, ''ஐஐடி இன்ஜினியருக்கு அவர் தொழிலில் சமஸ்கிருதம் அவசியமாக இருக்காது. இதுபோன்ற விஷயத்தைத் திணிப்பது சரியல்ல'' என்றார். வர்ணாஸ்ரம எதிர்ப்பு, இந்தித் திணிப்புக்கு எதிராக போராட்ட வரலாறு கொண்ட தமிழகத்தில் சமஸ்கிருத ஆதிக்கம், திணிப்புக்கு எதிராகக் கடும் போராட்டங்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளன. தற்போது, அனைத்துக் கட்சிக்கும் அழைப்புவிடுத்து மாநாடு நடத்த திட்டமிட்டுவரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறும்போது,
"மதச் சண்டைகளும் சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்கிப் பெருகுவதற்கு ஒரு பெருங்கருவியாக இருந்ததும், இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும். சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்துபோகுமானால் இப்போராட்டங்களும் தொலைந்துபோகும்" என்று விவேகானந்தர் கூறியுள்ளதைக் கவனிக்க வேண்டும். வாஜ்பேயி ஆட்சிக் காலத்திலேயே இந்தத் திணிப்பு ஆரம்பமாகிவிட்டது.
தமிழன் கட்டிய கோயில்களுக்குள் இன்றும் சமஸ்கிருதத்தில்தான் வழிபாடு. கரூர் அருகில் உள்ள திருமலை முத்தீசுவரர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டதால் (9.9.2002) கோயிலை மூன்று நாள் இழுத்து மூடி, தோஷம் கழித்தனர் என்பது எதைக் காட்டுகிறது?
பூஜைவேளையில், இன்றைக்குக்கூட சங்கராச்சாரியார் தமிழில் பேசமாட்டார். காரணம், தமிழ் ‘நீசப் பாஷையாம்!’ அப்படிப் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டால் 'ஸ்நானம்' செய்துவிட்டு சமஸ்கிருதத்தில்தான் பேசுவார். (ஆதாரம்: ஆட்சி மொழிக் காவலர் கீ.இராமலிங்கனார் பேட்டி)
கோயிலில் தமிழில் வழிபாடுபற்றி திமுக ஆட்சியில் ஆணை பிறப்பித்தபோது, உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுத்தார்கள். இந்து ராஜ்ஜியம் அமைக்க முன்னோடி!
இந்து ராஜ்ஜியத்தை அமைப்போம் என்று ஆட்சி நடத்துபவர்களுக்கு சமஸ்கிருதத் திணிப்பு என்பது அவசியமாகிறது. மீண்டும் ஆரியம் நம்மை அடிமைப்படுத்த தயாராகிவிட்டது. கட்சிப் போராட்டமல்ல - இனவுணர்வுப் போராட்டம்! கனலாக முழங்குகிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினரும் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை போராட்டத்தில் பங்கேற்ற பேராசிரியர் சிவகுமார், “1960களில் இந்தியை திணிக்க முயன்றபோது பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்த்துப் போராடி, இந்தித் திணிப்பை முறியடித்தனர்” என்றார்.
பேராசிரியர் சாந்தி, ‘சமஸ்கிருதம் ஆண்டாண்டுகாலமாக பெண்களை இழிவுபடுத்துவதாகத்தான் உள்ளது. பெண்கள் என்றால் வெளியே வரக்கூடாது, ஆண்களுக்கு அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும், படிக்கக் கூடாது, வெளியுலக அறிவைப் பெறக்கூடாது என்றுதான் இந்த சமஸ்கிருதப் பண்பாடு கூறுகிறது. புதிய கல்விக்கொள்கை சொல்ல வருவது, பெண்கள் இனி வீட்டுக்குள் இருந்து வீடியோமூலமும் டி.டி.எச். மூலமும் படித்துக் கொள்ளலாம் என்று சொல்கிறது. இதன் அர்த்தம் பெண்கள் வெளியே வரக் கூடாது, வெளியுலகப் பிரச்னைகள்பற்றி தெரிந்து கொள்ளக்கூடாது என்று பெண்களை மீண்டும் பிற்போக்கு அடிமைத்தனத்துக்குள் தள்ளுவதையே நோக்கமாக வைத்துள்ளது. மோடி அரசின் இந்த கயமைத்தனத்தை மாணவர்கள், இளைஞர்கள் எதிர்த்து முறியடிக்க வேண்டும்” என்கிறார் உணர்ச்சிபொங்க.
சமஸ்கிருத திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் குறித்து பாஜக-வின் தேசிய செயலாளர் எச்.ராஜாவிடம் கேட்டோம்.
‘சமஸ்கிருதம் ஏற்கனவே சென்ட்ரல் பள்ளிகளில் உண்டு. இது புதுசு இல்லை. விருப்பப் பாடமாக சமஸ்கிருதம், ஹிந்தி, பிரெஞ்சு, ஜெர்மன் இதெல்லாம் இருக்கு. பிரெஞ்சு, ஜெர்மனுக்கு எதிர்ப்புக் காட்டாத இந்த திராவிட அமைப்புகள், சமஸ்கிருதத்துக்கு எதற்கு எதிர்ப்புக் காட்டணும்? ‘வெள்ளையன் வெளியேறிவிட்டால் விஞ்ஞானம் வளராது’ என 1942இல் தீர்மானம் போட்டவர் ஈ.வே.ரா. அதை முன்மொழிந்தவர் அண்ணா. அப்படிப்பட்ட தேசத் துரோகிகளான அவர்கள், அந்நிய மொழிக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இந்திய மொழிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். வீரமணி போன்ற ஈவேரா பக்தர் முதலில் ஏன் பிரெஞ்சு, ஜெர்மனிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை? சிறுத்தைகளின் புள்ளிகளை அழிக்க முடியாது திக, திமுக தேசத் துரோகத்தை நாம் மாற்ற முடியாது’ காட்டமாகப் பேசியவர் தொடர்ந்து, இது திணிப்பே இல்லை. விரும்பினால் படிக்கலாம் என்று சொல்வது எப்படி திணிப்பு ஆகும். பிடித்தவர்கள் படிப்பதைத் தடுக்க நீங்கள் யார்?
சமஸ்கிருதத்தில் பல்வேறுவிதமான விஞ்ஞானக் குறிப்புகள் இருக்கின்றன. அது ஆயுர்வேதமாக இருக்கட்டும், வானியல் விஞ்ஞானமாக இருக்கட்டும். அனைத்தும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. ஆர்யபட்டா, பாஸ்கராவிலிருந்து பல்வேறு விஞ்ஞானிகள் சமஸ்கிருதத்தில் இருந்து குறிப்புகள் எடுத்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அதனால்தான் ஜெர்மனியில்கூட பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் உள்ளது. சீனாவில் சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் உள்ள நம் முன்னோர்கள் ஒரு குறிப்பிட்ட மொழியில் பல விஞ்ஞான கருத்துகளை எழுதியுள்ளனர். இதுமட்டுமல்ல; அறுவை சிகிச்சைகளே இதுபற்றிய குறிப்புகள் அதர்வண வேதத்தில் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன. இந்த விஷயங்கள் வழிவழியாக நம் சந்ததிக்கு நாம பாதுகாத்து வைக்கணுமா வேண்டாமா? ஓட்டுக்காக சிறிய சமுதாயத்தை எதிர்த்தவர்கள், அதேபோல சூழலை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஸ்டாலின் மருமகன் சபரீசன் நடத்துற பள்ளிக்கூடத்துல தமிழ் ஒரு பாடமாகக்கூட இல்ல. இவர்கள் ஹிந்தி எதிர்ப்பு என்பது தாங்கள் செய்யும் பாதகச் செயலை மறைப்பதற்கான அயோக்கியத்தனம். அவர்கள் எதிர்ப்பு ஆதாரமில்லாதது. இவர்களை மக்கள் நன்கு புரிந்துவைத்திருக்கிறார்கள்’ என்றார்.
இதில் முக்கியமானதற்கு பதிலளிக்கும்விதமாக இருந்தது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் த.கணேசனின் பார்வை.
‘முதலில் சமஸ்கிருதத்தை அழித்ததும் இவர்களேதான். காதால் கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊத்துவது, பேசினால் நாக்கை அறுப்பது, வேதத்தைக் கண்ணால் பார்த்தால் கண்களைக் குருடாக்குவது என்று கொடூரமான முறையில் சமஸ்கிருதத்தை அழித்தனர். இன்று, வெறும் 15000 பேர்கூட பேசாத, வழக்கில் இல்லாத செத்த மொழியை தூக்கிவைக்கக் காரணம், அவர்களுடைய சாதியப் பண்பாட்டை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதே’’ என்றவர் தொடர்ந்து, ‘‘இன்று இந்தி படித்தால்தான் வேலை, சமஸ்கிருதம் படித்தால்தான் வேலை என்று கூறுகின்றனர். ஆனால், வட மாநிலத் தொழிலாளர்கள் பலபேர் இங்கு வருகின்றனர். அசாம், ஒரிசா, பீகார் இந்த மாநிலங்களில் அவர்களுடைய தாய்மொழியை அழித்து அவர்கள் இந்தி படித்ததன் விளைவு அவர்கள் அகதிகளாக தமிழகத்துக்கு வருகின்றனர். எதார்த்தத்தில் இந்தி படித்தால்தான் வேலை என்பது உண்மை இல்லை’ என்றார் சிந்திக்கும்விதமாக.
‘தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளையும், அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் மத்தியில் ஆட்சிமொழிகளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அலட்சியப்படுத்திவரும் மத்திய அரசு, இந்திக்கும் சமஸ்கிருதத்துக்கும் மட்டும் வரிந்து கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்குவதுதான் சமநீதியா?’ என காட்டமாகக் கேள்வி எழுப்புகிறார் திமுக தலைவர் மு.கருணாநிதி. தொடர்ந்து, ‘அனைத்து மொழிகளுக்கும் சமமான மதிப்பு வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் நாட்டின் கூட்டாட்சி வலுப்பெற்று, அனைவருக்குமான குடியரசு என்பது உறுதிபெறும். மத்திய அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்பட்டுவந்த ஜெர்மன் மொழி அகற்றப்பட்டு, சமஸ்கிருதம் புகுத்தப்பட்டது. சமஸ்கிருத வாரம், இந்தி வாரங்கள் தாராளமாகக் கொண்டாடப்படுகின்றன. வழக்கொழிந்துபோன சமஸ்கிருத மொழியில் சிறப்புச் செய்திகள் வாசிக்க அரசு நிறுவனமான தூர்தர்ஷனில் அரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. இது மொழிவெறி - கலாச்சார வெறியாகும். எல்லாம் ஒழித்துக் கட்டிவிட்டு, நாங்கள் தமிழுக்கு இடம் தரமாட்டோம், வட மொழிக்குத்தான் இடம் தருவோம் என்று சொல்வார்களானால், கையில் தமிழன் ஒவ்வொருவரும் சவுக்கை எடுத்துக்கொண்டு வடமொழி ஆதிக்கத்தை வேரறுக்கக் கிளம்பவேண்டும்’ என்றார்.
மொழி என்பது வெறும் கருவியல்ல. அது ஓர் இனத்தின் அடையாளம். அடையாளம் காக்க அணியமாகியுள்ளனர் தமிழக உணர்வாளர்கள்.
- சே.த.இளங்கோவன்
சமஸ்கிருதம் நன்மையா? திணிப்பா? - சே.த.இளங்கோவன் சமஸ்கிருதம் நன்மையா? திணிப்பா?  - சே.த.இளங்கோவன் Reviewed by நமதூர் செய்திகள் on 22:13:00 Rating: 5

No comments:

Powered by Blogger.