'நேர்மையான அரசியல்வாதியாக வாழ வேண்டுமா?' -மாணவர்களுக்கு வகுப்பெடுத்த தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.

" நேர்மையான அரசியல்வாதியாக வாழ வேண்டும் என்றால் செலவீனங்களைக் குறைத்துக் கொண்டால் போதும். அதனாலேயே திருமண வீடுகளில் நான் மொய் வைப்பதில்லை" என மாணவர்களிடம் நேர்மை அரசியல் வகுப்பெடுத்திருக்கிறார் , மனிதநேய ஜனநாயகக் கட்சி எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி. 

சட்டமன்றத் தேர்தலில், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி,  நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இவருடைய சொந்த ஊர் வேதாரண்யம் அருகில் உள்ள தோப்புத்துறை. இந்நிலையில், நேற்று அவர் படித்த எஸ்.கே.எஸ்.அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்தார். படித்த வகுப்பறைகளை பார்க்கவும் ஆசிரியர்களை  சந்திக்கவும் சென்றவருக்கு, உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர் மாணவர்கள்.

அவர்களிடம் நேர்மை அரசியல் குறித்துப் பேசிய அன்சாரி,  " அரசியல் என்று சொன்னால் தவறானவர்கள் அதிகமாக இருப்பது போல ஒரு தோற்றம் நிலவுகிறது. அரசியல்வாதிகள் என்றாலே தவறானவர்கள் என்ற பார்வையும் மக்கள் மனதில் இருக்கிறது. அய்யா காமராஜர் நல்ல அரசியலுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்தார். நாம் வாழும் காலத்தில் நல்லகண்ணு அய்யா, பழ.நெடுமாறன் போன்ற எளிமையான தலைவர்களும் இருக்கிறார்கள். அவர்களை மாணவர் சமூகம் ஒரு ரோல்மாடலாக எடுத்துக் கொள்ளலாம். அரசியலில் நேர்மையாக இருக்க வேண்டுமென்றால், நம்முடைய செலவீனங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். 

 

உதாரணமாக, நான் திருமண வீடுகளுக்குச் செல்லும்போது மொய் வைப்பதில்லை. மொய்ப் பணம் தர வேண்டும் என்றால் மாதம் ஐம்பதாயிரம் வரையில் செலவாகும். இந்தச் செலவை ஈடுகட்ட தவறு செய்யத் தோன்றும். மரண வீடுகளுக்குச் செல்லும்போது மாலை வாங்கிக் கொண்டு போவதில்லை. அப்படித்தான் என்னுடைய அரசியல் வாழ்க்கையைக் கட்டமைத்திருக்கிறேன். ஐந்தாண்டுகள் மக்கள் கொடுத்த வாய்ப்பில் கெட்ட பெயரை சம்பாதிக்காமல், நல்ல பெயரை வாங்க வேண்டும் என விரும்புகிறேன்.

மக்களோடு நேரடித் தொடர்பிலும், மக்களின் நேரடி கண்காணிப்பிலும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மக்கள் நம்முடைய நேர்மையான நடவடிக்கைகளைப் புரிந்து கொள்வார்கள். மக்கள் நம்மைக் கண்காணிக்கிறார்கள் என்ற அச்சத்துடன், தவறு செய்யாமல் செயல்பட முடியும். தன்னலமற்ற தொண்டுக்கு உதாரணமாக அன்னை தெரசாவையும் அறவழி போராட்டத்திற்கு உதாரணமாக காந்தியையும், தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ள அப்துல் கலாமையும் மனதில் கொண்டு மாணவர் சமூகம் முன்னேற வேண்டும்" என தீர்க்கமாக கூறினார். 

தன்னுடைய முகநூல் பக்கத்தில் இதுபற்றி விவரித்துள்ள தமிமுன் அன்சாரி, ' வகுப்பறை மேஜைகளே நலம்தானா ? வழிநடத்திய கரும்பலகைகளே நலம்தானா? திக்கெட்டும் சிதறி கிடக்கும் நண்பர்களே நலம்தானா? கபடமற்ற அந்த இனிய நாட்கள் மீண்டும் வராதா?' என உருக்கமாக வர்ணித்திருக்கிறார். 

-ஆ.விஜயானந்த்
'நேர்மையான அரசியல்வாதியாக வாழ வேண்டுமா?' -மாணவர்களுக்கு வகுப்பெடுத்த தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. 'நேர்மையான அரசியல்வாதியாக வாழ வேண்டுமா?' -மாணவர்களுக்கு வகுப்பெடுத்த தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. Reviewed by நமதூர் செய்திகள் on 22:26:00 Rating: 5

No comments:

Powered by Blogger.