கீழடி அகழ்வாய்வு : நாம் செய்யவேண்டியது என்ன? ரவிக்குமார்


மதுரைக்கு அருகில் கீழடி என்ற கிராமத்தில் இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் நடைபெற்றுவந்த அகழ்வாய்வுப் பணிகள் தொடர்பாக சர்ச்சை ஒன்று தற்போது கிளப்பப்பட்டுள்ளது. அங்கு அடுத்தகட்ட ஆய்வுப் பணிகள் தொடராமல் போனதன் பின்னணியில் மிகப்பெரிய ’சதி’ இருப்பதாக சிலரால் குற்றம் சாட்டப்படுகிறது. இந்தியத் தொல்லியல் துறை வட இந்திய சார்போடு செயல்படுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மைதான். தொல்லியல்துறை மட்டுமல்ல இந்திய வரலாறு எழுதப்படுவதிலும்கூட இந்த வட இந்திய சார்பு இருக்கவே செய்கிறது. அதில் இடதுசாரி வரலாற்று அறிஞர்களும்கூட விதிவிலக்கல்ல.
கீழடிக்கு 2016 ஜூன் மாதம் 30 ஆம் தேதி நான் நேரில் சென்று அங்கு அகழ்வாய்வு நடக்கும் இடங்களைப் பார்த்தேன். அடர்ந்த தென்னந்தோப்புக்கு இடையில் பள்ளிச்சந்தைத் திடல் என அழைக்கப்படும் இடத்தில் அகழ்வாய்வு நடந்துகொண்டிருந்தது. அங்கிருந்த தொல்லியல் துறையினரிடமும் பேசினேன். அங்கு கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் அதுவொரு சங்ககால நகரப்பகுதி என்பதை உறுதிசெய்வதாக அவர்கள் கூறினர். அங்கு கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகள்,கார்னீலியன் மணிகள்,செங்கல் சுவர்கள்,சுடுமண் குழாய்கள்,சுடுமண்ணாலான மனித உருவங்கள் முதலான பொருட்களின் காலம் இன்னும் ’கார்பன் டேட்டிங்’ முறையில் உறுதிசெய்யப்படவில்லையெனினும் அவை கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என அவர்கள் குறிப்பிட்டனர்.
கீழடியில் கிடைத்த பானை ஓடுகளில் எய்யன்,உதிரன்,ஆதன் ஆகிய பெயர்கள் தமிழ் பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு ஓட்டில் திஸ்ஸா என்ற பிராகிருத பெயர் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது.அந்த ஊர் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் வந்து செல்கிற வாணிபத் தலமாகவும் இருந்திருக்கலாமென அவர்கள் கூறினர்.
கீழடி அகழ்வாய்வு இப்போது தடைபட்டிருப்பதற்கு இந்தியத் தொல்லியல் துறையின் வட இந்தியச் சார்பைவிட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே முதன்மையான காரணம் எனக் கூறலாம். அது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதனால் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை தொல்லியல் துறையின் பரிசோதனைக் கூடங்களுக்குக் கொண்டுசெல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
கீழடி அகழாய்வுக்கான அனுமதியும் தொகையும் முதல் கட்டமாக இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டன. அந்த காலவரையறை முடிந்துவிட்டது. ஒரு இடத்தில் அகழாய்வு நடத்தப்பட்டால் அந்தப் பணிகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் அடுத்த சீசனுக்கான அனுமதியும் நிதி ஒதுக்கீடும் கிடைக்கும். அதை இறுதி செய்வதற்கான கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நடக்கும்.
இப்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை ஏ.எஸ்.ஐயின் சென்னை சர்க்கிள் அலுவலகத்தில் வைக்குமாறு நீதிமன்றம் சொல்லிவிட்டது. இந்த அகழ்வாய்வுப் பணிகளுக்குப் பொறுப்பான திரு ராமகிருஷ்ணா பெங்களூர் சர்க்கிளைச் சேர்ந்தவர். அவர் சென்னைக்கு வர ஒவ்வொருமுறையும் அனுமதிபெறவேண்டும். இப்படியான நடைமுறைப் பிரச்சனைகளே அறிக்கை தயாரிப்பு தாமதமாவதற்குக் காரணம்.
கீழடி சர்ச்சை குறித்து பேராசிரியர் கே.ராஜன் அவர்களிடம் தொடர்புகொண்டு கேட்டேன். அவர் ஏ.எஸ்.ஐ யின் டைரக்டர் ஜெனரல் திரு ராக்கேஷ் திவரியிடம் பேசிவிட்டு அந்தத் தகவல்களை என்னிடம் இன்று ( 08.01.2017) பகிர்ந்துகொண்டார். ‘ கீழடியில் அடுத்தகட்ட பணிகளுக்கான அனுமதியை வழங்கவும் அதற்கான நிதியை ஒதுக்கவும் அக்டோபர்வரை காத்திருக்கவேண்டாம். எனது அதிகாரத்தின் அடிப்படையிலேயே அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன். முதல் கட்ட பணிகள் தொடர்பான இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தாலேகூட போதும்” என டைரக்டர் ஜெனரல் கூறியதாக பேராசிரியர் கே.ராஜன் சொன்னார்.
கீழடி அகழ்வாய்வு தொடர்பாக சர்ச்சையை உருவாக்குவதைவிட நாம் செய்ய வேண்டிய முக்கியமான சில பணிகள் இருக்கின்றன :
1. தொல்பொருட்களின் காலத்தை கண்டறியும் AMS Carbon dating செய்யக்கூடிய பரிசோதனைக் கூடம் தற்போது இந்திய அளவில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் இருக்கிறது. அங்கு ஒரு சாம்பிளை அனுப்பி முடிவுகளைப் பெற சுமார் ஐந்து ஆண்டுகள் ஆகும். அந்த அளவுக்கு அங்கே வரிசையில் காத்திருக்கவேண்டிய நிலை. தமிழ்நாட்டில் அதுபோன்றதொரு பரிசோதனைக் கூடத்தை அமைக்க சுமார் 40 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அப்படியொரு சோதனைக் கூடத்தை அமைக்குமாறு தமிழக அரசை நாம் வலியுறுத்தவேண்டும்
2. ஏற்கனவே அகழாய்வு செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர், பொருந்தல், கொடுமணல் ஆகிய இடங்களில்கிடைத்த பொருட்களின் குறைந்தது பத்து சாம்பிள்களையாவது AMS carbon dating செய்து வாங்கவேண்டும். இந்த சாம்பிள்களை அமெரிக்காவிலிருக்கும் சோதனை கூடத்துக்கு அனுப்பினால் ஒரு மாதத்துக்குள்ளாகவே முடிவுகள் வந்துவிடும். அதற்கான நிதி உதவியைச் செய்யுமாறு தமிழக அரசை வலியுறுத்தவேண்டும்.
3. ஆதிச்சநல்லூரில் மனித எலும்புகள் , நெல்லின் உமி ஆகியவை கிடைத்துள்ளன. அவற்றை ஏ.எம்.எஸ் கார்பன் டேட்டிங் முறையில் ஆய்வுசெய்தால் தமிழரின் தொன்மை கிமு 1000 க்குமுன்னால் செல்லும் எனத் தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். அந்த அகழாய்வைத் தலைமையேற்று நடத்திய திரு சத்தியமூர்த்தி அவர்கள் அதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டார். இந்தியத் தொல்லியல் துறையும் அதைச் செய்யாமல் அலட்சியம் காட்டிவருகிறது. எனவே பாராளுமன்றத்தில் இது தொடர்பாக கேள்வி எழுப்புமாறு தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் நாம் கேட்கவேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திரு டி.ராஜா அவர்களிடம் இந்த கோரிக்கையை நான் முன்வைத்துள்ளேன்.
4. கீழடியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொண்டிருக்கும் இந்தியத் தொல்லியல் துறை, வைகை ஆற்றுச் சமவெளியில் அகழ்வாய்வு செய்வதற்கான முதல்கட்ட ஆய்வை மேற்கொண்டு 293 இடங்களைத் தேர்வுசெய்து வைத்துள்ளது. அவற்றுள் மூன்று முக்கியமான இடங்கள் அடையாளம் காணப்பட்டன. கீழடி,மாறநாடு,சித்தர்நத்தம் என்ற அந்த மூன்று ஊர்களுக்குள் முதலில் கீழடியில் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மீதமுள்ள இடங்களிலும் அகழ்வாய்வுப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென ஏ.எஸ்.ஐ டைரக்டர் ஜெனரல் அவர்களை நாம் வலியுறுத்தவேண்டும்
நகரமயமாதலும்,விவசாயப் பயன்பாடும் வைகை ஆற்று சமவெளிப் பகுதியில் முன்னர் அடையாளம் காணப்பட்ட உத்தமபுரம்,தொம்பிச்சேரி முதலான சங்ககால இடங்களைக் காணாமலடித்துவிட்டன. கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியிலும் பல இடங்கள் இப்போது இல்லாமல் போய்விட்டன.இந்தச் சூழலில் கீழடி போன்ற இடங்களிலும் தொடர்ந்து அகழ்வாய்வு செய்யமுடியாதுபோனால் அது தமிழக வரலாற்றுக்குத்தான் நட்டம்.
கீழடி மட்டுமின்றி தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி அமைக்கக்கூடிய பல முக்கியமான கண்டுபிடிப்புகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் பலவற்றில் வெளிப்பட்டுள்ளன. பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இருக்கும் முனைவர் கா.ராஜன் மேற்கொண்டுவரும் கொடுமணல் , பொருந்தல் அகழ்வாய்வுகள் மிகவும் முக்கியமானவை. அந்த அகழ்வாய்வுகளில் அவர் கண்டெடுத்திருக்கும் பிராமி எழுத்துப் பொறிப்புகள் அசோகன் பிராமியைவிட காலத்தால் முந்தியவை. அவற்றைப் பற்றி 2013 ஆம் ஆண்டு தொல்லியல் அறிஞரும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவருமான திலிப் சக்கரவர்த்தி அவர்களிடம் நான் பேட்டி எடுத்தபோது கேட்டேன். அதற்கு அவர்:
“பேராசிரியர் ராஜன் மேற்கொண்டிருக்கும் பொருந்தல், கொடுமணல் அகழ்வாய்வுகள் மிகவும் முக்கியமானவை. அவர் தனது அகழ்வாய்வில் கண்டெடுத்தவற்றை என்னிடம் காட்டினார். அவர் காட்டிய எழுத்துப் பொறிப்புகளில் எந்தப் பிரச்சனையுமில்லை. அவை குறைந்த எழுத்தறிவு கொண்ட மக்களால் பொறிக்கப்பட்டவையல்ல. அக்காலத்தில் சாதாரண மனிதனும் கல்வி அறிவு பெற்றிருந்ததை அது காட்டுகிறது. அப்படியான எழுத்துப் பொறிப்பைச் செய்யவேண்டுமென்றால் அதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அங்கு மொழி வளர்ச்சியடைந்த நிலையில் இருந்திருக்கவேண்டும். குறைந்தபட்சம் கி.மு.ஏழாம் நூற்றாண்டிலேயே அங்கு எழுத்தறிவு இருந்திருக்கவேண்டும். அதுமட்டுமின்றி அந்த மக்கள் பன்மொழி அறிவு கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதும் தெரிகிறது.
வட இந்திய வரலாற்றுக்கும் தென்னிந்திய வரலாற்றுக்கும் மிகப்பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை. இதுவரை இந்திய வரலாறு வடக்குப் பகுதியிலிருந்து ஆரம்பித்தது என்றே என்ணப்பட்டு வந்தது. இனி நாம் இந்திய வரலாற்றைத் தென்னிந்தியாவில் தொடங்கி ஆராயவேண்டும்.”
என்று பதிலளித்தார்.
கீழடி அகழ்வாய்வு குறித்து தற்போது கிளப்பப்பட்டுள்ள சர்ச்சை தமிழ்நாட்டின் தொல்லியல் வளங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கச்செய்யும் நோக்கில் முன்னெடுத்துச் செல்லப்பட்டால் நல்லது. இல்லாவிட்டால் வழக்கமான ’விளம்பரம் தேடும்’ அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றாக இதுவும் இழிந்துபோய்விடும்.
கீழடி அகழ்வாய்வு : நாம் செய்யவேண்டியது என்ன? ரவிக்குமார் கீழடி அகழ்வாய்வு : நாம் செய்யவேண்டியது என்ன? ரவிக்குமார் Reviewed by நமதூர் செய்திகள் on 04:05:00 Rating: 5

No comments:

Powered by Blogger.