தமிழகம் முழுவதும் தடியடி!

ஜல்லிக்கட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறுமிடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு தடியடி சம்பவம், கல்வீச்சு நடைபெற்றதால் தமிழகமே போராட்டக்களமாக மாறியுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டம் நடத்திவந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக கவர்னர் அவசர சட்டம் பிறப்பித்தார். அதன்படி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து, ஜல்லிக்கட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறுமிடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் கல்வீச்சு, போலீஸ் தடியடி போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ச்சியடைந்துள்ளது.
கோவை
ஜல்லிக்கட்டுக்கு நீரந்தர தீர்வு காண வலியுறுத்தி கோவையில், கடந்த 8 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் கோவை வ.ஊ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்திய இளைஞர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படிகூறினர். ஆனால் ,அதற்கு மாணவர்கள் உடன்படாதால் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒருவர் போராட்டக்களத்திலேயே தீக்குளிக்க முயன்றார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே போலீசார் நடத்திய தடியடியால் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மயக்கமடைந்தனர். அவர்களை சக போராட்டக்காரர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறிது நேரத்துக்கு முன்னர்வரை போராட்டக்களமாக காட்சியளித்த வ.உ.சி. மைதானம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
வேலூர்
இதேபோல், வேலூர், கிருஷ்ணகிரி, நாகை, சீர்காழியில் போராடியவர்களையும் போலீசார் வெளியேற்றினர்.
காஞ்சிபுரம்
காஞ்சி நகரில் வணிகர் வீதி பகுதியில் நடந்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம்
கும்பகோணத்தில் நடைபெற்று வந்த போராட்டமும் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி
ஆந்திரா - தமிழ்நாடு எல்லைப்பகுதியான திருத்தணியில் போலீசாரின் கோரிக்கையை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.
திண்டுக்கல்
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் திண்டுக்கல்லில் கல்லறை தோட்டம் பகுதியில் மாணவர்கள், இளைஞர்கள், போராட்டம் நடத்தி வந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் போலீசாரின் அடக்குமுறையை கண்டித்து, சாலை மறியல் செய்தனர்.
இதனால் திருச்சி செல்லும் சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியாக திருப்பி விடப்பட்டது. சாமியானா பந்தலில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். ஆனாலும் அங்கு மாணவர்கள் கலைந்து செல்லாமல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோ‌ஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. உடனே போலீசார் மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி 90 பேரை கைது செய்தனர். கைதான இவர்கள் திண்டுக்கல்லில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
போராட்டம் நடந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தல்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அந்த பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகளையும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அகற்றினர். அதோடு திருச்சி சாலை வழியாக அனைத்து பஸ்களும் செல்ல வழிவகை செய்தனர். திடீரென மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளதால் அங்குள்ள இளைஞர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. நேரம் ஆக ஆக பதட்டமான சூழ்நிலை உருவானது. எனவே கல்லறை தோட்டம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி
திருச்சியில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி நீதிமன்றம் அருகே நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மதுரை
மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டத்தை கலைக்க போலீஸார் பல்வேறு விதமான வியூகங்களை வகுந்து வருகின்றனர். போராட்டக்காரர்களை சுற்றி வளைத்த காவல்துறையனர் அங்கே கூடியுள்ள இளைஞர்கள் , மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை முன் வைத்து வருகிறார்கள். இன்று காலை 10. 30 மணி அளவில் போலீஸ் அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, “இங்கே கூடியிருப்பவர்களில் பலர் மாணவர்கள் இல்லை என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே பொதுமக்கள் இந்தப் போராட்டக்களத்தை விட்டு உடனே வெளியேறிவிடுவது நல்லது” என்று எச்சரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து “மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். உங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றிவிட்டது. இயற்றப்பட்டது அவசரச்சட்டம் என்ற போதும் அது நிரந்தரமாக்கப்படும். இந்நிலையில் நீங்கள் தொடர்ந்து போராடுவது தேவையற்றது” என்று மாணவர்களிடம் தொடர்ந்து பேசினார்கள் காவல்துறையினர்.
அப்போது மாணவர்கள், “ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வரும் வரை நாங்கள் போராட்டத்தை தொடர்வோம்” என்று கூறினார்கள். அப்போது காவல்துறையினர், “இங்கே கூடியுள்ளவர்கள் உடனே கலைந்து சென்றுவிடுவது நல்லது. இன்னும் ஐந்து நிமிடங்கள் அவகாசம் கொடுக்கிறோம். அதற்குள் கலைந்து செல்ல வேண்டும். இல்லையேல் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாவீர்கள்” என்று கடும் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அப்போதும் போராட்டக்காரர்கள் மதுரை தமுக்கம் மைதானத்தை விட்டு ஒருவரும் அசையவில்லை. இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்களை நெருங்க அங்கே பெரும் கூச்சல் குழப்பம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மீண்டும் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கைவிடுத்தனர். அதாவது, “இன்னும் அரை மணி நேரம் அவகாசம் தருகிறோம். அதற்குள் போராட்டத்தை கைவிட்டு போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல வேண்டும். இல்லையேல் நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாமல் போய்விடும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் போராட்டக்காரர்கள் தமுக்கம் மைதானத்தில் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதனால் மதுரை தமுக்கம் மைதானத்தில் மிகுந்த பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
தத்தனேரி ரயில் பாலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை துணை கமிஷ்னர் வேல்முருகன் ரயில்வே எஸ்.பி ராணி விஜயா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மாணவர்கள் கூட்டத்தில் பேச்சு வார்தை நடத்தினார்கள்.
தேனி
தேனியில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் களைந்து செல்லும்படி கூறினார். ஆனால், போராட்டக்காரர்கள் செல்ல மறுத்ததால், அங்கு போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.இதனால், அந்தப்பகுதி முழுவதும் போர்க்களம்போல் உள்ளது.
கடலூர்
கடலூரில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக போலீசார் அகற்றி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தடியடி! தமிழகம் முழுவதும் தடியடி! Reviewed by நமதூர் செய்திகள் on 03:00:00 Rating: 5

No comments:

Powered by Blogger.