ஓலைப் பெட்டிகளில் இறைச்சி – அசத்தும் அப்துல் ரசாக்


பிளாஸ்டிக் பைகளை அதிகளவில் பயன்படுத்துவதால், அது மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும், சுற்றுச்சூழலும் பேராபத்தைக் கொடுக்கிறது. குறிப்பாக, பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் வானிலுள்ள ஒசோன் படலத்தில் ஒட்டை ஏற்படுகிறது என்பது கவலை தரும் விஷயம்.
இந்நிலையில்,திருநெல்வேலியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில், இறைச்சிக் கடை நடத்தி வரும் ஒருவர் ஒலைப் பெட்டிகளில் இறைச்சியை விற்பனை செய்து வருகிறார். இவருடைய இந்த அணுகுமுறை அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது.
நெல்லையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பதற்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தும் கடைகளைக் கண்காணித்து, அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். வாரத்தில் ஒரு நாள் ,அதாவது புதன் கிழமை மட்டும் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் குப்பைகள் பெறப்படும். இதை தவிர்த்து மற்ற நாட்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்பது அங்கு நடைமுறையில் உள்ளது.
மேலும், பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பையை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாளையங்கோட்டை எஸ்.பி. அலுவலகம் எதிரே உள்ள இறைச்சி கடை வியாபாரி ஒருவர், பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் வகையில் பனை ஓலைகளால் செய்யப்பட்ட பெட்டிகளில் பொதுமக்களுக்கு கோழி இறைச்சியை விற்பனை செய்து வருகிறார்.
இதுகுறித்து சிக்கன் கடை உரிமையாளர் அப்துல் ரசாக் கூறுகையில், ’’திருநெல்வேலியில் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவு அளித்து வருகிறோம். திருச்செந்தூர் அருகேயுள்ள வெள்ளாறன்விளை பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான ஓலை பெட்டிகளை வாங்கி வந்து, அதில் இறைச்சியை விற்பனை செய்து வருகிறேன். அதுபோன்று, குறைந்தளவு இறைச்சி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலையில் வைத்து கொடுக்கப்படுகிறது. ஓலைப் பெட்டிகளில் இறைச்சி கொடுப்பதால், சுகாதார சீர்கேடு அடையாமல் இருப்பதோடு, அதிலிருந்து மணம் வரும். மேலும், பிளாஸ்டிக் பைகளில் ஒரு மணி நேரம் கெடாமல் இருக்கும் இறைச்சி, ஓலை பெட்டிகளில் ஆறு மணி நேரம் வரை கொடாமல் இருக்கும். ஓலை பெட்டியை வாங்குவதன் மூலம் குடிசைத் தொழிலை ஊக்குவிக்கலாம்’’ என கூறினார்.
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனாலும், அதன் பயன்பாடு குறைந்தபாடில்லை.
சமீபத்தில், சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று கேரள மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஓலைப் பெட்டிகளில் இறைச்சி – அசத்தும் அப்துல் ரசாக் ஓலைப் பெட்டிகளில் இறைச்சி – அசத்தும் அப்துல் ரசாக் Reviewed by நமதூர் செய்திகள் on 23:59:00 Rating: 5

No comments:

Powered by Blogger.