பொறுத்தது போதும்! - பொங்கியெழுந்த தமிழர்கள்

மக்கள் உரிமைகளைப் பாதுகாத்திட, மக்கள் போராட்டம்தான் ஒரே வழி என்பதை நிரூபித்துள்ளது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்றுவரும் போராட்டங்கள். போராட்டங்கள் இல்லாமல் விடியல் இருக்காது என்பதை உணர்ந்துதான் ஜல்லிக்கட்டுக்கு தீர்வு கிடைக்கும்வரையில் இரவும் பகலுமாக மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் தன்னெழுச்சியாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகாரத்தில் உள்ளவர்களின் பேச்சுகளையும் வெறும் அறிக்கைகளையும் நம்பாமல் தமிழக மக்கள் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
தமிழக மக்களுக்கு ஆட்சியில் இருப்பவர்கள் பல்வேறுவிதமான இன்னல்களை இதுவரையில் கொடுத்து வந்தனர். மேலும் இதுவரை மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்காததால் மக்களது உரிமைகளையும் ஆட்சியாளர்கள் பறித்து வந்தனர்.ஆட்சியாளர்கள் நினைக்கும்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையேற்றம், கேஸ் விலையேற்றம் என்று செய்து வந்தனர். மேலும் முன்னறிவிப்பின்றி உயர் மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், இன்று வரை மக்கள் சிரமத்திலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் மத்திய அரசு கட்டாய விடுமுறையிலிருந்து பொங்கல் விடுமுறையை நீக்கி அறிவித்தது, தமிழக மீனவர்களை இலங்கை இராணுவத்தினர் தொடர்ந்து கைது செய்வது, தமிழகத்துக்கு காவேரி நீர் கிடைக்க வழிவகை செய்யாமல் மத்திய அரசும், மாநில அரசும் அமைதி காத்து வேடிக்கை பார்த்தது என்பதான செயல்களைக் கண்டு தமிழக மக்கள் போராட்டக் களத்தில் குதித்துவிட்டார்கள்.
போராட்டத்தில் கட்சிபேதமின்றி அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். போராட்டத்துக்கு அரசால் தீர்வு காண இயலவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக காரணம் சொல்கிறார்கள். இவ்வாறு கூறப்படும் சட்ட சிக்கல் பற்றி பாமக கட்சியின் மூத்த வழக்கறிஞர் பாலு இப்படிச் சொல்கிறார்: ‘கால் வடிவத்தில் கால் மிதி அமைக்கலாம், கால் மிதி வடிவத்தில் கால்களை அமைக்க முடியாது. கால் மிதிக்காக கால்களை வடிவமைக்க கால்களைச் செதுக்கினால் ஆபத்தாக அமையும். சட்டமும் அப்படித்தான். சட்டம் எப்போதும் மக்களுக்காக இருக்க வேண்டும், சட்டம் எப்போதும் மக்களை பாதுகாக்கவே வேண்டும். மக்கள் உணர்வுக்கு எதிராக என்றும் சட்டம் இருக்கக்கூடாது என்றே ஒரு சட்டக் கோட்பாடும் உண்டு.
இங்கு ஏதோ மிருகவதை நடப்பதாக நீதியரசர்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு என்பது பண்பாட்டோடு தொடர்புடைய விளையாட்டு. பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டுக்கு எதிராகத் தொடுத்த வழக்கை அவசரமாக எடுத்துக்கொண்டு விசாரித்து, அதற்கு தடையும் அறிவித்தது. ஆனால் தமிழக அரசு ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொண்டு பொங்கலுக்குமுன்பே தீர்ப்பளிக்க வேண்டுமென்று மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால் உச்சநீதிமன்றமோ, அவசர வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளது.
இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் உச்சநீதிமன்றம் மதிப்பளிக்காதது வருத்தம் அளிக்கிறது. இது, தனிநபர் வழக்கு அல்ல; இதுவொரு பொதுநல வழக்கு. விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்க எத்தனை நாள் ஆகலாம் என்பதைத்தான் பார்க்கவேண்டியதாக இருக்கிறது. தற்போது நடந்துவரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை பொருத்தவரையில், அரசியல் கட்சியினரின் பின்னின்று மக்கள் இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. தமிழக மக்கள் தங்களின் உணர்வுகளின் துணையோடு தாமாகவே முன்னின்று நடத்துகிறார்கள். அதனால் மக்களின் உணர்வை ஏற்று, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்பதே எங்கள் விருப்பம். இந்தப் போராட்டத்தை ஒரு மக்கள் புரட்சியாகவே நான் கருதுகிறேன்’ என்று கூறினார்.
பொறுத்தது போதும்! - பொங்கியெழுந்த தமிழர்கள் பொறுத்தது போதும்! - பொங்கியெழுந்த தமிழர்கள் Reviewed by நமதூர் செய்திகள் on 00:21:00 Rating: 5

No comments:

Powered by Blogger.