ஜல்லிக்கட்டுக்கு போல் ட்ரிபிள் தலாக்கிற்கு போராடு : ஓவைசி!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள், இளைஞர்கள் என அனவரும் ஒன்றிணைந்து ஒரு வாரத்துக்கும் மேலாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு நாடுகளில் பணிபுரியும் தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்தனர். தமிழர்களின் ஒற்றுமையைக் கண்டு பல நாடுகள் வியந்தன.

இந்நிலையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-ல்த்திஹாத்-உல் முஸ்லிமின் தலைவர் அசாதுடின் ஓவைசி, ‘ஜல்லிக்கட்டுக்காக தமிழர்கள் இணைந்து போராடியதுபோல் நாட்டில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் முத்தலாக் இஸ்லாமிய செயல்முறைக்குப் போராட வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர், ‘தமிழக மக்கள் லட்சக்கணக்கானோர் இணைந்து அவர்கள் பாரம்பரியத்துக்காக போராட்டம் நடத்தினர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தலைவணங்கினார். இந்திய இஸ்லாமியராகிய நமக்கும், நம்முடைய கலாச்சாரம் உள்ளது. நம் விருப்பப்படி, திருமணம் மற்றும் விவாகரத்து செய்துகொள்கிறோம். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை யாரும் வழிநடத்த வேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 20ஆம் தேதி, அசாதுடின் ஓவைசி தன் ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்காக தமிழ் மக்கள் நடத்திவரும் போராட்டம், இந்துத்வ சக்திகளுக்கு சிறந்த பாடமாக அமையும். மத்திய அரசு பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வர நினைக்கும் செயலுக்கு இது எச்சரிக்கையாக அமையும். அந்த சட்டத்தைக் கொண்டு வர முடியாது. இந்த நாடு என்பது ஒரு கலாச்சாரத்தால் ஆனது கிடையாது. பன்முக கலாச்சாரத்தை அனைவரும் கொண்டாடிவருகிறோம்’ என்று பதிவேற்றம் செய்திருந்தார்.
கடந்த டிசம்பர் மாதம், மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்வது அரசியலமைப்புக்கு விரோதமானது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் தலாக் முறை அரசியலமைப்புக்கு விரோதமானது. அது முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல் என நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில், ‘முத்தலாக் முறை பாலின சமத்துவத்துக்கும் மதச் சார்பின்மைக்கும் எதிரானது. முத்தலாக், பலதார மணம் மற்றும் ‘நிக்காஹ் ஹலாலா’ போன்றவை இஸ்லாமிய நடைமுறைகளுடன் ஒருங்கிணைந்தது இல்லை’ எனத் தெரிவித்தது. மத்திய அரசின் இந்த முயற்சியை எதிர்த்து, நாடு முழுவதும் ஜமாத்-இ-இஸ்லாமிய ஹிந்த் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் தனிச் சட்டத்தில் மத்திய அரசு தலையிடுவதை ஏற்க மாட்டோம் என எதிர்ப்புத் தெரிவித்தது. அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், ‘பொதுசிவில் சட்டம் கொண்டு வர முனையும் மத்திய அரசின் முடிவு நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானது என எதிர்ப்புத் தெரிவித்தது.
இந்நிலையில், தற்போது ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் நடத்தியதுபோல், முத்தலாக் முறைக்கும் போராட்டம் நடத்த வேண்டும் என, அசாதுடின் ஓவாய்சி அழைப்புவிடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு போல் ட்ரிபிள் தலாக்கிற்கு போராடு : ஓவைசி! ஜல்லிக்கட்டுக்கு போல் ட்ரிபிள் தலாக்கிற்கு போராடு : ஓவைசி! Reviewed by நமதூர் செய்திகள் on 22:23:00 Rating: 5

No comments:

Powered by Blogger.