அட்டவணையில் சேர்க்க வேண்டும்: ஜவாஹிருல்லா

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘தமிழக சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு வழிவகுக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் (தமிழ்நாடு திருத்தம்) 2017ஐ மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்த உடனேயே அதற்குத் தடை வாங்க சிலர் உச்சநீதிமன்றம் சென்றுள்ளார்கள். இதுபோலவே, பீட்டா அமைப்பும் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வார்கள் என்பது உறுதி. தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகச் செயல்பட்டு ஒட்டுமொத்த தமிழர்களின் வெறுப்புக்கு உள்ளாகியுள்ள பீட்டா அமைப்பைத் தடை செய்யவும் தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, 1994இல் தமிழக அரசு 69 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த சட்டம் இயற்றியபோது அந்தச் சட்டத்தை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 31பி பிரிவு அட்டவணை 9இல் சேர்க்க வைத்ததுபோல் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் இந்தச் சட்டத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் ஒரு சட்டம் சேர்க்கப்பட்டால் அதை எதிர்த்து கேள்வி கேட்கவோ, ரத்து செய்யவோ நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை. இதுவே நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உத்தரவிடும்’ என்று அவர் கூறியுள்ளார்.
அட்டவணையில் சேர்க்க வேண்டும்: ஜவாஹிருல்லா அட்டவணையில் சேர்க்க வேண்டும்: ஜவாஹிருல்லா Reviewed by நமதூர் செய்திகள் on 03:42:00 Rating: 5

No comments:

Powered by Blogger.