நீதிபதிகளுக்குப் பின்னால் அரசியல்வாதிகளா? புகாரும் பதிலும்!

நீதிபதிகளுக்குப் பின்னால் அரசியல்வாதிகளா? புகாரும் பதிலும்!

இந்திய நாட்டின் நீதி வழங்கும் அமைப்புகளில் உச்ச அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் செல்மேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப் மற்றும் மதன் பி லோகூர் ஆகிய நால்வரும் நேற்று (ஜனவரி 12) காலை செய்தியாளர்களைச் சந்தித்தனர். ‘உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை; ஜனநாயகத்தன்மை பேணப்படவில்லை’ என்று கூட்டாகப் பேட்டியளித்தனர். இந்த விவகாரம் நீதித் துறையைத் தாண்டி அரசியல் வட்டாரத்தில் எதிரொலித்துள்ளது.
நீதிபதிகள் இவ்வாறு பேட்டியளித்த சில மணித்துளிகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான டி.ராஜா, உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வரின் வீட்டுக்கே சென்று அவரை சந்தித்தார். இந்த பிரச்னை பற்றி அவர் நீதிபதியுடன் என்ன பேசினார் என்று அரசியல் வட்டாரங்களில் சூடாக விவாதிக்கப்படுகிறது.
ராஜாவின் இந்த சந்திப்புக்கும் நீதிபதிகள் அளித்த பேட்டிக்கும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது என்று பாஜகவினர் சமூக தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், ’இந்த சூழலில் அரசியல்வாதியான ராஜா நீதிபதியை சந்திக்கிறார் என்றால் இதில் அரசியல் இல்லை என்பதை எப்படி நம்ப முடியும்? இதை மக்களிடமே விட்டுவிடுகிறோம்’ என்றும் சமூக தளங்களில் அவர்கள் கேட்டுள்ளனர்.
ஆனால் இந்த சந்திப்பு பற்றி டி.ராஜா விளக்கம் அளித்துள்ளார். ‘’நீதிபதிகளின் பிரஸ் மீட் பற்றி நான் அறிந்தபோதே மிகவும் வருத்தம் அடைந்தேன். இதற்கு என்ன காரணம் என்று அறிந்துகொள்ளவும், இப்பிரச்னைக்கு என்னால் ஆன தீர்வை ஏற்படுத்தவும் பங்காற்ற வேண்டும் என்று நினைத்தேன். ஒரு நாடாளுமன்ற வாதியாக இது எனது கடமை. இந்நிலையில் நீதிபதி செல்லமேஸ்வர் எனது நீண்ட நாள் நண்பர் என்பதால் அவரிடமே இதுகுறித்து கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்பதால் அவரை சந்தித்தேன். இதில் வேறொன்றும் இல்லை’’ என்றார்.
இந்நிலையில் ராஜா மீது விமர்சனங்கள் வருவதை அறிந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ‘ராஜா நீதிபதி செல்லமேஸ்வரை சந்தித்தது அவரது தனிப்பட்ட விஷயம். கட்சிக்கு இதில் எந்த பங்கும் இல்லை’ என்று தெரிவித்திருக்கிறது.
இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன், ’’இந்த விவகாரத்தை வெளியே கொண்டுவந்த நான்கு நீதிபதிகளுக்கும் பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளுக்குப் பின்னால் அரசியல்வாதிகளா? புகாரும் பதிலும்! நீதிபதிகளுக்குப் பின்னால் அரசியல்வாதிகளா? புகாரும் பதிலும்! Reviewed by நமதூர் செய்திகள் on 02:35:00 Rating: 5

No comments:

Powered by Blogger.