காங்கிரஸுடன் கூட்டணி? குழப்பத்தில் சிபிஐ!

காங்கிரஸுடன் கூட்டணி? குழப்பத்தில் சிபிஐ!

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவில் எதிர்ப்பே அதிகம் உள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த விவகாரத்தில் குழப்பமான நிலையிலேயே உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 3 நாள் மத்தியக் குழுக் கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக, பாஜகவைத் தோற்கடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் ஒரே அணியாக இணைந்து போட்டியிடலாம் எனக் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட சிலர் வலியுறுத்தினர்.
ஆனால், முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் இதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக அதனுடன் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் என்பது அவரது கருத்து. டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சிபிஐ (எம்) பொலிட்பீரோ கூட்டத்தில் இது தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் தற்போதைய கூட்டத்தின் இறுதி நாளான நேற்று (ஜனவரி 21), இரு தரப்பின் கருத்துகள் அடங்கிய வரைவு தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், காங்கிரஸுடன் கூட்டணி வேண்டாம் என்ற பிரகாஷ் காரத் ஆதரவாளர்களின் தீர்மானம் வெற்றி பெற்றது.
இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியோ அல்லது எவ்வித உடன்பாடோ செய்துகொள்ள வேண்டாம் என வரைவுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார்.
இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி விவகாரத்தில் இன்னும் குழப்பான நிலையிலேயே இருந்துவருகிறது. 2019 தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுராவரம் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் இன்று (ஜனவரி 22) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒரே பாதையில் ஒன்றுசேர வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் எண்ணம். அதேவேளையில் தேர்தல் கூட்டணி என்பது வேறு. காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதா வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இது குறித்து எங்கள் கட்சிக்குள்ளும் சிபிஐ(எம்) உடனும் விவாதிப்போம். இடதுசாரிகள் ஒற்றுமைக்கே அதிக முக்கியத்துவம் அளிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸுடன் அகில இந்திய அளவில் கூட்டணி ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என குறிப்பிட்ட அவர், சில மாநிலங்களில் வேண்டுமானால் கூட்டணி ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸுடன் கூட்டணி? குழப்பத்தில் சிபிஐ! காங்கிரஸுடன் கூட்டணி? குழப்பத்தில் சிபிஐ! Reviewed by நமதூர் செய்திகள் on 03:30:00 Rating: 5

No comments:

Powered by Blogger.