குஜராத், மத்தியப் பிரதேசத்துக்கும் பரவிய போராட்டம்!

குஜராத், மத்தியப் பிரதேசத்துக்கும் பரவிய போராட்டம்!

பீமா கோரிகாவுன் வன்முறைக்கு எதிரான போராட்டம் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.
மகாராஷ்டிராவின் புனேவில் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி பீமா-கோரிகாவுன் போர் வெற்றியின் 200-ஆவது ஆண்டு தினக் கொண்டாட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டது. இதில், ஒருவர் உயிரிந்தார். இதற்கிடையே, வன்முறையை மாநில அரசு தடுக்கத் தவறிவிட்டதாகக் கூறி, தலித் அமைப்புகள் சார்பில் புதன்கிழமை மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் அழைப்பு விடுத்திருந்தார்.
மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால், மும்பையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது. இதில், 2 பேர் பலியாகினர், பலர் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதில் மாநில போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான 200 பேருந்துகள் சேதம் அடைந்துவிட்டதாக, போக்குவரத்து அதிகாரிகள் கூறினர். போராட்டம் தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேவானி, உமர் காலீத் மீது வழக்கு: முன்னதாக, டிசம்பர் 31ஆம் தேதி பீமா-கோரிகாவுன் வெற்றி தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற குஜராத் எம்எல்ஏவும், தலித் அமைப்பின் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி, ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் உமர் காலீத் ஆகிய இருவரும் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாக, போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் இவர்களுடன் பிரகாஷ் அம்பேத்கர், ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா ஆகியோரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வன்முறை தொடர்பாக வலதுசாரி தலைவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களுக்குப் பரவியது
இதனிடையே, குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களுக்குப் போராட்டம் பரவியுள்ளது. மத்திய பிரதேசத்தின் பர்ஹான்பூர் மாவட்டத்தில் பீம் சேனா, புத்த சங்கம் உள்ளிட்ட தலித் அமைப்புகள் சார்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. இதில், போராட்டக்காரர்கள் கற்களை வீசியதில் 12 வாகனங்கள் சேதமடைந்தன. பேருந்தை எரிக்கப் போராட்டக்காரர்கள் முயன்றதாகவும், போலீசார் அவர்களை விரட்டியடித்ததாகவும் கூறப்படுகிறது.
குஜராத்தின் மதுரம் பைபாஸ் சாலையில் போராட்டக்காரர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சன்ஸ்மா- ராதன்பூர் நெடுஞ்சாலையில் டையர்கள் கொளுத்தப்பட்டன. சௌராஷ்டிராவின் பல பகுதிகளில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது.
முதல்வருடன் அம்பேத்கர் சந்திப்பு: இந்நிலையில், மும்பையில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸை பிரகாஷ் அம்பேத்கர் சந்தித்துப் பேசினார். அப்போது, புனேவில் பீமா-கோரேகான் வெற்றி தினக் கொண்டாட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் அவர் கேட்டுக் கொண்டார். அதற்கு, வன்முறையைத் தூண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார்.
மேவானி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு: இதனிடையே, மும்பை புறநகர்ப் பகுதியில் நேற்று (ஜனவரி 4) நடைபெறுவதாக இருந்த மாணவர்கள் மாநாட்டுக்குக் காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது. அந்த மாநாட்டில் ஜிக்னேஷ் மேவானி, உமர் காலீத் ஆகியோர் உரையாற்றுவதாக இருந்தனர். மேலும், அந்த மாநாட்டுக்கு வந்த மாணவர்களையும், தன்னார்வலர்களையும் போலீஸார் கைது செய்தனர். மாணவர்களைக் கைது செய்ததற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இதனிடையே, பீமா-கோரிகாவுன் போர் வெற்றி தினக் கொண்டாட்டத்தின்போது மூண்ட வன்முறையைத் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான அரசு தடுக்கத் தவறிவிட்டது என்று சிவசேனைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
குஜராத், மத்தியப் பிரதேசத்துக்கும் பரவிய போராட்டம்! குஜராத், மத்தியப் பிரதேசத்துக்கும் பரவிய போராட்டம்! Reviewed by நமதூர் செய்திகள் on 02:54:00 Rating: 5

No comments:

Powered by Blogger.