உச்ச நீதிமன்ற மோதல்!

உச்ச நீதிமன்ற மோதல்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எழுதிய கடிதத்தில், தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையிலுள்ள மற்ற நீதிபதிகள் அவருக்கு குறைவானவர்களோ அல்லது உயர்வானவர்களோ இல்லை என்று குறிப்பிட்டிருக்கின்றனர் செலமேஸ்வர் உள்ளிட்ட நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள். இரண்டு மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கடிதம், பொதுப்பார்வைக்காக இன்று (ஜனவரி 12) வெளியிடப்பட்டது.
இந்திய வரலாற்றில் முதன்முறையாக, உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகிய 4 நீதிபதிகள் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது, உச்ச நீதிமன்ற நிர்வாகம் சீர்குலைந்திருப்பதாகவும், இதனால் ஜனநாயகம் பாதிக்கப்படுவதாகவும் வருத்தம் தெரிவித்தனர். மேலும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்குகளை பிரித்துக் கொடுப்பதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் குறித்து, இரண்டு மாதங்களுக்கு முன்பே தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியதாகவும், அதனால் பலன் ஏதும் இல்லை என்ற நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்ததாகவும் தெரிவித்தனர் நீதிபதிகள். இதன்பிறகு, தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டனர்.
”உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவுகளால், ஒட்டுமொத்த நீதித்துறை செயல்பாடுகளும் உயர் நீதிமன்றங்களின் சுதந்திரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, எங்களது கவலையும் வருத்தத்தையும் தெரிவிக்கிறோம். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே கொல்கத்தா, மும்பை, சென்னையில் உள்ள உயர் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றங்களில் வேரூன்றிய சில மரபுகள் உச்ச நீதிமன்ற செயல்பாடுகளால் சிக்கலுக்கு ஆளாகியுள்ளன.
வழக்குகளைப் பட்டியலிடுவது என்பது தலைமை நீதிபதியின் முடிவைப் பொறுத்தது. நீதிமன்றங்களையும் அமர்வுகளையும் முன்னுரிமை அடிப்படையில் முடிவு செய்வதும், அமர்வில் எந்தெந்த நீதிபதிகள் இருக்க வேண்டுமென்று தீர்மானிப்பதும், தலைமை நீதிபதியின் உரிமைகள்.
நீதிமன்ற செயல்பாடுகள் சுமுகமாக இருக்க, இந்த வழிமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், சக நீதிபதிகளைவிட தலைமை நீதிபதி அதிக அதிகாரமுள்ளவர் என்றாகாது. தலைமை நீதிபதி என்பவர் முதன்மையானவர் மட்டுமே. மற்ற நீதிபதிகளை விட அவர் மேலானவராகவோ, கீழானவராகவோ இல்லை.
வழக்குகளைப் பட்டியலிடும் நடைமுறை என்பது நீதிமன்றத்தின் வலிமையை அதிகமாக்கவே மேற்கொள்ளப்படுகிறது. இது சரியான முறையிலும் உரிய நேரத்திலும் நடைபெற வேண்டும். அதே நேரத்தில், வழக்கு தொடர்பான விஷயங்களைக் கருத்தில் கொண்டு அமர்வுகளை முடிவு செய்ய வேண்டும். இதிலிருக்கும் விரும்பத்தகாத அம்சங்கள் இந்த அமைப்பு பற்றிய சந்தேகங்களை உண்டாக்கக்கூடாது. சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடக்கூடாது.
இந்த அமைப்பை கேள்விக்குட்படுத்த வேண்டும் என்று நாங்கள் எண்ணவில்லை. ஏற்கனவே இதன் பிம்பம் சிதைந்து போயிருப்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
நீதிபதி கர்ணன் தொடர்பான தீர்ப்பில், நீதிபதிகள் தேர்வு மற்றும் பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இரண்டு நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அதுபோன்ற நிகழ்வு நடந்தேறவில்லை. தேர்வுக்கான வழிமுறைகளை உருவாக்கும்போது வெளிப்படைத்தன்மை வேண்டும். இந்த விவரங்கள் அரசியல் சாசன அமர்வைத்தாண்டி, முழு நீதிமன்றமும் அறிய வேண்டியது அவசியம்” என்று இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நிர்வாகம் மற்றும் தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கும் நான்கு நீதிபதிகளுக்கு, மற்ற நீதிபதிகளில் சிலர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும்
மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் இருவரும் பத்திரிகையாளர்களைச் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
இந்த பிரச்சனை பற்றி பிரதமர் நரேந்திர மோடி, சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகச் சொல்லப்பட்டது. இதுகுறித்து, இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதேநேரத்தில், உச்ச நீதிமன்ற விவகாரத்தில் அரசு தலையிடாது என்ற தகவல் மட்டும் வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்ற மோதல்! உச்ச நீதிமன்ற மோதல்! Reviewed by நமதூர் செய்திகள் on 02:40:00 Rating: 5

No comments:

Powered by Blogger.