ஜிஎஸ்டியில் மாற்றம் ஏற்படுத்தப்படும்!

ஜிஎஸ்டியில் மாற்றம் ஏற்படுத்தப்படும்!

நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் திணிக்கப்படுவதை எதிர்த்து தாங்கள் போராடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் பிப்ரவரி 27ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தி மேகாலயாவில் முகாமிட்டுப் பிரசாரம் செய்து வருகிறார்.
ஷில்லாங்கில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், “ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராடி வருகிறோம். நாட்டில் ஒருவிதமான சிந்தனை திணிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் என்ன செய்து வருகிறது என்றால் உங்கள் கலாசாரத்தையும் மொழியையும் வாழ்க்கை முறையையும் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், அரசியலில் பெண்களின் அதிகாரம் குறித்து பேசிய அவர், “சமூகத்தில் பெண்களுக்கு மிகப் பெரிய இடம் உள்ளது. ஆனால், பெண்களை அதிகாரம் இழக்கச்செய்வதே ஆர்எஸ்எஸ் சிந்தனை. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமை பொறுப்புக்களில் எதிலாவது பெண்கள் உள்ளனரா?
அதே சமயம், மகாத்மா காந்தியின் படத்தைப் பார்த்தீர்கள் என்றால் வலது புறமும், இடது புறமும் பெண்கள் இருப்பதைக் காணலாம். அதே மோகன் பகவத்தின் படத்தைப் பார்த்தால் தனியாகவோ அல்லது ஆண்களால் சூழப்பட்டும் இருப்பார். காங்கிரஸில் எத்தனை ஆண்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுகிறதோ, அதே அளவு பெண்களுக்கும் வழங்கப்படுகிறது. மேகாலயாவில் உள்ள பெண்கள் காங்கிரஸில் இணைய வேண்டும். அப்போதுதான் தேர்ந்தெடுப்பதற்கு அதிகப் பெண்கள் எங்களுக்குக் கிடைப்பார்கள்” என்று அழைப்பு விடுத்தார்.
காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
“நாங்கள் வேறுவிதமான ஜிஎஸ்டி சட்டத்தை முன்மொழிந்தோம். எளிய மக்கள் பயன்படுத்தும் பொருள்களை ஜிஎஸ்டி பட்டியலில் இருந்து விலக்க வேண்டும் என்றும், ஒரே விதமான ஜிஎஸ்டி வரி மட்டுமே போதும் எனவும் கூறினோம். ஆனால், தாங்கள் விரும்பிய வரி ஜிஎஸ்டியை நிறைவேற்றப் போவதாக பாஜக கூறிவிட்டது. 10 - 15 தொழிலதிபர்கள் முன்னேற்றத்தில் மட்டுமே பாஜக கவனம் செலுத்துகிறது. சிறு மற்றும் நடுத்தர தொழில்களை புறந்தள்ளி விட்டது. 2019ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஜிஎஸ்டியில் நிச்சயம் மாற்றம் செய்வோம்” என ராகுல் தெரிவித்தார்.
ஜிஎஸ்டியில் மாற்றம் ஏற்படுத்தப்படும்! ஜிஎஸ்டியில் மாற்றம் ஏற்படுத்தப்படும்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:21:00 Rating: 5

No comments:

Powered by Blogger.