சந்திர கிரகணத்தைக் கண்டு ரசித்த மக்கள்!

சந்திர கிரகணத்தைக் கண்டு ரசித்த மக்கள்!

150 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் நிகழ்ந்த அபூர்வ சந்திர கிரகணத்தை மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
சூரியன், நிலா, பூமி ஆகிய மூன்று கோள்களும் ஏறத்தாழ ஒரே நேர்கோட்டில் வரும்போது இந்த நிகழ்வு ஏற்படுகிறது. நிலவின் மீது படவேண்டிய சூரியக் கதிர்களை பூமி மறைத்துக்கொள்ளும்போது, சந்திர கிரகணம் உருவாகிறது. அப்போது பூமியின் நிழல் நிலவின் மீது படர்வதால் இருள் சூழ்ந்தது போன்று சந்திரன் காட்சியளிக்கும். பௌவுர்ணமி நாளன்றுதான் இதுபோன்ற நிகழ்வு ஏற்படும்.
2018 ஆண்டில் முதலில் தோன்றும் இந்த கிரகணத்துடன் தொடர்புடைய மற்றொரு நிகழ்வு சூப்பர் மூன். இந்நிலவு வழக்கத்தைவிட 14 சதவிகிதம் பெரியதாகவும், 30 சதவிகிதம் பிரகாசமாகவும் தோன்றும் என்று கூறப்பட்டது.
அதன்படி 1866ஆம் ஆண்டுக்குப் பின், 150 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (ஜனவரி 31) ஆபூர்வ சந்திர கிரகணம் இந்தியாவில் தொடங்கி உலகம் முழுவதும் தோன்றியது. சந்திர கிரகணத்தின் நேரலைக் காட்சிகளை அமெரிக்காவின் விண்வெளிக்கழகமான நாசா நேரலைச் செய்தது.
இந்திய நேரப்படி மாலை 5.18 மணி அளவில் தொடங்கிய இந்தச் சந்திர கிரகணம் இரவு 8.41 மணி வரை நீடித்தது. மாலை 6.21 மணிக்குத் தெளிவாகவும் இரவு 7.37 மணிக்கு முழு சந்திர கிரகணத்தைக் காண முடிந்ததாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சந்திர கிரகணம், சூப்பர் நிலா, சிவப்பு நிலா என்ற மூன்று அரிய நிகழ்வுகளுடன் இந்த அபூர்வ சந்திர கிரகணம் ஏற்பட்டன.
எவ்வித பாதுகாப்பு சாதனங்கள் இன்றி, வெறும் கண்களாலேயே பார்க்கலாம் என்று அறிவித்ததால் மக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். மொட்டை மாடி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கம், சென்னை மெரினா கடற்கரை உட்பட பல பகுதிகளிலும் இந்த அரியச் சந்திர கிரகணத்தை மக்கள் உற்சாகத்துடன் பார்த்து, புகைப்படங்கள் எடுத்து ரசித்தனர்.
இந்தக் கிரகணத்தை தொடர்ந்து இனி 2028ஆம் ஆண்டில்தான் மீண்டும் காண முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு கடந்த, 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி, பூமியின் நிழல் சந்திரனின் ஒரு பகுதியில் விழுந்து பாதியளவு சந்திர கிரகணமும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒரு சந்திர கிரகணமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
சந்திர கிரகணத்தைக் கண்டு ரசித்த மக்கள்! சந்திர கிரகணத்தைக் கண்டு ரசித்த மக்கள்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:22:00 Rating: 5

No comments:

Powered by Blogger.