ஆந்திராவில் 12; தமிழகத்தில் 6 - இது நியாயமில்லை என்கிறார் அன்புமணி
மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்துக்கு மேலும் ஓர் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்விக்கான கட்டமைப்புகளை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்க்கும் நோக்குடன் மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழத்துக்கு மேலும் ஓர் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழகத்தில் மிகக்குறைந்த அளவிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
எம்.டி., எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகள், முதுநிலை மருத்துவப் பட்டயப்படிப்புகள் ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் ஜனவரி 7-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்காக ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த 31-ம் தேதி முதல் நவம்பர் 27-ம் தேதி வரை பெறப்படுகின்றன. இதற்கான தேர்வு மையங்களை அமைப்பதில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்காக நாடு முழுவதும் 129 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி ஆகிய 6 நகரங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மையங்கள் தமிழகத்துக்குப் போதுமானவையல்ல.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு 31.10.2017 மாலை 3 மணி முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில் தமிழகத்திலுள்ள 6 தேர்வு மையங்களும் நிரம்பிவிட்டதால் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்று தேர்வெழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. வழக்கமாகத் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வாக இருந்தாலும், நுழைவுத்தேர்வாக இருந்தாலும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அந்தந்த மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால், ஒவ்வொரு நகரிலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தேர்வுக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, முதலில் விண்ணப்பிப்போருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. தமிழகத்தில் 6 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இடங்கள் இருப்பதால் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை 1.20 லட்சம் பேர் எழுதினர். அவர்களில் சுமார் 10,000 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த ஆண்டு அவர்களைவிட அதிகம் பேர் நீட் தேர்வில் பங்கேற்கக்கூடும். அதற்கேற்ற வகையில் கூடுதலாகத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இத்தேர்வை நடத்தும் தேசிய தேர்வு வாரியம் அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. தேசிய அளவில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மொத்தம் 23,686 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன. இவற்றில் 2,441 தமிழ்நாட்டில் உள்ளன. முதுநிலை மருத்துவ இடங்களிலும், நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையிலும் 10% தமிழகத்தின் பங்கு என்பதால், தேர்வு மையங்களிலும் 10% தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது, தமிழகத்தில் 13 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக அதில் பாதிக்கும் குறைவான நகரங்களில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்படுவது போதுமானதல்ல.
கடந்த ஆண்டு நாடு முழுவதும் 41 நகரங்களில் மட்டும்தான் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய 3 நகரங்கள் தமிழகத்தில் அமைந்திருந்தன. ஆந்திரத்தில் விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய இரு நகரங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. இம்முறை தேர்வு நகரங்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தேர்வு நகரங்களின் எண்ணிக்கை இரு மடங்காக மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஆந்திரத்தில் இது ஆறு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இத்தனைக்கும் ஆந்திர அரசு சிறப்பு சட்டம் இயற்றி முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் அனைத்தையும் தானே எடுத்துக்கொள்கிறது. தமிழகமோ 50% இடங்களை மத்திய ஒதுக்கீட்டுக்கு வழங்குகிறது. அவ்வாறு இருக்கும்போது தமிழகத்தில் 6 நகரங்களில் மையங்களை அமைத்துவிட்டு, ஆந்திரத்தில் 12 நகரங்களில் மையங்களை அமைப்பது எந்த வகையில் நியாயம். தமிழகத்துக்கு கூடுதல் தேர்வு மையங்களைக் கேட்டுப் பெறுவதில் பினாமி அரசு தோல்வியடைந்துவிட்டது.
ஆந்திரத்திலும் பிற மாநிலங்களிலும் முதுநிலை மருத்துவ நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் வாழும் இடத்திலிருந்து அதிகபட்சமாக 3 மணி நேரத்தில் தேர்வு மையங்களைச் சென்றடைந்துவிடலாம். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த பலர் வேறு மாநிலங்களுக்கு சென்றுதான் தேர்வு எழுத வேண்டியுள்ளதால் குறைந்தது இரு நாள்கள் முன்பாகப் பயணத்தைத் தொடங்க வேண்டும். இதனால் ஏற்படும் சோர்வும் மன உளைச்சலும் தேர்வு எழுதும் திறனைப் பாதித்துவிடும். எனவே, தமிழகத்தில் மேலும் பல நகரங்களில் அதிக எண்ணிக்கையில் தேர்வு மையங்களைத் தேசிய தேர்வு வாரியம் அமைக்க வேண்டும். இதற்காகத் தமிழக ஆட்சியாளர்கள் மத்திய அரசுக்கு கடுமையாக நெருக்கடி தர வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திராவில் 12; தமிழகத்தில் 6 - இது நியாயமில்லை என்கிறார் அன்புமணி
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:57:00
Rating:
No comments: