சத்தீஸ்கர் முதல்வரின் மருமகளுக்காக காலி செய்யப்பட்ட மருத்துவமனை. இரண்டு நோயாளிகளுக்கு ஒரு படுக்கை அளித்த அவலம்


சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங்கின் மருமகள் ஐஸ்வர்யா சிங்கின் பிரசவத்திற்காக ராய்பூர் பீமாராவ் அம்பேத்கார் நினைவு மருத்துவமனையின் ஒரு முழு தளமே காலி செய்யப்பட்டுள்ளது கடும் கண்டனங்களை பெற்று வருகிறது. இந்த மருத்துவமனையில் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் நான்கு குழந்தைகள் ஊழியர்களின் அலட்சிய போக்கினால் உயிரிழந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ராமன் சிங்கின் மருமகள் ஐஸ்வர்யா சிங்கிற்காக ஒரு மருத்துவமனையின் ஒரு முழு தளம் காலி செய்யப்பட்டு அவருக்கென்று விசேஷ தனி அரை ஒதுக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய அறைகள் காவல்துறை கண்காணிப்பு அறையாகவும் காவலர்கள் தங்கும் அறையாகவும் மாற்றப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உள்ள 1200 நோயாளிகள் இதற்கென அங்கிருந்து காலி செய்யப்பட்டு ஏற்கனவே கூட்டம் அதிகமாக உள்ள வேறு தளங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கூட இருவருக்கு ஒரு படுக்கை என்ற அளவிற்கு மருத்துவமனையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். இங்கே அவர்கள் கூறுவது போல படுக்கையை பகிர்ந்துகொள்வது மிகவும் கடினம். இது குறித்து அவர்களிடம் நாங்கள் முறையிட்ட போதும் உங்களால் இதனை சமாளிக்க முடியும் என்று கூறுகின்றனர். நாங்கள் கூறுவதை யாரும் கேட்பதாக இல்லை.” என்று கூறியுள்ளார்.
மருத்துவமனையின் இந்த நிலை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் விவேக் சவுத்திரி, மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை உள்ளது என்றும் கூட்டம் அதிகமாக உள்ளது என்பதையும் ஏற்றுக்கொண்டார். இது குறித்து கூறிய அவர், “இங்கு இடப்பற்றாக்குறை உள்ளது, புதிய கட்டிட வேலைகளும் நடைபெற்று வருகின்றன. பிரசவ பிரிவிலும் பிரச்சனை உள்ளது. நாங்கள் மேலும் 30 பேருக்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்துள்ளோம்.” என்று கூறியுள்ளார்.
பாஜக முதல்வரின் இந்த பொறுப்பற்ற செயலை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. “ராமன் சிங்கின் குடும்பத்திற்கு புதுவரவாக  கிடைத்துள்ளத புதிய நபரை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் முதவரின் மருமகளுக்கு VIP சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த மருத்துவமனையே ஒரு இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளது. இரண்டு கர்பிணிப்பெண்கள்  ஒரே படுக்கையை பகிருமாறு கூறப்பட்டுள்ளனர். இவர்களை வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களுக்கு இவர்கள் செலுத்தும் மிகவும் மோசமான இரக்கமற்ற நன்றிக்கடன் இது தான் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் விகாஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
ஆனால் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அஜய் சந்திரகர், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதோடு எத்தனையோ பெரும் பெரும் தனியார் மருத்துவமனைகள் இருக்க முதல்வரின் மருமகளுக்கு இந்த மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டது அந்த மருத்துவமனைக்கு கிடைத்த கவுரவம் என்று கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் முதல்வரின் மருமகளுக்காக காலி செய்யப்பட்ட மருத்துவமனை. இரண்டு நோயாளிகளுக்கு ஒரு படுக்கை அளித்த அவலம் சத்தீஸ்கர் முதல்வரின் மருமகளுக்காக காலி செய்யப்பட்ட மருத்துவமனை. இரண்டு நோயாளிகளுக்கு ஒரு படுக்கை அளித்த அவலம் Reviewed by நமதூர் செய்திகள் on 03:39:00 Rating: 5

No comments:

Powered by Blogger.