நீட் தேர்வை ரத்து செய்ய தேசிய கருத்தரங்கம்!
நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டியும், கல்வியில் நிலவும் பல்வேறு சிக்கல்கள் குறித்தும் தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.
'கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்' என்ற தலைப்பில் இன்று (நவம்பர் 12) சென்னை அண்ணாநகரில் உள்ள எஸ்.பி.ஐ.ஓ.எ பள்ளியில் கருத்தரங்கம் நடைபெற்றது. இயக்குநர் பா.ரஞ்சித்தின் ஒருங்கிணைப்பில் இயங்கிவரும் நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஒருநாள் கருத்தரங்கை கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜ கோபாலன் தொடங்கிவைத்தார். காலை 9:15 மணியிலிருந்து மாலை 6:00 மணிவரை நான்கு அமர்வுகளாக நடைபெற்ற இந்த கருத்தரங்கில் கல்வி முன்னுள்ள சவால்களை எப்படி எதிர்க்கொள்வது, மருத்துவ கல்வியின் எதிர்காலம் குறித்தான பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
இந்த கருத்தரங்கில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, நீதிபதி டி.அரிபரந்தாமன், பேராசிரியர் அனில் சட்கோபால், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இதில் நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
* இந்தியாவின் சமமற்ற பிராந்திய சூழல் வேறுபட்ட பண்பாடு, பல மொழிகளில் பயிலும் மாணவர்கள் இவற்றைக் கருத்தில் கொண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைத் தேர்வு முறையான 'நீட்' விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். தகுதியில்லை, திறமையில்லை என்பதால் போட்டியிட வேண்டாம் எனக் கூறவில்லை. வாய்ப்பு சமமாக இல்லை என்பதனாலேயே இத்தகைய போட்டி கூடாது என்கிறோம்.
*ஐபிசி 10டி இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கும் பொது நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று கூறியிருந்தாலும் ஜிப்மர், எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய அரசால் நிறுவப்பட்ட மருத்துவ நிறுவனங்களுக்கு நீட் எனும் நுழைவுத் தேர்விலிருந்து எவ்வாறு இந்திய அரசு விலக்களித்துள்ளதோ அதேபோல் தமிழக அரசு நடத்தும் மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளுக்கும் விலக்களிக்க வேண்டும்.
* மருத்துவம் உள்ளிட்ட கல்விகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில சட்டப் பேரவைக்கு உண்டு என உச்ச நீதிமன்றம் 'மாடர்ன் பல் மருத்துவமனை' வழக்கில் உறுதிப்படக் கூறியுள்ளது. மத்திய அரசுக்கு மட்டுமே அத்தகைய அதிகாரம் உண்டு என்பதை ஏற்க இயலாது எனவும், இதே வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அரசமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலும், நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரையின் அடிப்படையிலும் தமிழ்நாடு அரசு, தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக 2017 பிப்ரவரி 18 ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்ட இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான இரண்டு சட்ட மசோதாக்களும் உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலை இந்திய அரசு பெற்றுத்தர வேண்டும்.
* இந்த தீர்மானங்கள் அனைத்தும் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பல்துறை சான்றோர்கள், மாணவர்கள் உட்பட அனைவரிடமும் கையெழுத்து பெற்று முறையான மனுவை மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் நீலம் பண்பாட்டு மையம் வழங்கும்.
* மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்லூரிகளில், அரசு பள்ளியில் குறிப்பாக தாய்மொழி வழியில் பயின்றவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிட தமிழக அரசு உரிய சட்டம் இயற்ற வேண்டும்.
* கல்வியை சந்தையாக்க வழி செய்யும் உலக வர்த்தக அமைப்புடனான பேச்சு வார்த்தையிலிருந்து இந்தியா விலகிக்கொள்ள வேண்டும். தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை சமமான கற்றல் வாய்ப்பை உருவாக்கிட அரசு, கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துவதுடன் தேவைக்கேற்ப உயர் கல்வி நிறுவனங்களை அரசே தொடங்கி அரசின் பொறுப்பில் நடத்திட வேண்டும்.
என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை இயக்குநர் பா.ரஞ்சித் முன்மொழிய அனைவரும் ஏகமனதுடன் ஏற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த ரஞ்சித், "நீட் தேர்வின் பிரச்சினை குறித்து இன்னும் மாணவர்களுக்கு சரியான புரிதல் ஏற்படவில்லை. அதற்கான புரிதலை ஏற்படுத்தும் விதத்திலும், நீட் தேர்வுக்கு எதிரான அழுத்தத்தை மத்திய, மாநில அரசுகளுக்கு கொடுக்கவும் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.
மேலும் அவர்,"அனிதாவின் பெயரால் விஜய் சேதுபதி அவர்கள் கல்வி உதவித் தொகை வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. இதுபோன்று கல்வியில் பின்தங்கியவர்களுக்காக உதவ அனைவரும் முன்வரவேண்டும்" என்று தெரிவித்தார்.
நீட் தேர்வை ரத்து செய்ய தேசிய கருத்தரங்கம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:51:00
Rating:
No comments: