தயாரிப்பாளர் சங்கத்தை விமர்சிக்கும் பார்த்திபன்
ஒரு மனிதன் பிரச்சினையில் இருக்கும்போது இந்த சங்கத்தால் தீர்த்து வைக்க முடிகிறதா? என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தை விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்.பார்த்திபன்.
சசிகுமாரின் உறவினரும் இணை தயாரிப்பாளருமான அசோக் குமார் கந்துவட்டி பிரச்சினை காரணமாக நேற்று (நவம்பர் 21) மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக பைனான்சியர் மதுரை அன்பு செழியன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருக்கும் ஆர்.பார்த்திபன், தயாரிப்பாளர்கள் சங்கத்தை விமர்சித்து ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோ பதிவில் அவர், “‘அன்பு’ நிறைந்த தயாரிப்பாளர்களுக்கு வணக்கம், அன்பு மட்டுமே நம்மை இணைக்கிற ஒரு சக்தியாக இருக்க முடியும். அசோக் குமாரின் மரணம், நம்முடைய சினிமா கனவுக்குள் பெரிய பாறாங்கல்லை இறக்கிவிட்டுப் போயிருக்கிறது. மனம் பிணமாய் கனக்கிறது. அசோக் குமரைப் போன்று எமோஷனலான, சென்ஸிட்டிவான முடிவெடுக்கக்கூடிய மென்மையான மனிதர்கள் இனி இங்கு ஜீவிக்கவே முடியாது என்பதற்கு இந்த கொலை ஒரு எடுத்துக்காட்டு. இந்த நிலை நீடித்தால் இங்கு கந்து வட்டி மட்டுமே ஜீவிக்கும், கேட்டவர்கள் மட்டுமே ஜீவிப்பார்கள்.
வட்டி வசூலிக்கும் முறை மிகக் கொடுமையானது, தண்டிக்கப்பட வேண்டியது. அதில், எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இந்த பிரச்சினையில் இருந்து நாம் எப்படி வெளிவருவது? அடுத்து நாம் யோசிக்க வேண்டியது அதுதான். ஒரு நபர் மீது குற்றம் சுமத்துகிறோம். இங்கு இன்னொரு விஷயம் இருக்கிறது. கஷ்டமான நேரத்தில் நண்பர்கள் கூட உதவி செய்வதில்லை. வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் தான் கஷ்டமான நேரங்களில் உதவி செய்கிறார்கள் என்பது மனதில் ஆழமாகப் புரியவேண்டிய விஷயம்.
என் அம்மா தாலியை அடகு வைத்திருக்கவில்லை என்றால் என்னால் படித்திருக்க முடியாது. என்னை மாதிரி நிறைய பேர் அடகுக்கடைகள், வட்டிக்கடைக்காரர்களிடம் அவசர ஆத்திரத்துக்கு பணம் கேட்டு வாங்கி அதில் நிறையப்பேர் வாழ்க்கை மாறியிருக்கிறது. ஆனால், நாம் தப்பானவர்களிடமும், கொடியவர்களிடமும் தான் கடன் வாங்குகிறோம் என்பதை கண்டறிந்து வாங்காமல் இருக்க என்ன செய்வது?
வெறும் 20 லட்சம் ரூபாய் கடனுக்காக வளசரவாக்கத்தில் இருந்த 74 லட்சம் மதிப்புள்ள என்னுடைய வீட்டை விற்றுவிட்டு வெளியில் வந்துவிட்டேன், இன்று அதனுடைய மதிப்பு ரூ.7 கோடி. வாங்கிக்கொள்ளலாம்... என்ன இன்னும் சற்று கடுமையாக உழைக்க வேண்டும். சரியான படம் பண்ணினால் நாளைக்கே வாங்கிவிடலாம் என நினைத்து கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஆகிவிட்டது. அதாவது அந்த வீட்டை விற்று 13 வருடங்கள் ஆகிவிட்டது. இப்போதும் என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறாக நினைப்பது அதைத்தான். ஆனால் மனதுக்குள் என்ன சந்தோஷம் என்றால் யாருக்கும் பத்து பைசா பாக்கி வைக்கவில்லை என்பது தான்.
அதேமாதிரி ‘அலுவலகத்தை காலிசெய்ய வேண்டிய சூழ்நிலை’ என்று இயக்குநர் சேரன் சொன்னபோது என்னுடைய அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்ள சொன்னேன். இதை தற்பெருமைக்காக சொல்லவில்லை. நண்பனுக்கு நண்பன் உதவி செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் சொன்னேன். அந்த நோக்கம் மட்டும் வலிமையாக இருந்தால் இந்த பிரச்சினையில் இருந்து மீள முடியும் என்பது என் நம்பிக்கை.எந்தப் பிரச்சினை இருந்தாலும் சங்கத்துக்கு வாங்க தீர்த்து வைக்கிறோம் என்று சொல்கிறோம். ஒரு மனிதன் பிரச்சினையில் இருக்கும்போது தீர்த்து வைக்க முடிகிறதா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. மேலும் உதவ யார் முன்வருவார்கள் என்பது தெரியாமல் இருக்கிறது” என்று தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தை விமர்சிக்கும் பார்த்திபன்
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:30:00
Rating:
No comments: