ம.பி : பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ்!
மத்திய பிரதேச மாநிலம் சித்ரகூட் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில், ஆளுங்கட்சியான பாஜகவைத் தோற்கடித்து காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் சித்ரகூட் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த பிரேம் சிங் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மே மாதம் மரணமடைந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு நவம்பர் 9ஆம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தேர்தலில் ஆளும் பாஜக சார்பாக ஷங்கர்லால் திரிபாதியும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் நிலான்ஷு சதுர்வேதியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் மவுரியா, மத்திய பிரதேச பாஜக தலைவர் நந்தகுமார் சவுகான் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் தீவிரமான பிரசாரத்தை மேற்கொண்டனர். தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் 65 சதவிகித வாக்குகள் பதிவாகின.
தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ம.பி.யின் சாட்னா மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புகளுக்கிடையே இன்று காலை ( நவம்பர் 12) தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆளுங்கட்சி வேட்பாளர் ஷங்கர்லால் திரிபாதியை விட 14,133 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
தேர்தலில் நிலான்ஷூ சதுர்வேதி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 66,810, ஷங்கர்லால் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 52,677 ஆகும். இடைத் தேர்தலில் மத்திய பிரதேச அரசின் ஊழல், மற்றும் மோசமான நிர்வாகத்திறன் குறித்து காங்கிரஸ் பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. பாஜக ஆளும் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
ம.பி : பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:48:00
Rating:
No comments: