வட்டி ஒரு சமூகத்தீமை
"(அதிகமானோர்) வட்டியை உண்ணக்கூடிய அல்லது அதனுடைய புழுதியானது படியக்கூடிய ஒருகாலம் மக்கள் மீது வரும்" நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். நபியவர்கள் கூறிய காலம் என்பது நாம் வாழ்ந்து வருகிற இந்த காலமாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் மனதில் குடியேறுகிறது. ஏனென்றால் இன்றைய காலம் என்பது வட்டியை அடிப்படையாக வைத்து இயங்கக்கூடிய பொருளாதார முறையை கைக்கொண்டுள்ளது. உலக நாடுகள் முதல் உள்ளூர் கிராமங்கள் வரை வட்டி அடிப்படையிலான தொழில் நிறுவனங்களே வியாபித்திருக்கின் றன.
வட்டியில் பங்கெடுக்காமல் தொழில் செய்ய முயற்சிப்போம் என்று பேசுகின்றபோது "அதெல்லாம் பார்த்தா தொழில் செய்ய முடியுமா" என்று பலர் சொல்லியது இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது என் காதுகளில். இப்படிப்பட்ட எண்ணத்தைத்தான் பெரும்பாலானோர் கொண்டிருக்கின்றார்கள். தெரிந்தோ, தெரியாமலோ ஒவ்வொருடைய பொருளாதாரத்திலும் ஏதாவது ஒரு வகையில் வட்டி கலந்துவிடுகிறது. வங்கியில் பணம் சேமிக்கும்போது, வாகனம் வாங்கும்போது, வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கும்போது, கடன்பெறும்போது என இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்.
இஸ்லாத்தை பொறுத்தவரையில் வட்டியை முழுமையாக தடை செய்கின்றது. மற்ற பாவங்களை காட்டிலும் பெரும்பாவமாக வட்டியை குறிப்பிடுகிறது. எந்த அளவிற்கு என்றால் அல்லாஹ்விடம் நேரடியாக மோதுவதற்கு சமமானதாகச் சொல்கிறது. வட்டியை புசிப்பவருக்கு "அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டுவிட்டது" திருக்குர்ஆன் குறிப்பிடுவதை பார்த்தால் அல்லாஹ்விடம் போர் செய்யக்கூடிய நேரடியான எதிரியாக வட்டியில் புரள்பவன் இருக்கிறான் என்பதை அறியமுடிகிறது.
வட்டி கொடுப்பவன் மட்டுமல்ல வட்டி வாங்குபவன், வட்டி கணக்கு எழுதுபவன், வட்டிக்கு சாட்சியாக இருப்பவன் என அதில் பங்கெடுக்கும் அனைவரையும் தவறு செய்தவர்கள் என இஸ்லாம் வரையறுக்கிறது. வட்டியை பற்றி நபிகள் நாயகம் அவர்களின் எச்சரிக்கை கடுமையாக இருக்கிறது. வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபியவர்கள் சபித்துள்ளார்கள் என்றால் அதன் தீவிரத்தை உணர்ந்துகொள்ளமுடியும்.
பெரும்பாவங்களில் ஒன்றாக வட்டி இருக்கின்றது. பேரழிவு ஏற்படுத்தும் பெரும்பாவங்களில் வட்டியும் ஒன்று. நிரந்தர நரகத்திற்கு செல்பவர்கள் பட்டியலில் மூன்றுபேர் இடம்பெறுகிறார்கள் அதில் ஒருவர் வட்டியை உண்பவராக இருக்கிறார். அதேபோல் இறைவன் நான்குபேர்களை சுவர்க்கத்திற்கோ அல்லது அதனுடைய சுகத்தை அனுபவிப்பதற்கோ விடமாட்டான். அதில் இரண்டாமிடத்தில் இருப்பவர் வட்டி வாங்கி தின்றவராவார். இதுபோன்று பல இடங்களிலும் வட்டி குறித்து எச்சரிக்கிறது.
பெரும்பாலும் தன்னிடம் உள்ள பொருளாதாரத்தை பெருக்கவே வட்டிக்கு பணம் கொடுக்கிறார்கள். அப்படி செய்வதின் மூலம் அந்த பொருளாதாரம் பெருகாது. மாறாக பெருகுவதுபோல் தோன்றினாலும் இறுதியில் பல்வேறு வகையில் சிதைந்துதான் போகும். அதனைத்தான் "அந்த செல்வம் குறைந்து (அழிந்தே) விடுகிறது" நபிகள் நாயகம் சுட்டுகிறார்கள். வட்டியை புசிப்பவர்கள் இம்மையிலும், மறுமையிலும் என இரண்டுமுறையும் அதற்கான தண்டனையை சுமக்கவேண்டிவரும்.
மறுமையில் மற்றவர்களிலிருந்து அவர்கள் வேறுபட்டு காணப்படுவார்கள். பைத்தியம் பிடித்தவனாகத்தான் அவர்கள் அங்கு எழுப்பப்படுவார்கள். மற்றவர்களை காட்டிலும் குறைந்த வட்டிதானே வாங்குகிறோம் இப்படி சிலர் மனதாறிக்கொள்கிறார்கள். "ஒரு திர்கம் வட்டி என்பதே 36 முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியது" என நபிகள் நாயகம் குறிப்பிட்டுள்ளார்கள். வட்டியை புசிப்பவர்கள் இதை எண்ணிப்பார்க்க வேண்டும். பெரும்பாவங்களில் ஒன்றாக இருக்கும் வட்டியை தவிர்த்துக்கொண்டு வாழ்வதே சிறந்ததாக இருக்கும். அது எவ்வளவு கடினமாக இருந்தாலும் சரியே. அவர்கள்தான் இறுதியில் வெற்றிபெறுவார்கள்.
- வி.களத்தூர் எம்.பாரூக்
நன்றி : தின இதழ் 17.11.2017
வட்டி ஒரு சமூகத்தீமை
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:49:00
Rating:
No comments: