மீள முடியாத அவசரகதி நடவடிக்கை!
பணமதிப்பழிப்பும் அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியும் அவசரகதியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் எனவும், அவற்றால் ஏற்பட்ட இழப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் தென்படவில்லை எனவும் மன்மோகன் சிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பாகக் கொச்சியில் நவம்பர் 17ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், “முதலில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளைத் தடை செய்த திட்டமே மாபெரும் வரலாற்றுத் தவறாகும். மேலும், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) என்ற திட்டத்தை அவசரகதியில் அமல்படுத்தி மக்களுக்கு மிகப்பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த பிஜேபி அரசு. 2015-16 நிதியாண்டில் 7.2 சதவிகிதமாக இருந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18 நிதியாண்டின் முதல் காலாண்டில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் சிறு நிறுவனங்களும் வர்த்தகர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜிஎஸ்டி சட்டமானது காங்கிரஸ் அரசால் திட்டமிடப்பட்டது. இதை நாங்கள் பொறுமையாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சிந்தித்துச் செயல்படுத்தியிருப்போம். ஆனால் பாஜக அரசு அதை அவசரகதியில் அமல்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி, நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்கவும், தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக முழக்கமிட்டார். ஆனால், மக்களோ கஷ்டத்தைத் தவிர வேறு எதையும் அனுபவிக்கவில்லை. புழக்கத்தில் இருந்த 86 சதவிகித அளவிலான நோட்டுகளைத் திரும்பப்பெற்றதால் கருப்புப் பணம் ஒழியவில்லை; மாறாக விவசாயிகளும் சிறு தொழிலாளர்களுமே தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்” என்றார்.
மீள முடியாத அவசரகதி நடவடிக்கை!
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:02:00
Rating:
No comments: