சீனாவுடன் நதிநீர் ஒப்பந்தம் தேவை!
சீனாவுடன் நதிநீர் பங்கு ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்தியிருக்க வேண்டுமென்று பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா, சீனா இரு நாடுகளுக்கும் இடையே நதிநீர் பங்கு ஒப்பந்தம் இல்லாத காரணத்தால், பிரம்மபுத்திரா நதியிலிருந்து நீரைச் சீனாவின் சிஞ்சியாங் பகுதிக்குத் திசை திருப்பச் சீனா திட்டமிட்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். சீனாவின் சிஞ்சியாங் பகுதி மிக வறட்சியான பகுதியாக உள்ளது. திபெத்தில் இருந்து சிஞ்சியாங் பகுதிக்கு 1000 கிலோமீட்டரில் உலகின் மிக நீளமான குழாய் அமைத்து பிரம்மபுத்திரா நதிநீரை உறிஞ்சிக் கொள்ள சீனா சோதனைகளை நடத்திவருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. சீனாவின் முயற்சிகள் சர்வதேச விதிமுறைகளை மீறுவதாகப் பாதுகாப்பு நிபுணரான உதய் பாஸ்கர் கூறியுள்ளார்.
இதுகுறித்து உதய் பாஸ்கர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “உலகின் நீளமான குழாய் அமைத்து பிரம்மபுத்திரா நதியிலிருந்து நதி நீரைச் சீனா உறிஞ்சிக்கொள்ளவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் வருத்தமளிக்கிறது. பிரம்மபுத்திரா நதி நீரை மேலாண்மை செய்வதற்கு இந்தியா, வங்கதேசம், சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே கூட்டு ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை. இத்திட்டத்தால் நில நடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியமும் இருப்பதாக நில வல்லுநர்கள் கூறுகின்றனர்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் நதிநீர் மேலாண்மை குறித்த ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்த வேண்டும் என்று பாதுகாப்பு வல்லுநரான வி.மகாலிங்கமும் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவுடன் நதிநீர் ஒப்பந்தம் தேவை!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:48:00
Rating:
No comments: