அறம்: சமூக அவலங்களின் பிரதிபலிப்பு!
முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்துவரும் நயன்தாரா பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அறம்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று (நவம்பர் 1) மாலை வெளியாகியது.
சமூகப் பிரச்னைகளுள் ஒன்றான குடிநீர் பஞ்சத்தை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள இதில் மாவட்ட கலெக்டராக அரசியல்வாதிகளை எதிர்க்கும் கேரக்டரில் நயன்தாரா நடித்திருக்கிறார். “அஞ்சாறு மாசமா மழை இல்லாம இருந்தப்பகூட தண்ணீர் பஞ்சம் இல்ல... என்னிக்கு இந்த வாட்டர் பாட்டில் வந்ததோ அன்னிக்கே வந்தது இந்தத் தண்ணீர் பிரச்சனை” என்கிற ஒற்றை வசனத்தின் மூலம் நிகழ்கால அரசியலை ஒரு சாமானியனின் மனநிலையைப் பிரதிபலிக்குமாறு அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் இயக்குநர் கோபி நயினார்.
அரசியல்வாதிகளைச் சாடும் வகையில் பல வசனங்கள் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக நயன்தாரா பேசும், “பணம் ரெண்டு பேரத்தான் உருவாக்கும். ஒண்ணு, அடிமைகளை உருவாக்கும். இன்னொண்ணு எஜமான்களை உருவாக்கும். ஒருபோதும் மனிதர்களை அது உருவாக்காது” என்று நயன்தாராவின் வாயிலாக கம்யூனிச சித்தாந்தங்களைப் பேச வைத்துள்ளார் இயக்குநர். ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகளும் வசனங்களும் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளன.
கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் `காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ், ரமேஷ் மற்றும் வேல ராமமூர்த்தி, ராம்ஸ், சுனு லெட்சுமி, வினோதினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் ஜிப்ரான் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ள அறம் திரைப்படம் நவம்பர் 10ஆம் தேதி வெளிவரவுள்ளது.
அறம்: சமூக அவலங்களின் பிரதிபலிப்பு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:44:00
Rating:
No comments: