இந்தியா பண மோசடி நாடல்ல!
இந்தியாவுக்குப் ‘பண மோசடி நாடு’ போன்ற பெயரை ஏற்படுத்த வேண்டாம் என்று அமெரிக்க கருவூலத்துக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் வலியுறுத்தியுள்ளார்.
அக்டோபர் மாதம் 17ஆம் தேதி அமெரிக்கக் கருவூலம், ‘இந்தியாவின் அந்நிய செலாவணி மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்’ என்று கூறியிருந்தது. சி.என்.பி.சி. ஊடகத்துக்கு இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் அளித்த பேட்டியில் கூறும்போது, “அமெரிக்கக் கருவூலம் இதைச் செய்யும் என்று நான் கருதவில்லை. ஆனால், அவ்வாறு நினைப்பதுகூடத் தகாதது” என்று கூறியுள்ளார்.
அமெரிக்கக் கருவூலம் அளித்துள்ள அறிக்கையில், “இந்தியாவின் அந்நியச் செலாவணி 2017ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வேகமாக அதிகரித்துள்ளது. 2016 ஜூன் முதல் 2017 ஜூன் வரையில் 1.8 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையைப் பொறுத்தவரையில் ஜூன் மாதத்தோடு முடிந்த காலாண்டில் அதன் மதிப்பு ரூ.92,000 கோடிக்கும் அதிகமாக உள்ளது”என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரகுராம் ராஜன் கூறும்போது, “நடப்புக் கணக்குப் பற்றாக்குறை எண்ணெய் விலை உயர்வைப் பாதிக்கும். இதைப் பாதுகாக்க இந்தியா போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
தற்போது ரகுராம் ராஜன் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநராக ரகுராம் ராஜன் நியமிக்கப்படலாம் என்று பாரோன்ஸ் பத்திரிகை கருத்து தெரிவித்திருந்த நிலையில் சின்.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் ரகுராம் ராஜன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா பண மோசடி நாடல்ல!
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:12:00
Rating:
No comments: