நான் அரசியலுக்கு வந்ததற்கு காரணம்?
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாள் இன்று (நவ.19 ) கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், கோவை சிவானந்தா காலனியில் இந்திரா காந்தி நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ மற்றும் எஸ்.டி.பி.ஐ, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய ஸ்டாலின், நான் முழுமையாக அரசியலுக்கு வருவதற்குக் காரணம், 1975ம் ஆண்டு நாட்டில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலைதான். 1976ம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, 500க்கும் மேற்பட்ட திமுகவினர் மிசா கைதிகளாகக் கைது செய்யப்பட்டு சிறை கொட்டகைகளில் அடைக்கப்பட்டார்கள். அப்படி அடைக்கப்பட்ட 500 பேர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.
ஓராண்டு காலம் சிறையில் இருந்து வந்த அனுபவத்தில், முழுவதுமாக அரசியலுக்கு வருவதற்கு அதுவொரு உந்து சக்தியாக இருந்தது. அதற்கு இந்திரா காந்தி காரணமாக இருந்திருக்கிறார் என்று குறிப்பிட்டார்.
கோவையில் அதிகாரிகளை அழைத்து ஆளுநர் ஆலோசனை நடத்தியது மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல் எனக் குறிப்பிட்ட ஸ்டாலின், மாநில உரிமைகளைக் காக்க, மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சியும், மாநிலத்தில் ஊழலற்ற ஆட்சியும் அமைய வேண்டும் என்று தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில், கருணாநிதியை மோடி பார்த்ததில் தவறில்லை. ஒரு மூத்த தலைவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது அவரைப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால், தனது தோழி என்று சொல்லிக் கொண்டிருந்த ஜெயலலிதா 73 நாள்கள் மருத்துவமனையில் இருந்தும் ஒரு முறை கூட அவரை மோடி பார்க்கவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். ஜெயலலிதா கோமாவில் படுத்தபோதே தமிழக அரசும் கோமாவில் படுத்துவிட்டது எனவும் விமர்சித்தார்.
மதவாத சக்திகளிடமிருந்து தேசத்தைக் காப்பாற்ற, காங்கிரஸும் இடதுசாரிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முன்வைத்தார். இது வரலாற்றுத் தேவையாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மோடிக்கு நன்றி தெரிவித்து தனது பேச்சை தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன், “ மோடி மூலம் தான் இத்தனை தலைவர்களும் இங்கு ஒன்று சேர்ந்துள்ளோம்” என்று விளக்கமளித்தார்.
காங்கிரஸ்- இடதுசாரி கட்சிகள் பிளவுபட்ட வேளையில், வேலி பிரிந்தது கருநாகம் நுழைந்தது என மோடியின் வெற்றி குறித்து விமர்சித்த அவர், மோடியின் ஆட்சியில் நாடு கேட்டுப்போய் விட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
நான் அரசியலுக்கு வந்ததற்கு காரணம்?
Reviewed by நமதூர் செய்திகள்
on
02:58:00
Rating:
No comments: