தவறிழைத்த தேர்தல் ஆணையம்!
குஜராத் மாநில தேர்தல் தேதி ஒருவழியாக அறிவிக்கப்பட்டுவிட்டது. டிசம்பர் 09 மற்றும் 14 ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இமாச்சல பிரதேசத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே குஜராத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தால் விமரிசனங்கள் எதிர்கொள்வதை தேர்தல் ஆணையம் தவிர்த்திருக்கலாம். அதன் தவறான போக்கால் இன்று பலதரப்பிடமும் விமர்ச்சனங்களை எதிர்கொண்டுள்ளது. அதன் நம்பகத்தன்மையும் பாதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி தன்னாட்சிப் பெற்ற அமைப்பாகும். உள்ளாட்சி தேர்தல் முதல் நாட்டின் உயர்ந்த பதவியான ஜனாதிபதி தேர்தல் வரை அவற்றை நடத்தும் மிகப்பெரும் பொறுப்பு அதற்கு இருக்கிறது. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும் மக்களின் நம்பிக்கைக்கு உரிய அமைப்பாக இருக்கின்றது.
ஆனால் சமீபகாலமான நடவடிக்கைகள் அதன் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டன. இமாச்சல பிரதேசத்திற்கும், குஜராத்திற்கு வரும் ஜனவரி மாதத்துடன் சட்டமன்ற பதவிக்காலம் முடிகிறது. இந்த இரண்டு மாநிலங்களுக்கும் ஒன்றாகத்தான் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் இமாச்சல பிரதேசத்திற்கு நவம்பர் 09 ம் தேதி வாக்குப்பதிவும், டிசம்பர் 18 ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று அறிவித்துவிட்டு, குஜராத்திற்கு 'குஜராத் அரசின் வேண்டுகோளுக்கிணங்க' தேர்தல் தேதியை அறிவிக்காமல் காலம் தாழ்த்தியது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் குஜராத்திற்கு அறிவித்துக்கொண்டன.
தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். குஜராத் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் .தள்ளிப்போட்டது மிகத்தவறான முடிவாகும். இதுபோன்ற சம்பவம் முதல் முறையாக இப்போதுதான் நிகழ்கிறது. இது ஜனநாயக அமைப்பை கேலிக்கூத்தாக்குகிறது. தேர்தல் ஆணையத்தின் இப்போக்கு பல அதிர்வுகளையும், அதிர்ச்சிகளையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர்கள்கூட தேர்தல் ஆணையத்தின் செயலை வெளிப்படையாக விமர்ச்சனம் செய்தார்கள்.
"பிரதமர் மோடி தனது இறுதி கட்ட பிரச்சாரத்தில் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையம் அதிகாரத்தை வழங்கியுள்ளது. மாநிலத்தில் அனைத்து இலவச திட்டங்களும் வழங்கப்பட்ட பிறகு தேர்தல் ஆணையம் தனது விடுமுறையை முடித்துக்கொண்டு தேர்தல் தேதியை அறிவிக்கும்" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாகவே விமர்ச்சித்திருக்கிறார். அவர் யூகித்ததுபோலவே நடைபெற்றுள்ளன. குஜராத்திற்கு சென்று பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி துவங்கி வைத்து இரண்டு நாட்கள் கழித்து அதற்காகவே காத்திருந்ததுபோல் தேர்தல் தேதியை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்.
இது போன்ற செயல்பாடுகள் மக்கள் மத்தியில் தேர்தல் ஆணையத்தின் மேல் உள்ள நம்பிக்கையை குலைக்கச் செய்யும். ஏற்கனவே வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறுகள் நடக்கின்றன என்ற பிரச்சாரம் மக்களை சென்றடைந்து வருகிறது. தற்போது இந்த பிரச்சனை. இது தேர்தல் மீதான, தேர்தல் ஆணையத்தின் மீதான மக்களின் பார்வையை மாற்றி அமைத்துவிடும்.
குஜராத்தில் 7 மாவட்டங்களில் வெள்ளம் தாக்கியிருக்கிறது. பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கான நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால்தான் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமாக இல்லை. ஜம்மு-காஸ்மீர் ஒப்பீட்டளவில் இதைவிட பெரிய வெள்ளத்தில் தத்தளித்தபோதுகூட அங்கு தள்ளிப்போடாமல் உடனடியாக தேர்தல் நடைபெற்றது.
குஜராத்தில் இருந்து வருகிற செய்திகளை பார்க்கிறபோது அங்குள்ள மக்கள் பாஜகவிற்கு ஆதரவாக இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. கருத்துக்கணிப்புகள் பாஜகவிற்கு ஆதரவாக இருந்தாலும் பாஜக பதட்டப்படுவது அதனால்தான். "தோல்வியிலிருந்து தப்பிப்பதற்காக பாஜகவிற்கு கூடுதல் அவகாசத்தை தேர்தல் ஆணையம் வழங்கி இருக்கிறது" என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மை நிறைந்திருக்கிறது. தேர்தல் தேதியை அறிவிப்பதற்கே ஆளுகின்றவர்களுக்கு சாதகமாக நடந்துகொள்ளும் தேர்தல் ஆணையம் எப்படி தேர்தலை நடுநிலைமையுடன் நியாயமாக நடத்தும் என்று கேள்வி எழுப்புவதை தவிர்க்கமுடியவில்லை.
தேர்தல் ஆணையத்தின் மீதான கரும்புள்ளியாக இந்த நடவடிக்கை அமைந்துவிட்டது. இனிவரக்கூடிய காலங்களிலாவது தேர்தல் ஆணையம் யாருடைய நிர்பந்தத்திற்கும் உட்படாமல் செயலாற்ற வேண்டும். இல்லையென்றால் மக்களின் நன்மதிப்பை இழந்துவிடும். அது நிகழ்ந்தால் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மக்களே வெகுண்டெழுந்து போராடுவார்கள்.
- வி.களத்தூர் எம்.பாரூக்
தவறிழைத்த தேர்தல் ஆணையம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:15:00
Rating:
No comments: