கலைஞரை பார்த்ததும் அவன் உடல் சிலிர்த்தது - மு. உமர் முக்தார்



திமுக தேர்தலில் தோற்றிருந்த நேரம் அது. கட்சியின் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் மாபெரும் பொதுக்கூட்டம். அவனது தந்தை திமுககாரர். திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். திமுகவின் பல கூட்டங்களுக்கு செல்வதில் அதிக ஈடுபாட்டை கொண்டிருந்தார். தனியாக செல்லாமல் எப்போதும் ஒரு கூட்டத்தை திரட்டி வாகனத்தை ஏற்பாடு செய்து எல்லோரையும் அழைத்து செல்வதில் முனைப்பு காட்டுவார்.

கூட்டங்களுக்கு செல்லும்போது தனது பையனையும் எப்போதாவது அழைத்து செல்வார். அப்படிதான் திருச்சியில் நடைபெற்ற அந்த கூட்டத்திற்கும் அழைத்து சென்றார். அவனுக்கு கட்சி கூட்டத்திற்கு செல்கிறோம் என்பதைவிட ஊருக்கு வாகனத்தில் செல்வதால் புது உற்சாகம். வாகனம் புறப்பட்டுவிட்டது. சிறிது தூரம்தான் சென்றிருக்கும் அதற்குள் தூங்கி வழிகிறான். இடையில் எங்கோ வாகனம் நின்றிருப்பதுபோல் தோன்றியது. இருந்தும் தூக்கத்தை அவன் தொலைக்கவில்லை. கண்மூடி உறங்குகின்றான். "ஊர் வந்திருச்சு எழுந்திருப்பா" அப்பாவின் குரல் கேட்டது. கண் திறந்து பார்த்தான். எல்லோரும் வாகனத்திலிருந்து இறங்கி கொண்டு இருந்தனர். ஜன்னல் வழியாக பார்த்தான். அந்த இரவு நேரத்திலும் திருச்சி பளிச்சென்று மின்னியது. ஒரே பரவசம். துள்ளலுடன் எழுந்தான். மகிழ்ச்சி கொள்கிறது அவனது மனம்.

டீக்கடைக்கு சென்று அனைவரும் டீ குடித்தார்கள். அவனும் சூடாக இருந்த டீயை மெதுவாக அருந்தினான். பக்கத்தில் பலரும் மாலை பேப்பரை வாங்கி படித்துக்கொண்டிருந்தனர்.. "வட சாப்புடுறியா" அப்பா கேட்க மண்டைய வேண்டாம் என்பதுபோல் ஆட்டினான். சாக்லேட் வாங்கி கொடுத்தார். மறுக்கவில்லை வாங்கிக்கொண்டான். அந்த சாலையின் இருபுறமும் கலைஞரை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. கலைஞரின் பல புகைப்படங்கள் வித்தியாசமாக இருந்ததை அவன் கவனித்தான். அந்த பேனரில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை எழுத்துக்கூட்டி மனதினுள் படித்துக்கொண்டிருந்தான். "போலாமா" அப்பா சொல்ல அனைவரும் கிளம்பினர். அவனும் கிளம்பினான். 

என்ன கூட்டம்னு சொன்னாங்க இங்க ஹோட்டலுக்கு அழைச்சிட்டு வந்திருக்காங்க. ஒருவேளை சாப்பிடவோ என்று எண்ணிக்கொண்டான். கட்சி வேட்டி அணிந்திருந்த பலரும் நாலாபக்கமும் குழுமிருந்தனர். சிறுசிறு குழுவாக நின்றுகொண்டு தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தவர்கள் திடீரென ஹோட்டலின் முன் வாசலை நோக்கி நகர்ந்தனர். ஹோட்டலின் நுழைவு வாயிலையே பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போதுதான் அவனுக்கு உரைத்தது ஓ கலைஞர் இங்குதான் தங்கி இருக்கிறார்போல என்று நினைத்துக்கொண்டான். 

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல கலைஞர் வருவதற்கு முன் முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் வெளியே வந்துகொண்டே இருந்தனர். அவனின் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டு சின்ன இடைவெளி இருந்த இடத்திற்கு அப்பா வேகமாக அழைத்து சென்றார். விசாலமான அந்த ஹோட்டல் சிறிது நேரத்திற்குள் நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டது. வழி வழி வழிவிடுங்கய்யா கத்திக்கொண்டே எல்லோரையும் பின்னோக்கி தள்ளினார் ஒருவர். பார்த்துவிட்டுத்தான் போவோம் என்று விடாப்பிடியாக நின்றிருந்தார்கள் அங்கிருந்தோர். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. எல்லோரும் எதிர்பார்த்த அந்த தலைவர் தனது அறையிலிருந்து பொதுக்கூட்டத்திற்கு செல்வதற்காக ஹோட்டலிலிருந்து வெளியே வந்தார்.

மஞ்சள் துண்டு, கருப்பு கண்ணாடி, முகத்தில் புன்சிரிப்புடன் வழுக்கையான தலையை தனது கையால் சீவியபடி கம்பீரமாக வெளியே வந்தார். இரவிலும் சூரியன் உதித்ததுபோல் இருந்தது. அவரது நடை ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தது. திருச்சி நேருவின் தோள்மீது கைவைத்து நடந்து வந்தார். அந்த காட்சி அவனது உடலை சிலிர்க்க வைத்தது. பேப்பரிலும், டிவியிலும் பார்த்த அந்த முகத்தை நேரில் பார்த்தவுடன் அவனுக்கு குதூகலம் ஏற்பட்டது. கலைஞரை அருகில் பார்த்ததை ஊருக்கு போனவுடன் தனது நண்பர்களிடம் எல்லாம் சொல்ல வேண்டும் அவனது மனது நச்சரித்து. கலைஞர் முழுவதுமாக வெளியே வந்துவிட்டார் அவரைப் பார்த்தவுடன் அங்கு கூடி இருந்த தொண்டர்கள் உற்சாகம் கொண்டனர். "கலைஞர் வாழ்க, தமிழினத் தலைவர் கலைஞர் வாழ்க, டாக்டர் கலைஞர் வாழ்க" வாழ்த்து கோசம் விண்ணை தொட்டது. கூட்ட நெரிசலில் அவனுக்கு மூச்சு முட்டியது. அருகிலேயே கலைஞரை பார்த்ததும், அங்கு எழுப்பப்பட்ட வாழ்த்து கோசத்தை கேட்டதும் அவன் உடல் என்னவோ செய்வதை உணர்ந்தான். 

உணர்ச்சி நரம்புகள் சிலிர்க்கும் கிளர்ச்சியில் உடல் சிலநொடிகள் நடுங்கியது. அவனுக்கும் கோசம் போடவேண்டும் போல இருந்தது. அப்பா திட்டுவாரோ என பயந்து அந்த ஆசையை அமுக்கிக்கொண்டான். கலைஞர் ஹோட்டலில் இருந்து திடலை நோக்கி சென்றதும் அங்கு கூடிருந்த எல்லோரும் ஒவ்வொருவராக தங்களது வாகனங்களில் ஏறி செல்ல துவங்கினர். அவனும் தனது அப்பாவுடன் வாகனத்தில் ஏறினான். வாகனம் மெதுவாக சென்றது. வழியெங்கும் கூட்டங்கள் அலைமோதியது. இப்படி ஒரு கூட்டத்தை அவன் இதற்கு முன் பார்த்ததில்லை. உழவர் சந்தை திடலுக்கு வருவதற்குள் பொதுக்கூட்டம் ஆரம்பித்து விட்டது. 

ஒருவழியாக திடலுக்கு நுழைந்து விட்டான். எப்படியாவது மேடையில் இருக்கும் தலைவர்களை பார்க்க வேண்டும் என்று அப்பா அவன் கையை பிடித்துக்கொண்டு வேகமாக மேடையை நோக்கி அழைத்து சென்றார். இருந்தும் மேடையின் முன் செல்ல இயலவில்லை. தூரத்திலிருந்தே பார்த்தான். மேடையில் இருந்த தலைவர்கள் சிறியதாகத்தான் தெரிந்தார்கள். அவர்கள் போகும்போதே மேடையில் இருப்பவர்கள் யார்யாரோ பேசிக்கொண்டிருந்தனர். பலரும் திடலுக்கு அருகில் உள்ள கடைகளில் பசியாறிக்கொண்டிருந்தனர். திடல் நிரம்பி வழிந்தது. கலைஞரின் புகைப்படம் இருக்கும் பதாகைகளை பலரும் கைகளில் தூக்கிக்கொண்டு நின்றிருந்தனர். யாருக்காக மக்கள் அங்கு கூடினார்களோ, யார் பேச்சை கேட்க ஆவல் கொண்டிருந்தார்களோ அவர் மைக் முன் வந்தார். சிறிது நேரம் பேசவில்லை. சுற்றியும் கூட்டத்தை கவனித்தார். மைக்கை தனது விரலால் தட்டினார்.

கரகரத்த குரலில் மழை பொழிய ஆரம்பித்தது. ஆம் அவர் பேச துவங்கினார். ஒவ்வொரு பெயரையும் சொல்லிக்கொண்டே வந்தவர் சிறுது இடைவெளி விட்டு இப்படி தொடர்ந்தார் "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே" என்று சொன்னதுதான் தாமதம் கூட்டம் ஆர்ப்பரித்து எழுந்தது. அருகில் இருந்தவர்கள் எல்லாம் ஏதோ கலைஞர் தன் பெயரை சொல்லி அழைத்து போல ஆனந்தக்  கூத்தாடினர். அவர் பேசினார் பேசினார் பேசிக்கொண்டே இருந்தார். ஆனால் அவனது காதில் எதுவும் விழவில்லை.  "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே" என்று கலைஞர் சொன்னதும், தொண்டர்கள் எழுப்பிய கரகோசமும் அவன் மனதில் நிரம்பி  நிழலாடிக் கொண்டே இருந்தது. கூட்டம் முடிந்து வீடு வரைக்கும் அதன் நினைவுகள் மறையவில்லை. அதன் பிறகுதான் கலைஞரின் தாக்கம் அவனிடத்தில் குடிகொண்டது. கலைஞர் பற்றிய செய்திகளையும், திமுக பற்றிய செய்திகளையும் தேடித்தேடி படித்தான். வீட்டிற்கு வந்து பிரிக்கப்படாமல் கிடக்கும் முரசொலியை படிக்க ஆரம்பித்தான். கட்சி நிகழ்ச்சிகள் மாத்திரமே பெரும் பகுதியை ஆக்கிரமித்திருந்தது. அதை படிக்க அவன் விரும்பவில்லை. முதல் பக்கத்தில் இருக்கும் கலைஞரின் கடிதத்தையும், அறிக்கையையும் விடாமல் படித்தான். கலைஞர் என்ற ஆளுமையை அவனுக்கு தெரியாமலேயே நேசிக்க துவங்கினான். கலைஞர் வழியாகவே பெரியாரையும், அண்ணாவையும் படித்ததால் அவரை நன்றி குரியவராகவே பார்க்கிறான். அவன் திமுகவில் இல்லைதான். ஆனால் திமுகவும், கலைஞரும் தமிழ் சமூகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் என்றே கருதுகிறான்.

சிறுவயது முதலே கலைஞரை மாபெரும் தலைவராக, போராளியாக, ஆளுமையாக பார்த்து பரவசம் அடைந்த அவன் வேறு யாருமல்ல. இந்த கதையை உங்களிடத்தில் சொல்லிக்கொண்டு இருப்பவன்தான்.

- மு. உமர் முக்தார்
கலைஞரை பார்த்ததும் அவன் உடல் சிலிர்த்தது - மு. உமர் முக்தார் கலைஞரை பார்த்ததும் அவன் உடல் சிலிர்த்தது -  மு. உமர் முக்தார் Reviewed by நமதூர் செய்திகள் on 01:30:00 Rating: 5

No comments:

Powered by Blogger.