கேரளாவில் ஒரு பெருமாள்முருகன்
மாதொரு பாகன் என்ற நாவலுக்காக தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் மீது சில ஆண்டுகளுக்கு முன், நடத்தப்பட்ட கருத்துத் தாக்குதல்களும், அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் ஏவப்பட்ட நெருக்கடிகளும் தமிழக இலக்கிய, அரசியல் வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தின.
இப்போது கேரளாவிலும் இதேபோன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளது. மலையாளத்தின் புகழ் பெற்ற வார இதழான ‘மாத்ருபூமி’யில், சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் ஹரிஷ், ’மீஷா’ என்ற தலைப்பில் ஒரு நாவலை எழுதிவந்தார். அரை நூற்றாண்டுக்கு முன்னர் நடந்த சம்பவங்கள் தொடர்பான அந்த நாவலில் பெண்கள் கோயிலுக்கு அலங்காரம் செய்துகொண்டு போவது பற்றியும் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சங் பரிவாரங்களும், பாஜகவின் இளைஞரணியினரும் மாத்ருபூமி பத்திரிகை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். ‘மீஷா’நாவலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
போராட்டம் கடுமையானதால் கடந்த சனிக்கிழமை, மாத்ருபூமி பத்திரிகையில் வெளிவந்த மீஷா நாவலை நிறுத்திக் கொள்வதாக எழுத்தாளர் ஹரிஷ் அறிவித்தார்.
தமிழகத்தில் இருந்து மாறுபட்ட நிலையாக கேரள அரசாங்கமே இந்த விவகாரத்தில் எழுத்தாளர் ஹரீஷை ஆதரிக்கிறது. கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் சுதாகரன், ‘மதவாத சக்திகளின் எதிர்ப்புக்கு அஞ்சி, ஹரிஷ் தன் நாவலை நிறுத்திக் கொள்ளக் கூடாது’ என்று வேண்டுகோள் விடுத்தார். கேரள எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரசைச் சேர்ந்த ரமேஷ் சென்னிதாலாவும், ஹரிஷுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, “ஹரிஷ் மீது சமூக தளங்களில் தாக்குதல் தொடுத்தவர்களையும், அச்சுறுத்தியவர்களையும் கேரள அரசு சட்ட ரீதியாக தண்டிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
எழுத்தாளர் ஹரிஷுக்கு கேரளா தாண்டி தமிழகத்தில் இருந்தும் ஆதரவுக் குரல்கள் எழுந்துள்ளன.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இன்று (ஜூலை 25) அதன் தலைவர் சு.வெங்கடேசன், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ஹரிஷை இந்த முடிவுக்கு நெட்டித் தள்ளிய சகிப்பின்மை குண்டர்களுக்கு எதிராக நாடெங்கும் இருந்து ஒலிக்கும் கண்டனத்தில் தமுகஎசவும் இணைந்துகொள்கிறது.
மக்களாட்சி மாண்புகளில் ஒன்றாக கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஒடுக்கும் போக்கினை அனுமதிக்க முடியாது என்றும் , எழுத்தாளர் ஹரிஷின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ள கேரள அரசு அறிவித்துள்ளது நம்பிக்கை அளிக்கிறது.ஹரிஷ் தனது எழுத்துப் பணியை முன்னிலும் காத்திரமாகத் தொடரவேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கேரள மக்கள் விரும்பினால், ‘மீஷா’ நாவல் புத்தகமாக வெளிவரும் என்று அறிவித்திருக்கிறார் எழுத்தாளர் ஹரிஷ்.
கேரளாவில் ஒரு பெருமாள்முருகன்
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:00:00
Rating:
No comments: