லோக் ஆயுக்தா அல்ல, ஜோக் ஆயுக்தா!
லோக் ஆயுக்தா சட்ட மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இது லோக் ஆயுக்தா அல்ல, வெறும் ஜோக் ஆயுக்தா என்று அறப்போர் இயக்கம் விமர்சனம் செய்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் கெடு நாளையுடன் முடிவடையும் நிலையில், லோக் ஆயுக்தா மசோதாவை நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சட்டமன்றத்தில் இன்று (ஜூலை 9) தாக்கல் செய்தார்.
மசோதாவின் அம்சங்கள் குறித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ஏற்கனவே லோக் ஆயுக்தா செயல்பாட்டில் உள்ள மாநிலங்களில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்து அதன் பின்னர் தான் தமிழகத்தில் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் என அனைவரும் லோக் ஆயுக்தா வரம்புக்குள் வருவர். லோக் ஆயுக்தா எத்தகைய பதவியில் இருப்பவர்களையும் விசாரிக்க யாருடைய முன் அனுமதியையும் பெறவேண்டிய அவசியம் இல்லை. எவராயினும் சட்டத்திற்கு முன் சமம். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினால் அனைவரும் விசாரிக்கப்படுவர். லோக் ஆயுக்தா தலைவர் தவறு செய்தாலும், அவரை நீக்கும் அதிகாரமும் மசோதாவில் இடம் பெற்றுள்ளது” என்று குறிப்பிட்டார்.
மசோதா மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை கொண்டு வந்ததில் மகிழ்ச்சி. லோக் ஆயுக்தா அமைப்பை சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும். மசோதாவில் திருத்தங்கள் தேவைப்படுவதால் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்” என்று வலியுறுத்தினார். ஆனால் மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பத் தேவையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.
இதனைக் கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். ஆனால் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு இருந்த நிலையில், மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
பல் இல்லாத லோக் ஆயுக்தா
வெளிநடப்புக்குப் பின் செய்தியாளர்களிடத்தில் பேசிய ஸ்டாலின், “உச்ச நீதிமன்றத்துக்கு பயந்து கெடு முடியும் கடைசி நாளான இன்று அவசர அவசரமாக லோக் ஆயுக்தா மசோதாவை நிறைவேற்ற முன்வந்தனர். இருந்தாலும் இதற்கு திமுகவின் சார்பில் நாங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தோம். ஆனால் மசோதாவில் பல குளறுபடிகள் உள்ளன. உதாரணமாக அரசு ஒப்பந்தங்களில், பணி நியமனங்களில் ஊழல் நடந்தால் அதுகுறித்த புகாரை லோக் ஆயுக்தா விசாரிக்க முடியாது. உள்ளாட்சி அமைப்புகளில் இருப்பவர்கள் மீதான புகார்களையும் விசாரிக்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில் பல் இல்லாத லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவைத் தாக்கல் செய்துள்ளனர். எவ்வித அதிகாரமுமில்லாத ஒரு அமைப்பாக இது ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே தேர்வுக் குழுவுக்கு அனுப்பி அங்கு முடிவு செய்து மசோதாவை நிறைவேற்றலாம் என்று கோரிக்கை வைத்தேன். அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று தெரிவித்தார்.
”எதிர்க்கட்சித் தலைவர் கூறி மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பினால் அவமானம் என்று நினைத்துக் கொண்டார்களா அல்லது லோக் ஆயுக்தா வந்துவிட்டதென்றால் பிற்காலத்தில் தாங்கள் மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் கூட அனுப்பாமல் இருந்திருக்கலாம் என்று கருதுகிறேன்” என்றும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஜோக் ஆயுக்தா
லோக் ஆயுக்தாவிடம் பொய்யான புகார் அளித்தால் 1லட்சம் ரூபாய் அபராதமும், 1வருட சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதனை சுட்டிக் காட்டியுள்ள அறப்போர் இயக்கம் ”இது புகார் அளிப்போரை அச்சுறுத்தும் முயற்சி என்று” விமர்சனம் செய்துள்ளது.
“லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பரிந்துரைக் குழுவில் முதல்வர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இடம் பெற்றுள்ளனர். எனவே தேர்வுக் குழுவில் எப்போதும் ஆளுங்கட்சியின் கையே ஓங்கியிருக்கும். இது லோக் ஆயுக்தா அல்ல, வெறும் ஜோக் ஆயுக்தா” என்றும் அறப்போர் இயக்கம் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
லோக் ஆயுக்தாவில் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு இணைக்கப்படாததைச் சுட்டிக்காட்டி, ”தமிழகத்தில் இனி ஊழலை ஒழிக்க இரண்டு அமைப்புகள். ஆனால் இரண்டும் ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும். யார் எந்த வழக்கை விசாரிப்பது என்று முடிவெடுப்பதில் குழப்பிக்கொண்டே இருப்பார்கள்” என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
லோக் ஆயுக்தா அல்ல, ஜோக் ஆயுக்தா!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:46:00
Rating:
No comments: