அடக்குமுறை: முதல்வரைச் சந்திக்கும் ஊடகக் கூட்டணி!
தமிழ்நாட்டு அரசியலில் எத்தனையோ கூட்டணிகளை ஊடகங்கள் உருவாக்கியிருக்கின்றன, ஊடகங்கள் உடைத்திருக்கின்றன. ஆனால் ஊடகங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயம் இன்றைய அரசியல் சூழலால் ஏற்பட்டிருக்கிறது.
தமிழக அரசுக்கு எதிராக செய்திகள் வெளியிடும் தொலைக்காட்சிகளுக்கு மிரட்டல் விடப்படுவதை ஒட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கடந்த ஜூன் 25ஆம் தேதியே மின்னம்பலத்தில், டிஜிட்டல் திண்ணை பகுதியில் தமிழக அரசுக்கு எதிராக சேனல் அதிபர்கள் கூட்டம்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன்படி தமிழக அரசின் போக்கை எதிர்த்து சென்னை காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியில் ஜூலை 1 ஆம் தேதி ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
‘ஊடக கலந்தாய்வு: உரிமைகளும் பொறுப்புகளும்’ என்ற பெயரில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் தலைமை வகித்தார். ‘தி இந்து’ வெளியீட்டாளர் என்.ரவி, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழின் ஆசிரியர் அருண்ராம், மக்கள் தொலைக்காட்சி ஆலோசகர் சவுமியா அன்புமணி, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் எஸ்.கார்த்திகைசெல்வன், கலைஞர் தொலைக்காட்சி பொது மேலாளர் ஃப்ளோரன்ட் சி.பெரேரா, சத்தியம் தொலைக்காட்சி பொது மேலாளர் சாமிநாதன், மூத்த பத்திரிகையாளர் அ.குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் காயிதே மில்லத் ஊடக அகாடமியின் நிறுவனர் தாவூத் மியாகானும் கலந்துகொண்டார். கூட்டத்தில் ‘ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி’ என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் ஒருங்கிணைப்பாளராக பத்திரிகையாளர் பீர் முகமது தேர்வு செய்யப்பட்டார்.
இந்தக் கூட்டணி சார்பில் வெளியிடப்படுள்ள அறிக்கையில்,
“ தமிழக அரசு ஊடகங்களுக்கு எதிரான தனது போக்கில் புதிய தாழ்வைத் தொட்டுள்ளது. அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிட வேண்டாம் என்று ஊடக நிறுவனங்களுக்கு தமிழக அரசின் சார்பில் வாய்மொழியாக தகவல்கள் அனுப்பப்படுகின்றன. மக்கள் பிரச்னைகளை தீவிரமாக பேசும் விவாத நிகழ்ச்சிகள், நேரடி ஒளிபரப்புகள் ஆகியவற்றை செய்யும் சேனல்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அரசு கேபிள் மூலம் வேறொரு அழுத்தம் தரப்படுகிறது.
மக்கள் பிரச்னைகளை பேசுவதால் ’குற்றம் இழைத்த’ சேனல்கள் அரசு கேபிள் விநியோகப் பொறிமுறையில் பின்னோக்கிய அலைவரிசைகளுக்குத் தள்ளப்படுகின்றன. சமீபத்தில் கோவையில் புதிய தலைமுறை சேனல் நடத்திய வட்டமேஜை ஆய்வுக் கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளுக்காக அந்த சேனல் நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த சேனலின் அரசு கேபிளின் வரிசை எண் 124ல் இருந்து 499க்கு மாற்றப்பட்டது.
இத்தகைய அச்சுறுத்தல்கள், அரசியல் சாசனத்தின் 19-வது பிரிவு உறுதிப்படுத்தியுள்ள அடிப்படை உரிமையான பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. தொலைக்காட்சி கேபிள் சேனல்களைத் தணிக்கை செய்வதற்கு தமிழக அரசின் கேபிள் விநியோக நிறுவனத்தை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். செய்தி ஊடகங்கள், பத்திரிகையாளர்களுக்கு எதிரான வழக்குகளை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பிரச்னைகள் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அச்சு, காட்சி, டிஜிட்டல் ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டாக சென்று சந்திப்பது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அடக்குமுறை: முதல்வரைச் சந்திக்கும் ஊடகக் கூட்டணி!
Reviewed by நமதூர் செய்திகள்
on
05:06:00
Rating:
No comments: