எதிர்ப்புகளை மீறி இடம் மாறிய சட்டக்கல்லூரி!
சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் வக்கீல்களின் எதிர்ப்புகளையும் மீறி, சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி திருப்போரூர் அருகேயுள்ள புதுப்பாக்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னையின் பெருமை சேர்க்கும் கட்டடங்களில் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பாரம்பரிய கட்டடத்தில்தான் 127 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது அரசு சட்டக் கல்லூரி. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் உயர் நீதிமன்ற வளாகத்தின் அருகிலேயே சட்டக் கல்லூரி இருந்ததால் சட்ட மாணவர்கள் எளிதாக நீதிமன்ற நடவடிக்கைகளை கற்றுக்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இடம் பற்றாக்குறை காரணமாக, அம்பேத்கர் சட்டக் கல்லூரி இந்த கல்வியாண்டு முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதுப்பாக்கத்திலும், திருவள்ளூர் மாவட்டம் பட்டறைபெரும்புதூரிலும் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களுக்கு மாற்றம் செய்யப்படும் என உயர்நீதிமன்ற அறிவுரைப்படி அரசு அறிவித்தது
திருவள்ளூர் அருகே பட்டறைபெரும்புதூரில் 49.89 ஏக்கர் பரப்பளவில், ரூ.60.37 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சட்ட மாணவர்கள் மற்றும் வக்கீல்கள் கடும் எதிர்ப்பை மீறி, ஜூலை 2ஆம் தேதி காலை இந்த புதிய சட்டக் கல்லூரியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்துவைத்தார்.
இதுபற்றி, சட்டக்கல்லூரி முதல்வர் ச.சொக்கலிங்கம் கூறுகையில், “இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் அதாவது மூன்றாண்டு பி.எல்., மற்றும் எம்.எல்., வகுப்புகள் ஜூலை 9ஆம் தேதி முதல் புதிய கட்டடத்தில் தொடங்கப்பட உள்ளது. இங்கு, மொத்தம் 1,200 மாணவர்கள் சட்டம் கல்வி பயில உள்ளனர். மேலும், 600 மாணவர்கள் தங்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் ஆண்கள், பெண்கள் விடுதி, கலையரங்கம், நூலகம், நிர்வாக அலுவலகம், காப்பாளர் குடியிருப்பு, கழிவறைகளும் கட்டப்பட்டு உள்ளன’’ என்றார்.
எதிர்ப்புகளை மீறி இடம் மாறிய சட்டக்கல்லூரி!
Reviewed by நமதூர் செய்திகள்
on
05:08:00
Rating:
No comments: