முன்மாதிரி தோழன்! - வி.களத்தூர் எம்.பாரூக்


நபிகள் நாயகம் அவர்கள் தனது தோழர்களுடன் நீண்ட பயணத்தை  மேற்கொண்டார்கள். பயணம் இரவு நேரத்தை எட்டியது. இருட்டில் செல்ல இயலாது. இரவு தங்கிவிட்டு விடிந்ததும்தான் செல்லவேண்டும். வழியில் ஒரு ஓரத்தில் தங்கலானார்கள். காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது. மிதமான குளிர்.  நபிகள் நாயகமும் தோழர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். இரவு உணவிற்கான நேரம் வந்துவிட்டது. சமைக்க வேண்டும். அதற்கான வேலைகளில் ஈடுபட வேண்டும்.  தோழர்கள் அனைவரும் தங்களுக்குள் வேலையை பகிர்ந்து செய்ய துவங்கினர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை செய்தனர். 

"நான் காட்டிற்கு சென்று அடுப்பு எரிக்க விறகுகள் சேகரித்து வருகிறேன்" என்று புறப்படத் தயாரானார்கள் நபிகள் நாயகம். நபியவர்களை உயிராக நேசித்த தோழர்கள் சம்மதிக்கவில்லை அதற்கு. நாங்கள் இருக்கும்போது நீங்கள் ஏன் வேலை செய்ய வேண்டும் என்று தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்தினார்கள். "இறைத்தூதர் அவர்களே, தாங்கள் ஒய்வு எடுத்துக்கொள்ளுங்கள். வேலைகளை எல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்று கூறுகிறார்கள். 

உடனே நபிகள் நாயகம் அவர்கள் "எல்லா வேலைகளையும் நீங்களே செய்துவிடுவீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் அதை விரும்பவில்லை. நாம் அனைவரும் தோழர்கள். தோழர்களிடையே உயர்ந்தவர்-தாழ்ந்தவர் எனும் வேறுபாடு இருக்கக்கூடாது. இதர தோழர்களைவிடத் தன்னை உயர்வாக நினைப்பவனை இறைவன் நேசிப்பதில்லை. என்னை நீங்கள் உயர்வாக கருதி தனிமைப்படுத்துவதை இறைவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான்" என்று சொல்லியபடி நபிகள் நாயகம் அவர்கள் காட்டிற்கு விறகு சேகரிக்க சென்றார்கள்.

எவ்வளவு அருமையான செய்தியை நபிகள் நாயகம் உரைத்திருக்கின்றார்கள். இன்று நமது நிலைமை என்னவாக இருக்கின்றது. அனைவருக்கும் தோழர்கள் வட்டம் இருக்கிறது. அவற்றை கவனித்தால் பெரும்பாலானவர்கள் விட்டுக்கொடுத்து சகோதரத்துவத்துடன் பழகி வந்தாலும் சிலரின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கும். அவர்கள் தோழர்களில் ஏதோ ஒருவகையில் நான்தான் சிறந்தவன் என்று எண்ணுகிறார்கள். அதன் காரணத்தால் பல நிகழ்வுகளில் வேறுபட்டு நிற்கிறார்கள். பொதுவான விஷயங்களில்கூட கருத்துரைக்கிறபோது எனது கருத்தே சரியானது அனைவரும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற அளவிற்கு அது செல்கிறது.

இன்னும் சிலரோ வேலையை பகிர்ந்து செய்வதில் விருப்பம் இல்லாதவராக இருக்கிறார்கள். உடல் உழைப்பை செலுத்துவதில் அதிக அக்கறை காட்டமாட்டார்கள். மக்கள் பயன்பெறுகிற நல்ல நிகழ்விற்குக்கூட "காசு வேணாம் தந்துடுறேன் வேல செய்ய சொல்லாத" என்று விலகி கொள்வார்கள். 

இதையா இஸ்லாம் கற்றுத்தந்தது. அண்ணலார் மிகச்சிறந்த தலைவராக இருந்தபோதிலும் தோழர்கள் செய்கின்ற வேலைகளில் பங்குகொள்வார். தோழர்கள் செய்யவேண்டாம் என்று வற்புறுத்தினாலும் அதை மறுதலிப்பார். ஒருமுறை  நஜ்ஜாசி மன்னரின் தூதுக்குழு நபிகள் நாயகத்தை சந்திக்க வந்தது. அப்போது அந்த விருந்தினர்களுக்கு நபிகள் நாயகம் தங்கள் கரத்தால் பணிவிடை செய்துகொண்டிருந்தார்கள். அதைப்பார்த்த நபித்தோழர்கள் "உங்களுக்காகவே நாங்கள் இருக்கிறோமே" என்று கூறவும், நபிகள் நாயகம் "அவர்கள் நம் தோழர்களை கண்ணியப்படுத்தினார்கள். நான் அதை சமன் செய்ய விரும்புகிறேன். மேலும் நிச்சயமாக நானும் அல்லாஹ்வின் அடிமைதான்" என்றார்கள்.

அந்த உணர்வு தற்போது குறைந்திருக்கிறது. முதலில் அந்த உணர்வை பெற்றிட வேண்டும். அப்போதுதான் தோழர்களிடத்தில் வேலையை சொல்லிவிட்டு சிம்மாசனத்தில் உட்கார்ந்து கொள்கிற நிலை மாறும். "தன்னுடைய தோழர்களிடத்தில் யார் சிறத்தவராக இருக்கிறாரோ அவர்தாம் அல்லாஹ்விடத்தில் சிறந்தவராக இருக்கிறார்" என்பது நபிகள் நாயகத்தின் சத்திய வாக்கு.

அல்லாஹ்விடத்தில் சிறப்பான இடத்தை பெற்றிட வேண்டும் என்றால் தனது தோழர்களிடத்தில் சிறப்பான இடத்தை பெற்றிட வேண்டும். தோழர்களின் மனதில் நிற்க வேண்டுமென்றால் சிறந்தவராக, விட்டுக்கொடுப்பவராக, உண்மையாளராக, எல்லோரையும் மதித்து நடப்பவராக, சமமாக நடந்துகொள்பவராக இருக்க வேண்டும். அதுதான் அனைவருக்கும் உயர்ந்த இடத்தை கொடுக்கும்.

- வி.களத்தூர் எம்.பாரூக்
முன்மாதிரி தோழன்! - வி.களத்தூர் எம்.பாரூக் முன்மாதிரி தோழன்! - வி.களத்தூர் எம்.பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 05:13:00 Rating: 5

No comments:

Powered by Blogger.