கீழடி: மருத்துவத்தில் கொடிக்கட்டி பறந்த பழங்கால தமிழர்கள்!
கீழடியில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்தில் மருத்துவத்தில் பழங்கால தமிழர்கள் கொடிக்கட்டி பறந்ததற்கான பல ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கீழடியில் கடந்த ஜுன் 2015ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை மூலம் பண்டைய தமிழர் நாகரிகம் குறித்த அகழாய்வு தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மூன்று கட்ட அகழாய்வில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதைதொடர்ந்து, 55 லட்ச ரூபாய் செலவில் தமிழக தொல்லியல் துறை மூலம் நான்காம் கட்ட அகழாய்வு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ஆய்வில் 26 குழிகள் தோண்டப்பட்டு, அதில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மூன்று மாதமாக நடத்தப்பட்ட அகழாய்வில், 4,500 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகள், மண் சக்கரம், ஆயுதங்கள், முதுமக்கள் தாழி, உறை கிணறு, சமையல் அடுப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த பத்து நாட்களாக நடந்த அகழாய்வில், மருத்துவத்தில் பழங்கால தமிழர்கள் கொடிக்கட்டி பறந்ததற்கான பல ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், மருத்துவக் குறிப்பு எழுதி வைக்கப்பட்டுள்ள ஓடுகள், மருந்துகள் வைக்கப்படும் கிண்ணங்கள், தட்டுகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மருந்து கிண்ணங்கள் அனைத்தும் புனல் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளதாகவும், மண் கிண்ணங்கள் அனைத்தும் கீழ்பகுதி கூர்மையாக இருப்பதால் மருந்துகளை அரைக்கும் போது கீழ்பகுதி வழியாக மருந்துகள் சேகரிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒருசில பொருட்களின் அடியில் கருமை நிறம் காணப்படுவதால் மருந்துகளை அனலில் வைத்து அவர்கள் தயாரித்து இருக்கலாம் என்றும், பல மண்பாண்ட பொருட்கள் விரிசல்களுடன் இருந்தாலும் உடையாமல் காணப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆய்விற்கு அனுப்ப உள்ளதாகவும், அதன்பின்னர் இவற்றின் காலம் பயன்பாடு குறித்து தெரியவரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கீழடி: மருத்துவத்தில் கொடிக்கட்டி பறந்த பழங்கால தமிழர்கள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:51:00
Rating:
No comments: