சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக மன்மோகன் சிங்
ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என நான் கொடுத்த வாக்குறுதியை மோடி நிறைவேற்றுவார் என்று எதிர்பார்த்தேன் என ராஜ்ய சபாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக நேற்று (ஜூலை 24) ராஜ்ய சபாவில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமராக நான் இருந்தபோது ஆந்திராவின் மறுசீரமைப்பு பற்றி 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி எதிர்க்கட்சியுடன் விவாதிக்கப்பட்டது. அப்போது அருண் ஜேட்லி உட்பட பாஜகவின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்த பிறகே ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்” என தாம் வாக்குறுதி அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஹைதராபாத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் அனைத்தையும் புதிதாக உருவாக்கப்படும் தெலங்கானா மாநிலத்துக்கு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். மாண்புமிக்க இந்த அவையில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். இதுதான் நாடாளுமன்றத்தின் இயற்கை நீதியாகும். என்னுடைய வாக்குறுதியை எனக்குப் பின் வரும் பிரதமர் மோடி நிறைவேற்றுவார் என எதிர்பார்த்தேன்” எனத் தெரிவித்தார்.
தெலங்கானா மாநிலம் உருவானபோது, ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என காங்கிரஸ் அரசும் உறுதியளித்தது. அதன்பின் ஆட்சியைப் பிடித்த பாஜக அரசும் உறுதியளித்தது. இதை நம்பியே தெலுங்கு தேசம் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்று கடந்த நான்கு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக எந்தவிதமான சிறப்பு அந்தஸ்தும் ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு வழங்காததால், கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேறியது. அதன்பின் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மக்களவையில் கொண்டு வந்தது. ஆனால், அது தோல்வி அடைந்தது.
இதையடுத்து, சிறப்பு அந்தஸ்து தொடர்பாக பேசிய ஆந்திர மாநில பாஜக தலைவர், ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மோடி வாக்குறுதி அளிக்கவில்லை எனவும், அதற்குப் பதிலாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக மன்மோகன் சிங்
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:02:00
Rating:
No comments: