மீண்டும் உண்ணாவிரதம்: அன்னா ஹசாரே
லோக்பால் சட்டத்தை நடைமுறைப்படுத்த காலதாமதம் செய்துவரும் மத்திய அரசைக் கண்டித்து காந்தி பிறந்த நாளில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டத்தை இயற்ற வேண்டும் எனக் கோரி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடந்த 2011ஆம் ஆண்டு டெல்லி ராம்லீலா மைதானத்தில் 12 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தியா முழுவதும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு பெருகியதையடுத்து, லோக்பால் சட்டத்தை இயற்றுவதாக மத்திய அரசு உறுதியளித்தது. இதனால் தனது போராட்டத்தை அவர் முடித்துக்கொண்டார். லோக்பால் மசோதாவை 2013ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இந்த நிலையில் தனது சொந்த கிராமத்தில் நேற்று (ஜூலை 29) செய்தியாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, “மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் மாவட்டத்திலுள்ள எனது சொந்த கிராமமான ரலேகான் சித்தியில், காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதியன்று, லோக்பால் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறி மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளேன்” என்று தெரிவித்தார்.
லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதன்பிறகு கடந்த 2014ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரால் கையெழுத்திடப்பட்டு சட்டமாக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ள அவர், “அரசுக்கு ஊழலைக் கட்டுப்படுத்துவதில் விருப்பமில்லை. அதனால்தான் லோக்பால் உறுப்பினர்களை நியமிக்காமல் காலதாமதம் செய்வதற்குப் பல காரணங்களைக் கூறி வருகிறது” என்றும் மத்திய அரசின் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
லோக்பால் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான வழக்கைக் கடந்த வாரம் விசாரித்த உச்ச நீதிமன்றம், உறுப்பினர்களை நியமிக்காதற்கு மத்திய அரசு கூறும் பதில் திருப்தியளிக்கவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் உண்ணாவிரதம்: அன்னா ஹசாரே
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:19:00
Rating:
No comments: