இந்துத்துவ தாலிபான்கள் : சசி தரூர்
காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்ற விமர்சனத்துக்கு, இந்துத்துவத்தில் தாலிபானைத் துவக்கிவிட்டார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான சசி தரூர், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றால், இந்தியா இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்று பேசியிருந்தார். இதற்கு பாஜக சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றம் சசி தரூருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் சசி தரூரின் பேச்சைக் கண்டித்து, திருவனந்தபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சசி தரூர் அலுவலக சுவர் உள்ளிட்ட இடங்களில் கருப்பு நிற மையை அவர்கள் ஊற்றிச் சென்றனர். சசி தரூரை சந்திக்க வந்திருந்த பொது மக்களையும் அவர்கள் விரட்டி விட்டதாகக் கூறப்படுகிறது.
அலுவலகத்தை முற்றுகையிட்டது தொடர்பாக சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு எதிராகப் பேனர்களை வைத்து. பாகிஸ்தானுக்குச் செல்லும்படி கோஷங்களையும் எழுப்பினர். அவர்களது இச்செயல்கள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று (ஜூலை 18) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சசி தரூர், “பாஜகவின் இளைஞர் அணியினர் என்னை பாகிஸ்தானுக்கு செல்லும்படி கூறி முற்றுகையிட்டனர். நான் அவர்களைப் போன்ற ஒரு இந்து அல்ல. எனக்கு நாட்டில் இருப்பதற்கு உரிமை இல்லை என்று முடிவு செய்ய அவர்களுக்கு உரிமை அளித்தது யார்? இந்துத்துவத்தில் தாலிபானைத் துவக்கிவிட்டார்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்துத்துவ தாலிபான்கள் : சசி தரூர்
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:50:00
Rating:
No comments: