ஸ்டெர்லைட் ஆபத்து - வி.களத்தூர் எம்.பாரூக்




"சுற்றுசூழலிலும், நிலத்தடி நீர் மாசுபாட்டாலும் இந்தியாவில் தொழில் நகரான தூத்துக்குடி மிக மோசமான நகரம் என்றும், ஆபத்தான நகரம்" என்றும் அறிவிக்கப்பட்டது. இப்படி அறிவித்தது மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓர் ஆய்வு. ஆபத்தான நகரம் என்று சொல்லும் அளவிற்கு தூத்துக்குடி மாறியதற்கான காரணம் ஸ்டெர்லைட்.

ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் அமைந்ததில் இருந்து தனது கோரமான முகத்தினை அப்பகுதி மக்களிடத்தில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. ஆலையிலிருந்து வெளியாகும் கந்தக-டை-ஆக்ஸைடுடன் நச்சு வாயு கலந்து வெளியேறுவதால் மக்கள் வாழ்நிலை சிரமங்களை, நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்கள்.

ஆலையின் ஸ்லாக் எனப்படும் கருப்பு கழிவுகள், வெள்ளை நிற ஜிப்சம் ஆகிய கழிவுகள் அகற்றப்படாமல் குவிக்கப்பட்டு வருவதாலும், கழிவுகளை கொண்டு சாலைகள் அமைக்கப்படுவதாலும், கழிவுகளை கிராமங்களிலும், நீர்நிலைகளிலும் கொட்டுவதாலும் சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகிறது ஸ்டெர்லைட் ஆலை.

இதன் காரணங்களால் மக்களுக்கு புற்றுநோய், சுவாசக்கோளாறு, கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்தான் புற்றுநோய்க்கான பாதிப்பு உள்ளவர்கள் அதிகம் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். 2012 ம் ஆண்டு மட்டும் 2,552  நபர்கள் புற்றுநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்மூலம் தெரிய வந்திருக்கிறது. சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையிலும் தூத்துக்குடி மாவட்டம்தான் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை இயங்க துவங்கியதிலிருந்தே பிரச்சனைகளும் ஆரம்பித்துவிட்டன. பாதிப்புகளும் வலிந்து திணிக்கப்பட்டன. 1997 ஜூலை மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் இருந்த ரமேஷ் பிளவர்ஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 100 க்குமேற்பட்டவர்கள் ஆலையிலிருந்து வெளியான சல்பர் டையாக்சைட் என்ற வாயுவை சுவாசித்ததால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் 23.03.2013 அன்று காற்றில் கடுமையான மாசு கலந்ததின் விளைவாக மூச்சு திணறல், கண் எரிச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம் என பலர் அவதிப்பட்டனர். 

ஸ்டெர்லைட் ஆலையில் 50 க்குமேற்பட்ட முறையில் விபத்துகள் நடைபெற்றுள்ளன. நச்சு வாயுக்கள் வெளியேறிருக்கின்றன. 1994 ம் ஆண்டிலிருந்து 2004 ம் ஆண்டுவரை 139 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர். 13 தொழிலாளர்கள் மரணத்தை தழுவிருக்கின்றனர். குடிக்கவே முடியாத அளவிற்கு நிலத்தடி நீர் மாசடைந்திருக்கிறது. ஆலையின் கழிவுகளால் விவசாய நிலங்களும் பாதிப்பை சந்தித்திருக்கின்றன. கடலின் வளமும் கெட்டுப்போயிருக்கிறது. மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சிதிலமடைந்திருக்கிறது. 

ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டதிலிருந்தே எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பித்து விட்டன. 1996 ஜூனில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. சட்டப்போராட்டங்களும், மக்கள் திரள் போராட்டங்களும் வீரியம் பெற்றன. துரதிஷ்டமாக அப்போது நிகழ்த்த சாதிய வன்முறையால் போராட்டங்கள் வலுவிழுந்துபோயின. இதை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஆட்சியாளர்கள் தங்களுக்கு 'ஆதாயம்' அளிக்கும் ஸ்டெர்லைட் நிறுவனம் கோலோச்சுவதற்கு துணைநின்றனர்; நிற்கின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை முதலில் அமையவிருந்தது குஜராத்தில்தான். ஆனால் அங்கு அனுமதி கிட்டவில்லை. கோவாவின் பக்கம் திரும்பினார்கள், கோவாவும் திருப்பி அனுப்பியது. கர்நாடக, கேரளா என முயற்சித்தார்கள் 'போபால் விஷவாயு பாதிப்பு' அப்போதுதான் நிகழ்ந்ததால் இந்த மாநிலங்கள் எல்லாம் ஸ்டெர்லைட் ஆலைக்கு இடம் தர மறுத்து உறுதியாக இருந்துவிட்டன. அடுத்து மஹாராஷ்டிரா போனது. அப்போதைய சரத்பவார் அரசு அனுமதி வழங்கியது. 12.12.1989 அன்று ரத்தினகிரி என்ற இடத்தில அடிக்கல் நாட்டப்பட்டது. ஆலை அமைக்க மொத்தம் 700 கோடி மதிப்பீடு; 200 கோடி செலவு செய்து ஆலை அமைக்கப்பெற்றது. அங்குள்ள விவசாயிகள் இந்த பாதிப்பை உணர்ந்ததால் கிளர்ந்து எழுந்தார்கள். இதனால் 'வேலைவாய்ப்பு பெருகும், மாநிலம் வளர்ச்சி பெரும்' என்று சொல்லிப்பார்த்தார் சரத்பவார்; 'ஆலையால் ஏதேனும் பாதிப்பு வருமா என்று ஆய்வு செய்ய குழு அமைப்போம்' என்று தட்டிக்கழிக்கவும் முயற்சித்தார் எதுவும் பயன்தரவில்லை. 

விவசாயிகள் உறுதியுடன் நின்றனர். அரசை நம்பி பயனில்லை என்று தாங்களே முன்னின்று ஆலையை அடித்து நொறுக்கினார்கள். இறுதியில் பணிந்தது மராட்டிய அரசு. 01.05.1994 ல் ஆலைக்கான அனுமதியை ரத்து செய்தது. இறுதியாகத்தான் தமிழகம் வந்தது ஸ்டெர்லைட். இருகரம்கூப்பி வரவேற்றார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. 01.05.1994 ம் ஆண்டு தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டினார். 1997 ம் ஆண்டிலிருந்து ஆலை இயங்க ஆரம்பித்தது. இன்றுவரை சர்ச்சைகளும், பாதிப்புகளும், போராட்டங்களும் தொடர்கதையாகி வருகின்றன. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மஹாராஷ்டிரா விவசாயிகள் எடுத்த நிலைப்பாட்டையே தமிழர்களும் எடுத்திருக்க வேண்டும். மாறாக சட்டத்தையும், ஜனநாயக வழிகளையும் தேடினார்கள். சாதிய பிரச்சனையால் தங்களுக்குள் மோதிக்கொண்டனர். இன்று கைசேதப்பட்டு நிற்கிறார்கள். ஸ்டெர்லைட் மட்டுமல்ல நியூட்ரினோ, கூடங்குளம் அணுவுலை, மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டம் என ஒவ்வொரு அழிவுத்திட்டமும் தமிழகம் நோக்கியே படையெடுத்து வருகிறது. 

தமிழகத்தை குப்பையாக கருதுகிற இந்திய ஆதிக்க அரசியல்வாதிகளை; அவர்களுக்கு சேவகம் செய்கிற தமிழக அரசியல் கட்சிகளை குப்பையாக நினைத்து தமிழக அரசியலிலிருந்து அப்புறப்படுத்துகிற வேலையை கையில் எடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழகம் காப்பாற்றப்படும்.

- வி.களத்தூர் எம்.பாரூக் 
ஸ்டெர்லைட் ஆபத்து - வி.களத்தூர் எம்.பாரூக் ஸ்டெர்லைட் ஆபத்து - வி.களத்தூர் எம்.பாரூக்  Reviewed by நமதூர் செய்திகள் on 04:33:00 Rating: 5

No comments:

Powered by Blogger.