ஒரே நாடு ஒரே தேர்தலை நாடுமா?

சிறப்புக் கட்டுரை: ஒரே நாடு ஒரே தேர்தலை நாடுமா?

அ.குமரேசன்

இந்தியா ஒரே நாடு. ஆகவே, ஒரே தேர்தல் என்ற பேச்சு முடுக்கிவிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்கும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதில் என்ன தவறு என்ற கேள்வியோடு அந்தப் பேச்சு உலாவ விடப்பட்டுள்ளது. இந்தியச் சட்ட ஆணையம் இதற்காக இந்த மாதம் 7, 8 தேதிகளில் தலைநகரில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறது. வரும் 2019ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலோடு மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் தேர்தலை நடத்திவிடலாமே என்று ஆணையம் கேட்டிருக்கிறது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் தங்களது நிலைப்பாடுகளை விளக்கியுள்ளனர்.
இந்தப் பேச்சுக்கான முன்னுரை சொல்லப்பட்டபோதே இது இந்தியாவுக்கு ஒத்துவராது என்று இடதுசாரிகள் கூறினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகள் ஒரே நேரத் தேர்தல் முன்மொழிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. திமுக, திருணமூல் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, பாஜகவின் கூட்டாளியான கோவா பார்வர்ட் கட்சி ஆகியவையும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. இப்போதல்ல, வாஜ்பாய் காலத்திலேயே இந்தக் கருத்தை முன்வைத்திருக்கிறோமாக்கும் என்று பாஜக தலைவர்கள் இது பற்றிய விவாதங்களில் சொல்கிறார்கள். ஆனாலும் சட்ட ஆணையத்திடம் மௌனத்தை வெளிப்படுத்திய அக்கட்சி, தன் கருத்துகளைத் தெரிவிக்கக் கால அவகாசம் கோரியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாடு என்னவென்று சொல்லாமல், மற்ற கட்சிகளுடன் கலந்தாலோசித்துச் சொல்வதாகக் கூ.றுகிறது.
ஒரே நேரத் தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுக, அதை 2024ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தலாம் என்பதாகக் குழப்புகிறது. பாஜக கூட்டாளியான சிரோமணி அகாலி தளம் இந்த யோசனையை ஆதரிக்கிறது. சமாஜ்வாதி கட்சி, தெலங்கானா ராஷ்ட்ர சமிதி ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
பேச வேண்டிய பிரச்சினை எது?
ஜனநாயகத்தின் அடிவேராகிய தேர்தலின் தற்போதைய நடைமுறையில் ஒரு முக்கியமான குறைபாடு இருக்கிறது. ஒரு தொகுதியில் 100 வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களில் 70 பேர் மட்டுமே வாக்களிக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அவர்களில் 19 பேர் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களித்திருக்கிறார்கள், மற்ற 51 பேரின் வாக்குகள் 18, 17, 11 என்று மூன்று வேட்பாளர்களுக்குப் போகின்றன, ஒரு 5 பேர் நோட்டா பொத்தானை அழுத்தினார்கள் என்றும் வைத்துக்கொள்வோம். இருந்தாலும், அந்த 19 பேரின் ஆதரவைப் பெற்றவர், தேர்தலிலேயே பங்கேற்காத 30 பேருக்கும் சேர்த்து, அவரை ஆதரிக்காத 51 பேரையும் உட்படுத்தி, மொத்தத் தொகுதியின் பிரதிநிதியாகிவிடுகிறார். மாநில அளவில் இவ்வாறு பெறுகிற கட்சியைச் சேர்ந்தவர் முதலமைச்சராவார். நாடு முழுவதுமாக இப்படிக் குறைந்த சதவீதத்தில் வாக்குகளைப் பெறுகிற கட்சியின் தலைவர் பிரதமராகிறார். மத்தியிலும் மாநிலத்திலும் சட்டபூர்வமாகவே மைனாரிட்டி ஆட்சி அமைய வழி செய்யும் இந்த ஒற்றைப் பெரும்பான்மை முறையை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
பெரும்பான்மையினரின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றிய விரிவான, முழுமையான, வெளிப்படையான, மக்கள் பங்கேற்புடன் கூடிய விவாதங்களை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. அந்த விவாதங்களுக்குச் சட்ட ஆணையம் தயாராக இல்லை. அமைச்சகம் தயாரானால்தானே ஆணையம் பேசும்? மத்திய ஆளுங்கட்சி தயாராக இருந்தால்தானே அமைச்சகம் பேசும்?
வரலாற்றுப் பின்னணி
ஒரே நேரத் தேர்தல்தான் சரி என்ற எண்ணத்தை மக்கள் மனங்களில் தூவுவதற்காக, வெவ்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடத்துவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது என்பதைத்தான் திரும்பத் திரும்பக் கூறுகிறார்கள். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் அந்தச் செலவு மிச்சமாகும், அதை வளர்ச்சித் திட்டங்களுக்கும் மக்கள் நல நடவடிக்கைகளுக்கும் செலவிடலாம் என்ற விளக்கங்கள் கூறப்படுகின்றன.
1971இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி திடீரென மக்களவையைக் கலைத்துவிட்டு அதற்கு உடனடித் தேர்தல் நடத்துகிற சூழலை ஏற்படுத்தினார்; அதனால்தான் காலமுறைப்படி நடந்துவந்த நாடாளுமன்றத் தேர்தல் ஓராண்டு முன்னுக்குப் போனது, அதைத் தொடர்ந்து மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் பின்னுக்குப் போயின என்று, யார் மீதாவது பழி சுமத்தியே தனது தரப்பை நியாயப்படுத்த முயல்கிற வழக்கமான உத்தியைக் கையாளுகிறார் இன்றைய பிரதமர்.
வெவ்வேறு நேரத்தில் தேர்தல் என்பது, நாடு முழுவதுமாக இரண்டாவது பொதுத்தேர்தல் நடந்த உடனேயே வந்துவிட்டது. 1957ஆம் ஆண்டுத் தேர்தலின்போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது என்றாலும், கேரளத்தில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி அரசு பொறுப்பேற்றது. அன்றைய இந்திய அரசு அறிவித்திருந்த, நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் நிலம் வைத்திருப்போரிடமிருந்து அந்தக் கூடுதல் நிலம் கைப்பற்றப்படும், நிலமில்லாத விவசாயிகளுக்கு உரிமையாக்கப்படும் என்ற சட்டத்தை, மற்ற மாநிலங்களில் ஏகபோகமாக இருந்த காங்கிரஸ் அரசுகளே கண்டுகொள்ளாமல் இருக்க, இ.எம்.எஸ். அரசு உடனடியாகச் செயல்படுத்தியது.
மக்களின் ஆதரவை அள்ளிக்கொண்டிருந்த அந்த அரசு நீடிப்பது தங்களின் எதிர்கால வாய்ப்பைக் கெடுத்துவிடும் என்று அஞ்சிய, பெரும் நிலவுடைமையாளர்களின் நலன்களோடு தன்னைப் பிணைத்து வைத்திருந்த காங்கிரஸ்காரர்கள் கலகங்களிலும் கலவரங்களிலும் இறங்கினார்கள். அவர்களுக்குத் தலைமை தாங்க டெல்லியிலிருந்து வந்தார் இந்திரா காந்தி (எப்படியோ ஜனநாயகத்தின் மீதான அந்த முதல் தாக்குதலில் இந்திரா காந்தி சம்பந்தப்பட்டிருந்தார்). விமோசன சமரம் (விடுதலைப் போராட்டம்) என்று அறிவித்து, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு முடக்கப்பட்ட நிலையை ஏற்படுத்தினார்கள். அதையே காரணம் காட்டி, மாநில அரசைக் கலைத்தார் பிரதமர் ஜவஹர்லால் நேரு. உலக வரலாற்றிலேயே தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த முதல் கம்யூனிஸ்ட் கட்சி அரசு, இந்தியாவிலேயே முதன்முறையாக 356ஆவது பிரிவு என்னும் சட்டக் கோடரியால் வீழ்த்தப்பட்டது. பின்னர் தேர்தல் நடத்தப்பட்டு, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது.
1967இல் நடந்த பொதுத்தேர்தலில், மக்களவைக்குத் தேவையான இடங்களைப் பிடித்த காங்கிரஸ், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆட்சியை இழந்தது. “நீ ஆண்டது போதாதா, மக்கள் மாண்டது போதாதா” என்ற அன்றைய திமுக கூட்டணி எழுப்பிய முழக்கங்களை அன்றைய வாக்காளர்கள் மறந்துவிட மாட்டார்கள்.
கவிழ்ப்பு அரசியல்
அதற்கு முன், 1961இல், பொதுத்தேர்தலுக்கு ஓராண்டு முன்னதாகவே ஒரிசா மாநிலத்தில், கூட்டாளிக் கட்சி விலகிக்கொண்டதால், காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. அங்கேயும் உடனடித் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இவற்றின் தொடர்ச்சியாகப் பல மாநிலங்களில் கூட்டணிகளில் ஏற்பட்ட உடைப்பு, திட்டமிட்ட ஆட்சிக் கவிழ்ப்பு என இடைக்காலத்திலேயே சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் வெவ்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடப்பது இயல்பாகிவிட்டது.
உதாரணமாக, ஆந்திராவில் தனது ஆட்சியைக் கலைக்கத் திரைமறைவு வேலைகளில் காங்கிரஸ் ஈடுபடுவதை அறிந்த என்.டி.ராமராவ், சட்டமன்றத்தைக் கலைக்கப் பரிந்துரைத்தார். அடுத்து வந்த தேர்தலில், காங்கிரஸால் எதுவும் செய்ய முடியாத அளவுக்குப் பெரும்பான்மையைப் பெற்றார்.
இப்படியான அரசியல் சூதுகளால் மட்டுமல்லாமல், சட்டபூர்வமான வேறு காரணங்களாலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை நடத்த வேண்டிய தேவைகள் ஏற்பட்டதுண்டு. தனித்தனியே இருந்த பகுதிகள் குறிப்பிட்ட மாநிலங்களோடு இணைக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்கள் அவை. எடுத்துக்காட்டாக, தனி ஆட்சிப் பகுதியாக இருந்துவந்த திருவாங்கூர் கொச்சி, கேரளத்தோடு இணைக்கப்பட்டது. அதே போல், பாட்டியாலா, கிழக்கு பஞ்சாப் ஆகியவை பஞ்சாப் மாநிலத்தோடு இணைக்கப்பட்டன. இந்த இரு மாநிலங்களிலும் 1957இல்தான் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால், 1954லேயே இடைத் தேர்தலாக நடத்தப்பட்டது. ஆயினும், கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக திருவாங்கூர் கொச்சி காங்கிரஸ் அரசு வெளியேற வேண்டியதாயிற்று. 1957 தேர்தல் வந்தபோது கம்யூனிஸ்ட் கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். அந்த ஆட்சிதான் 1959ஆம் ஆண்டில் ‘356’ அதிகாரக் கொம்பால் முட்டிக் கலைக்கப்பட்டு, மறு தேர்தல் நடத்தப்பட்டது.
அநேகமாக இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், இப்படி இடையிலேயே ஆட்சிகள் தாங்களாகக் கவிழ்ந்து அல்லது கவிழ்க்கப்பட்டு இடைத் தேர்தல்கள் நடத்தப்பட்ட வரலாற்றின் அத்தியாயங்களை நாம் பார்க்கக்கூடும். ஆக, மாநில அரசைக் கவிழ்த்து குடியரசுத் தலைவர் ஆட்சியைப் புகுத்தி, இடைக்காலத் தேர்தலுக்கு வழிசெய்வது என்பது 1971க்கு முன்னாலும் நடந்திருக்கிறது, அதற்குப் பிறகும் நடந்திருக்கிறது. கர்நாடகத்தில் எஸ்.ஆர்.பொம்மை அரசு மீது ‘356’ கயிறு வீசப்பட்டதற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம், அந்தக் கயிறு தொடர்பான அதிரடித் தீர்ப்பை அளிக்காமல்விட்டிருந்தால், பின்னர் மத்திய ஆட்சிக்கு வந்த பாஜகவும் அந்தக் கயிற்றை வீசுவதற்குத் தயங்கியிருக்காது.
என்ன தவறு?
இந்தியா ஒரே நாடுதானே, அப்படியானால் ஒரே தேர்தலாக நடத்தினால் என்ன என்ற கேள்வி முதல் காட்சியில் நியாயமானதாகத்தான் தெரிகிறது. இந்தியா ஒரே நாடுதான், ஒரே மாநிலமல்ல. பல மாநிலங்களின் ஒன்றியம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவமான வரலாறு, சமூகக் கட்டமைப்பு, பண்பாட்டுத்தளம், மொழி, வாழ்க்கை நிலை, பொருளாதாரம் இருக்கின்றன. மாநிலத்திற்கு மாநிலம் தட்பவெப்பச் சூழல்கூட மாறுபடுகிறது. ஒரு காலகட்டத்தில் ஒரு மாநிலத்தில் அனல் காற்று பிரச்சினையாகிறது என்றால் இன்னொரு மாநிலத்தில் அதே சமயத்தில் மழை பிரச்சினையாகிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் திரிபுரா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வந்தபோது, சிக்கிம் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. பருவநிலைச் சூழலும் மற்ற மாநிலங்களிலிருந்து சிக்கிம் மாறுபட்டது என்ற விளக்கத்தைத் தேர்தல் ஆணையம் அளித்தது. இது நாடு முழுமைக்கும் பொருந்தாதா?
ஒரே நேரத் தேர்தலால் செலவு குறையும், வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது? ஜனநாயக அடித்தளம் இதனால் வலுப்பெறுமா? பண்பாடுகள் - ஏன் பருவ நிலைமைகளுமே கூட - மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிற நாட்டில் ஒரே தேர்தல் சாத்தியமா, அது தேவையா? இதன் பின்னணி அரசியல்தான் என்ன?.
ஒரே நாடு ஒரே தேர்தலை நாடுமா? ஒரே நாடு ஒரே தேர்தலை நாடுமா? Reviewed by நமதூர் செய்திகள் on 04:48:00 Rating: 5

No comments:

Powered by Blogger.