சீரமைக்கப்படாத ஏடிஎம் எந்திரங்கள்!
பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொண்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் இன்னும் 18,135 ஏடிஎம்களை எஸ்பிஐ வங்கி சீரமைப்பு செய்யாமலேயே இருப்பது தெரியவந்துள்ளது.
நாட்டில் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுப் புழக்கத்தை ஒழித்துக்கட்டும் நோக்கில் உயர் மதிப்பு நோட்டுகளான ரூ.500 மற்றும் ரூ.1,000 ஆகியவற்றைச் செல்லாதவையாக 2016 நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தப் பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, புழக்கத்தில் இருந்த 86 சதவிகித நோட்டுகளை மக்கள் வங்கிகளில் செலுத்தினர். இவற்றுக்கு மாற்றாகப் புதிய வடிவிலான ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடித்து வங்கிகள் வாயிலாக மக்களுக்கு விநியோகித்தது. அதன் பின்னர் ரூ.200, ரூ.20, ரூ.10 ஆகிய நோட்டுகளும் புதிய வடிவில் அச்சிடப்பட்டு புழக்கத்துக்கு விடப்பட்டன. பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு, புதிய நோட்டுகளுக்கு ஏற்றவாறு ஏடிஎம் எந்திரங்களை அனைத்து வங்கிகளும் மறுசீரமைப்பு செய்தன.
இந்நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), தனது ஏடிஎம்கள் சிலவற்றை மறுசீரமைப்பு செய்யவே இல்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாகத் தெரியவந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சந்திரசேகர் கவுத் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், எத்தனை ஏடிஎம் எந்திரங்கள் புதிய ரூ.2,000, ரூ.500 மற்றும் ரூ.200 நோட்டுகளை வெளியிடும் அளவுக்கு மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன, என்று எஸ்பிஐ வங்கியிடம் கேட்டிருந்தார். அதற்குப் பதிலாக, மொத்தமுள்ள 59,521 ஏடிஎம் எந்திரங்களில் 41,386 எந்திரங்கள் மட்டுமே மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இந்த சீரமைப்புப் பணிக்காக ரூ.22.50 கோடியைச் செலவிட்டுள்ளதாகவும் எஸ்பிஐ கூறியுள்ளது.
இதன்படிப் பார்த்தால், பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 21 மாதங்கள் ஆகியும் இன்னமும் 18,135 ஏடிஎம்கள் சீரமைப்பு செய்யப்படவேயில்லை என்பது உறுதியாகியுள்ளது.
சீரமைக்கப்படாத ஏடிஎம் எந்திரங்கள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
05:05:00
Rating:
No comments: