ஜின்னா பிரதமராகியிருந்தால் இந்தியா பிரிந்திருக்காது!
இந்தியாவின் பிரதமராக ஜின்னா பதவியேற்றிருந்தால் இரண்டு நாடுகளாகப் பிரிந்திருக்காது என்று தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
வடக்கு கோவாவில் உள்ள கோவா மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நேற்று (ஆகஸ்ட் 8) நடைபெற்ற நிகழ்ச்சியில் திபெத்திய புத்தமதத் தலைவர் தலாய் லாமா கலந்துகொண்டார். மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், “ராணுவ முறையை விட ஜனநாயக முறை சிறந்தது. மக்களின் கைகளில் முடிவெடுக்கும் அதிகாரத்தை ஜனநாயக முறை அளிக்கிறது.
இந்தியாவை எடுத்துக்கொள்ளுங்கள். பிரதமர் பதவியை முகமது அலி ஜின்னாவுக்கு வழங்கவே மகாத்மா காந்தி விரும்பினார். ஆனால், நேரு இதற்கு மறுத்துவிட்டார்.
பிரதமர் ஆக வேண்டும் என்று அவர் ஸ்திரமாக இருந்தார். மகாத்மா காந்தியின் திட்டமானது நிறைவேறியிருந்தால், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாகவே இருந்திருக்கும். நேரு புத்திசாலி, அனுபவம் வாய்ந்தவர் என்பது எனக்குத் தெரியும். ஆனால், தவறுகளும் நடந்துள்ளன” என்று தெரிவித்தார்.
பாரம்பரியம் மற்றும் அறிவில் ஆழமாக வேரூன்றிய கலாச்சாரம் இந்தியாவில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “அகிம்சையின் நிலமாக உள்ள இந்தியா பாரம்பரிய அறிவின் கலவையாகவும் உள்ளது” என அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்களிடையே இருக்கும் வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜின்னா பிரதமராகியிருந்தால் இந்தியா பிரிந்திருக்காது!
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:02:00
Rating:
No comments: