தலாக் : அனுமதியும், அறிவுறுத்தலும்! - வி.களத்தூர் எம்.பாரூக்


ஆண்களுக்கு பெண்கள் மீதுள்ள உரிமைகள் போன்றே பெண்களுக்கும் ஆண்கள் மீது உள்ளது என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

அன்பு, பாசம், கருணை, விட்டுக்கொடுத்தல், சிறு பிழையை பொறுத்துக்கொள்வது என்ற வாழ்க்கையின் அடிப்படை விஷயங்களில் கணவன்-மனைவி என்கிற உன்னதமான உறவை பேணிப்போற்றுவது குறித்து இஸ்லாம் தொடர்ந்து பேசுகிறது.

திருமணம் ஒரு ஒப்பந்தம் என்பதாக குறிப்பிடும் இஸ்லாம் இந்த ஒப்பந்தம் அமைதி ஏற்படுவதற்கும், தவறான செயல்களை விட்டும் பாதுகாப்பதற்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விவரிக்கிறது.

கணவன்-மனைவி இருவரும் தங்களுக்கு உள்ள உரிமை, கடமைகளை எண்ணி வாழ்க்கையின் உன்னதத்தை உணர்ந்து வாழ்ந்து வருவது அவசியமானது. இஸ்லாம் அதைத்தான் விரும்புகிறது. வாழ்க்கையின் பல்வேறு பரிணாமங்களை பேசும் இஸ்லாம். திருமணம் சார்ந்த விடயங்கள் குறித்தும் பேசுகிறது. இதில் ஏற்படும் சிக்கல்களுக்கு பல தீர்வுகளை முன் வைக்கிறது. அதில் ஒன்றுதான் கணவன்-மனைவி இருவரும் இனி தங்களால் சேர்ந்து வாழ இயலாது என்கிற நிலை ஏற்படுகிறபோது கண்ணியமான முறையில், இரு தரப்பிற்கும் பாதிப்பில்லாமல் தலாக் சொல்லி பிரிந்துக்கொள்வது. 

இதுதான் இன்று மிகப்பெரிய அளவில் கேள்விக்குரியதாகவும், கேலிக்குரியதாகவும் ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. பலரும் தலாக் என்பதினை தவறாக புரிந்துகொண்டு விமர்சித்தும் வருகிறார்கள். முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவிகளை தலாக் சொல்லி அந்த பெண்கள் வாழ்க்கையை சீரழிக்கிறார்கள் என்பது அதில் முக்கியமானது.

கணவன்-மனைவியை பொறுத்தவரையில் ஒவ்வொருவரும் தங்களிடையே அன்பை பகிர்ந்து ஒன்றாக மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்றே இஸ்லாம் குறிப்பிடுகிறது. வேறு வழியில்லை இனி சேர்ந்து வாழவே முடியாது என்கிற சூழல் உள்ளவர்களின் நலனிற்காக வழங்கப்பட்ட ஒரு தீர்வே தலாக் என்பதாகும். இவ்விஷயத்தில் அவர்களை கட்டாயப்படுத்தி சேர்ந்துதான் வாழ வேண்டும் என்று சொல்வது சரியான தீர்வாக இருக்காது. அவர்களுக்கு மென்மையான ஆலோசனை கூறலாம். அதில் அவர்கள் சமாதானம் பெறவில்லையென்றால் அவர்களே தங்களது வாழ்க்கையை தீர்மானித்துக்கொள்வதுதான் சரியானது.

கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று சொல்லி வளர்க்கப்படுகிற சமூகத்தில் கணவனால் மனைவி கொலை, கேஸ் அடுப்பு வெடித்து பெண் மரணம், கள்ளக்காதலன் மூலம் கணவனை கொலை செய்த மனைவி கைது என இது போன்ற அபாயமான நிகழ்வுகள் அடிக்கடி செய்திகளில் அடிபட்டுவருகிறது. ஆனால் இஸ்லாமிய சமூகத்தில் இந்த மாதிரியான அபாயங்கள் துளியும் இல்லை. அதற்கு காரணம் மனமாட்சிரியங்கள் இருந்தால் தம்பதியர் கண்ணியமாக பிரிந்துகொள்ளும் உரிமை இருப்பதால்தான். 1400 ஆண்டுகளுக்கு முன்பே இந்த உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. வேறு துணையை தேர்வுசெய்துக்கொள்ளும் உரிமையும் இரு தரப்பிற்குமே வழங்கப்பட்டிருக்கிறது.

இஸ்லாமிய சமூகத்தில் முடிந்த வரையில் மகிழ்வுடன் தங்களது வாழ்வுகளை அமைத்துக்கொள்கிறார்கள்.  ஏதேனும் தவறு நடந்து சேர்ந்து வாழ முடியாது என்று அவர்கள் எண்ணுகிறபோதுதான் தலாக் சொல்லி விவாகரத்து செய்கிறார்கள். மற்ற சமூகங்களை ஒப்பிடும்போது இஸ்லாமிய சமூகத்தில் விவாகரத்து பெறுகிறவர்களின் விழுக்காடு மிகக்குறைவுதான். 

இஸ்லாம் தலாக் சொல்லி விவாகரத்து பெற அனுமதித்தாலும் முடிந்த வரையில் தவிர்த்துக்கொள்ளவே அறிவுறுத்துகிறது. "அல்லாஹ் அனுமதித்த வகைகளில் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானது தலாக்" என்று நபிகள் நாயகம் அவர்களும், "அனுமதிக்கப்பட்ட விஷயங்களில் தலாக்தான் அல்லாஹ்வுக்கு மிகவும் கோபமூட்டக்கூடியது" என்று இப்னு உமர் ரலி அவர்களும் அறிவிக்கின்றார்கள்.

"தேவையின்றி, அவசியமின்றி தன் கணவருடன் தலாக் கேட்கும் ஒரு பெண் சுவனத்தின் வாடையைக்கூட நுகரமாட்டாள்" என்று நபிகள் நாயகம்  எச்சரிக்கை செய்கிறார்கள். தலாக் சைத்தானின் மிகப்பெரும் ஆயுதமாகும். அதை முறையின்றி கையில் எடுப்பவன் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவன் என்று இஸ்லாம் உரக்கச்சொல்கிறது.

மனைவியரிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர், இது நபிகள் நாயகத்தின் சத்தியக்கூற்று.  கணவனும்-மனைவியும் வாழ்க்கையில் ஏற்படுகிற சிற்சில பிரச்சனைகளை புறந்தள்ளி தங்களுக்கிடையே அன்பையும், கருணையையும் இணைப்பு பாலமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.  விட்டுக்கொடுத்து வாழ்ந்து வருகிற சூழலை உருவாக்கிக்கொண்டால் தலாக் சொல்லி விவகாரத்து பெறுவதற்கு அவசியமே இல்லை.

- வி.களத்தூர் எம்.பாரூக்
தலாக் : அனுமதியும், அறிவுறுத்தலும்! - வி.களத்தூர் எம்.பாரூக் தலாக் : அனுமதியும், அறிவுறுத்தலும்! - வி.களத்தூர் எம்.பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 04:39:00 Rating: 5

No comments:

Powered by Blogger.