மதவாதம், சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடுங்கள்!
அனைத்து மதச்சார்பற்ற, பாஜக சாராத சக்திகளும் 2019ஆம் ஆண்டில் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் ஒன்றிணைய வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற பிரபல பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். மேலும், ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதால், மதச்சார்பற்ற, பாஜக சாராத சக்திகளுடன் இணைவதற்கு இடதுசாரிகள் தயக்கம் காட்டக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமர்த்தியா சென் ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று கொல்கத்தாவிற்குப் பயணம் மேற்கொண்டார். அங்கு சிசிர் மன்ச் அரங்கத்தில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “சர்வாதிகாரத்துக்கு எதிரான நமது எதிர்ப்புகளை வெளிப்படுத்த வேண்டும். சர்வாதிகார போக்குக்கு எதிராக நாம் போராட வேண்டும். மதச்சார்பற்ற வலதுசாரி சக்திகளை விமர்சிக்க வேண்டிய விவகாரங்களில் நாம் விமர்சித்தாக வேண்டும். ஆனால், மிகப்பெரும் அச்சுறுத்தலான மதவாதத்துக்கு எதிரான போராட்டம் என்று வந்துவிட்டால் நாம் பின் வாங்கக் கூடாது” என்று கூறினார்.
மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் பொருட்டு, “2014ஆம் ஆண்டு தேர்தலில் என்ன நடந்தது? 55 தொகுதிகளைப் பெற்று, மொத்த வாக்குகளில் 31 விழுக்காட்டைப் பெற்ற ஒரு கட்சி அதிகாரத்தைப் பிடித்துவிட்டது. அது மோசமான நோக்கங்களைக் கொண்ட ஒரு கட்சி. நான் என்னை இடதுசாரியாக எண்ணிக்கொண்டாலும், அரசியல் கேள்விகள் அனைத்தும் இடது மற்றும் வலதுசாரி சித்தாந்தங்களை மையப்படுத்தி மட்டுமே இருக்காது என்பதை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும்.
சிறுபான்மையினர் மற்றும் மதச்சார்பின்மை சார்ந்த தேவைகள், அனைத்து மதங்களின் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய தேவை உள்ளது. இது இடதுசாரிகளால் மட்டுமே பேசப்படும் பிரச்சினை அல்ல. இடதுசாரி அல்லாதவர்களுடனும் நாம் கைகோர்க்க ஏராளமான காரணங்கள் உள்ளன. அசாம் தேசிய குடிமக்கள் பதிவு வரைவு பட்டியல் விவகாரத்தில் இடதுசாரிகளுக்கு முன்பாகவே திரிணமூல் காங்கிரஸ் குரல் கொடுத்தது. போராட்டம் நடத்தவும் அசாம் சென்றார்கள். இதுபோன்ற செயல்கள் இடதுசாரிகளை பெருமை அடையச் செய்யாது. இடதுசாரி என்பதற்காகப் பெருமிதம் கொள்வீர்களானால், இதுபோன்ற பிரச்சினைகளில் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும்.
ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக எண்ணுகிறேன். ஆனால், இதை சரிசெய்யலாம். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” என்று அவர் பேசினார்.
மதவாதம், சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடுங்கள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:56:00
Rating:
No comments: