கலைஞர் குறித்து சீத்தாராம் யெச்சூரியின் நினைவலைகள்!
மறைந்த தலைவர் கலைஞர் கருணாநிதியிடம் தான் கொண்டிருந்த சிறப்பான உறவு குறித்து சிபிஎம்மின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
சீத்தாராம் நீங்கள்தான் இந்த கலாட்டாக்களுக்கு காரணமா? நீங்கள் என்னுடன் தமிழில் பேசினீர்கள், சந்திரபாபு நாயுடுவிடம் தெலுங்கில் பேசினீர்கள், ஜோதி பாசுவிடம் பெங்காலியில் பேசினீர்கள், முலாயம் சிங் யாதவிடமும் லல்லு பிரசாத் யாதவிடமும் இந்தியில் பேசுகிறீர்கள். நீங்கள் அடுத்தவரிடம் வெவ்வேறு மொழியில் பேசுவதால் என்ன பேசினீர்கள் என்று யாருக்கும் தெரியாது. அதனால் குழப்பம்தான் மிஞ்சுகிறது. நீங்கள் தான் இதைத் தீர்த்து வைத்து நிலைமையைச் சரி செய்ய வேண்டும்.
இப்படிப்பட்ட கிண்டலான நகைச்சுவையை என்னால் மறக்க முடியாது. பல பத்தாண்டுகளாக நீடிக்கும் இந்த உறவில் நான் பலமுறை கலைஞர் கருணாநிதியிடம் பேசியிருக்கிறேன். ஆனால், இது போன்று பேசியது உள்ளூர் நகைச்சுவையுடன் பேசியது, திரும்பத் திரும்ப என் நினைவில் நிற்கிறது. அது 1997ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம். மத்தியில் ஐக்கிய முன்னணி அரசின் ஆட்சி காலத்தில் ஹெச்.டி.தேவகவுடாவுக்குப் பின்னர் இந்தர்குமார் குஜ்ராலைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னதாக என்று நினைக்கிறேன். பிரதமர் தேர்வு முடிந்து விட்டது. இருப்பினும், மத்திய அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பதில் சில கருத்து வேறுபாடுகள் ஐக்கிய முன்னணியில் நீடித்தன.
தேவகவுடாவை மாற்றுவது தொடர்பான ஆரம்ப விவாதங்களை எமது கட்சி பொதுச்செயலர் ஹரிகிஷன் சிங் சுர்ஜித்தான் முன்வைத்தார். ஆனால், அவர் ரஷ்யாவுக்குச் செல்ல வேண்டியிருந்ததால் அவர் பேச்சை முடித்துக்கொள்ள வேண்டியிருந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக நான் ஆஜராகியிருந்தேன். இந்தக் கூட்டத்தின் நடுவேதான் கருணாநிதி இது போன்ற ஜோவியலாக கமெண்ட் அடித்தார்
நீண்ட காலமாக அறிந்துள்ள கலைஞருடன் ஆரம்பத்தில் அவ்வளவு நெருக்கமான உறவு இருந்ததில்லை பின்னர் மிக நெருக்கமானார்.
கலைஞர் ஓர் அரசியல்வாதி என்ற முறையிலும் ஓர் எழுத்தாளர் என்ற முறையிலும் கவிஞர் மற்றும் திராவிட சிந்தனையாளர் என்ற முறையிலும் எனக்கு நன்கு அறிமுகம் ஆனவர். அவருடைய வசனங்களில் இழையோடும் நகைச்சுவையையும் ரசித்ததுண்டு. ஆனால், இதுதான் அவருடைய நகைச்சுவையை நேரடியாகக் கண்டு அனுபவித்தது. இந்த அனுபவத்திலிருந்து கலைஞர் இதுபோன்ற நகைச்சுவையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, கடுமையான பேச்சுவார்த்தைகளிடையே ஏற்படும் அழுத்தங்களைத் தணித்து வந்தார் என்பதையும் நான் உணர்ந்தேன்.
பிந்தைய காலங்களில் இருவருக்கிடையிலான நகைச்சுவையான பரிமாற்றங்களின் விளைவாக ஒரு சிறப்பான உறவு பரிணமித்தது. ஓர் இளம் அரசியல்வாதி என்ற வகையில் என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார். நான் அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். தென்னிந்திய அரசியலை அதில் மிகப்பெரிய அளவில் தலைமை அளித்தவரிடம் கற்றுக்கொள்ளவும் தொடங்கினேன். உண்மையில் நாங்கள் இருவரும் 1988க்குப் பின்னர் பல சமயங்களில் வெவ்வேறு அரசியல் அணிகளாக இருந்துள்ளோம்.
ஐக்கிய முன்னணி அரசின் 1996இல் இருந்து 1998 வரையிலான கால கட்டத்தில் கருணாநிதியும் திராவிட முன்னேற்றக் கழகமும் சங்க பரிவாரங்களுக்கு தலைமை தாங்கும் ஆர்எஸ்எஸ்ஸின் இந்துத்துவ சிந்தாந்தத்துக்குத் தீவிர எதிர்ப்பாளர்களாக இருந்தனர். பாஜகவை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென்ற அந்தத் தீவிரமான உறுதியான நிலைபாட்டின் அடிப்படையில்தான், எங்களது கூட்டணியும் அமைந்தது. இருப்பினும், ஐக்கிய முன்னணி ஆட்சி வீழ்ந்த ஓராண்டுக்கு பின்னர், வாஜ்பாயினால் தலைமை தாங்கப்பட்ட தேசிய ஜனநாயக முன்னணிக்கு திமுக மாறியது.
ஆனாலும் எங்களது தனிப்பட்ட உறவு நீடித்தது. நான் சென்னையிலிருக்கும்போது அவரைப் பார்க்கச் செல்வேன். நாங்கள் சூரியனுக்கு அடியில் இருக்கும் அனைத்து விஷயங்களைப் பற்றியும் விவாதிப்போம். அவரது இந்துத்துவ எதிர்ப்பும் மதவாத எதிர்ப்பு அரசியலும் ஏன் தணிந்து போனது என்பது பற்றி கூட விவாதிப்போம். எங்களது விவாதங்களில் அனைத்தையும் பேசுவோம். இது குறித்து கேள்வி எழுப்பும்போது அவரின் பதில் தனித்துவமாக இருக்கும். மேற்கு வங்கத்தில் நீண்டகாலமாக இடது முன்னணி ஆட்சியில் இருந்ததை ஒப்பிட்டுப் பேசும்போது இடது சாரி கட்சி போன்று திமுகவினால் ஒரு சித்தாந்த உறுதியில் இருக்க முடியவில்லை என்று கூறுவார். அதற்கான பதிலாக அது போன்ற மிகப்பெரிய மக்களின் தீர்ப்பு இங்கு கிடைக்கவில்லை என்றும் கூறுவார். எங்களது அரசியல் ஒரு பருவ கால அரசியலாக உள்ளதால் நாங்கள் எங்களது அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான நலன்களைப் பாதுகாக்கவும் போராட வேண்டியுள்ளது என்று கூறினார்.
இருப்பினும் 2004இல் அவர் தனது ஆரம்ப கால உண்மையான (திராவிட) சித்தாந்த நிலைகளை எடுக்க வேண்டிய தேவை இருப்பதை உணர்ந்தார். தோழர் சுர்ஜீத்துடனான தொடர்ந்த உரையாடல்களின் மூலம் அவர் மீண்டும் பிளவுவாத மற்றும் பாசிச இந்துத்துவ அரசியலின் தீவிரமான எதிர்ப்பாளராக மாறினார். சுர்ஜீத், அன்றைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைக் கலைஞரை அழைப்பதன் மூலமாக மீண்டும் பாஜகவுக்கு எதிராக ஓர் அரசியல் முன்னணியை உருவாக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ள வைத்தார். இந்த மூன்று தலைவர்களும் சந்தித்து பாஜகவுக்கு எதிரான ஒரு பரந்த முன்னணியை உருவாக்கும்போது நானும் உடன் இருந்தேன். அந்தக் கூட்டணிதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியாகப் பின்னர் உருவானது. அது நிலைத்த ஆட்சியை 2004இல் இருந்து 2014 வரை அளித்தது. இந்த ஆண்டுகளில் எங்களது உறவானது அரசியல் மற்றும் கொள்கை பிரச்சினைகளில் மட்டுமல்ல; இலக்கியம், மொழி மற்றும் சமூகவியல் போன்ற பொதுவான விஷயங்களிலும் ஆர்வம்கொண்டதாக இருந்தது.
பரந்த அளவில் நடந்த விவாதங்களுக்கிடையில் 2010இல் கோவையில் நடைபெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் பேச்சாளராகக் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுத்தார். அவர் என்னை அழைத்தபோது எனக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொடர்பு இல்லை என்றும் இந்த மாநாட்டில் நான் சம்பந்தமில்லாதவனாக இருப்பேன் என்றும் அவரிடம் தெரிவித்தேன். அப்போது கலைஞர் இது தமிழ் இலக்கியத்திற்கான மாநாடு மட்டுமல்ல; இந்து சமவெளியிலிருந்து வெளியேறிய பெருமளவிலான பல்வேறு சமூகங்களின் பண்பாடு குறித்த பிரச்சாரமும் இடம்பெறும் என்று கூறினார். அப்போது என்னால் முடியாது என்று சொல்ல இயலவில்லை.
தமிழில்: சேது ராமலிங்கம்
நன்றி: பிராண்ட்லைன் இதழ்
கலைஞர் குறித்து சீத்தாராம் யெச்சூரியின் நினைவலைகள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:41:00
Rating:
No comments: