மனிதப்பண்பை சிதறடிக்கும் வெறுப்பு - வி.களத்தூர் எம்.பாரூக்


"ஓ நம்பிக்கையாளர்களே! எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமாகும்" என்று திருக்குர்ஆன் (5:8) குறிப்பிடுகிறது.

வெறுப்பை ஒரு மனிதன் தன் மனதினுள் அனுமதிக்கச் செய்து விட்டால் அது அவனின் மனிதப் பண்பை சிறிது சிறிதாக சிதறடித்துவிடும். ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது, ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது வெறுப்பை விதைப்பதும், விசத்தை கக்குவதும் இன்று அதிகரித்து வருகிறது. 

அரசியல்வாதிகள் துவங்கி, நான்காவது தூண் என்று சொல்லப்படக் கூடிய ஊடகங்கள் வரை வெறுப்பு பிரச்சாரங்கள் மூலம் மக்களை பிரித்தாளும் காலமாக இது இருக்கின்றது. வெறுப்பு மனநிலையின் உச்சபட்சமாக சித்ரவதை செய்வது, அடித்துக் கொள்வது என்பது அதிகரித்து வருகிறது. அதுபோன்ற செய்திகள் தினந்தோறும் வந்து  கவலையடைய வைக்கின்றன. பிரச்சனை, பதட்டம், தாக்குதல் எனும் கொதிநிலையில் இந்த தேசம் சிக்குண்டுள்ளது. இதற்கு அடிப்படையில் வெறுப்பே பிரதானமாக நிலைகொண்டு நிற்கிறது.

மனிதர்களிடம் பொதுவாக அறிவும், மனிதநேயமும், நற்குணமும், சகிப்புத் தன்மையும், விசாலமான இதயமும் மிகுந்திருக்கும். படைப்பினங்களில் சிறந்ததாக மனிதன் இருப்பதற்கு அதுதான் காரணமாக இருக்கிறது. ஆனால் வெறுப்பை திட்டமிட்டு விதைக்கின்றபோது மேற்குறிப்பிட்ட மனிதனின் அனைத்து தன்மைகளும் அவனது மனதிலிருந்து அழிக்கப்பட்டு விடும். அதனால்தான் சகோதரத்துடன் வாழ வேண்டியவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்கிறார்கள்.

வெறுப்பதிலும், நேசிப்பதிலும் நீதமான அணுகுமுறைகளை மேற்கொள்ள இஸ்லாம் வழிகாட்டுகிறது. "நேசிப்பவர் மீது குருட்டுத் தனமான நேசத்தைக் கொண்டிருக்க மாட்டார். அவ்வாறே வெறுப்பவர்கள் மீது கல்நெஞ்சம் கொண்ட, பிடிவாதமான, அடிப்படையற்ற கோபத்தை வெளிப்படுத்தவும் மாட்டார்" என்கிறது.

அடிப்படையற்ற கோபம்தான் வெறுப்பின் மூலம் மக்களை துண்டாடி வருகிறது. அது பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி செல்கிறது. ஒரு சமூகத்தினர் மற்றொரு சமூகத்தின் மீது கடுமையாக நடந்து கொள்வதற்கு அவர்கள் பின்பற்றும் மதம் ஒருபோதும் காரணமாக இருந்தது இல்லை; இருப்பதும் இல்லை. மதத்தை தீவிரமாக பின்பற்றுவதாக காட்டிக் கொள்ளும் சில கயவர்களே காரணமாக  இருக்கிறார்கள். ஏனென்றால் அனைத்து மதங்களும் நல்லவைகளை மட்டுமே சொல்கின்றன. அவைகளுடைய வார்த்தைகளில் எந்த தவறானவற்றையும் காணமுடியாது.

வெறுப்பிற்கு பின்னிருக்கும் காரணிகளாக பொய்கள், திரித்தல்கள், உளறல்கள், அவதூறுகள் ஆகியவையே இருக்கின்றன. அவற்றை மனதில் போட்டு குழப்பி விடுவதின் மூலம் தேவையற்ற அச்சம் பிறக்கிறது. அந்த அச்சம்தான் எல்லா பிரச்சனைகளுக்கும் அச்சாணியாக இருக்கின்றது.

"பிறர் மீது கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் கெட்ட எண்ணம்தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குறைகளை) துருவித்துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரை ஒருவர் பொறாமை கொள்ளாதீர்கள். ஒருவரை ஒருவர் வெறுத்துக் கொள்ளாதீர்கள். ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள்.  அனைவரும் சகோதரர்களாக இருங்கள்" என்று நபிகள் நாயகம்  மனித சமூகத்திற்கு அறிவிக்கின்றார்கள். 

பிறர் மீது கெட்ட எண்ணம் ஏற்படுவதற்கு முதற்காரணம் நம்பிக்கையற்ற தன்மை நிலைக்கொண்டிருப்பதாகும். முதலில் அனைவரும் சகோதரர்கள்; முடிவிலும் அதுவே. அவன் என் சகோதரன் என்ற எண்ணத்தை உள்ளத்தில் ஏற்படுத்திக் கொண்டால் வெறுப்பை விதைக்க நடைபெறும் முயற்சிகள் எந்நாளும் வெற்றிபெறாது. வெறுப்பு விசம் போன்றது. அது எல்லோரையும் கொன்றுவிடும். வெறுப்பை விதைப்பவர்கள் தனக்கும், தன் சமூகத்திற்கும் சேர்த்தே தீங்கிழைக்கிறார்கள் என்பதை முதலில் உணர வேண்டியது அவசியம். வெறுப்புகள் தன்னின் மனித தன்மையை அழித்துவிடும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்திடல் வேண்டும். 

"பரஸ்பர ஆதரவையும், நன்மதிப்பையும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்" என்று திருக்குர்ஆன் (49:11) குறிப்பிடுகிறது. ஒரு மனிதர் மற்றொரு மனிதருக்கு அல்லது ஒரு சமூகம் மற்றொரு சமூகத்திற்கு துயரமான காலங்களில் துணை நின்று ஆதரவு தந்தால் பெரும் மதிப்பு பெறுவதற்கு அது துணை நிற்கும். ஒருவருக்கு ஒருவர் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொண்டால் வெறுப்பு என்கிற நெருப்பு தீப்பற்றாது. நெருப்பை விதைத்து பிரித்தாளா நினைப்பவர்களும் தனிமைப்பட்டு போவார்கள்.

- வி.களத்தூர் எம்.பாரூக்
நன்றி : தினத்தந்தி 03.08.2018
மனிதப்பண்பை சிதறடிக்கும் வெறுப்பு - வி.களத்தூர் எம்.பாரூக் மனிதப்பண்பை சிதறடிக்கும் வெறுப்பு - வி.களத்தூர் எம்.பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 04:38:00 Rating: 5

No comments:

Powered by Blogger.