முதல்வர் மீதான ஊழல் வழக்கு: நீதிமன்றம் கேள்வி!
நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப் பணிகளில் முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்ட புகாரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது, ஏன் லஞ்ச ஒழிப்புத் துறை முறையாக விசாரணை நடத்தவில்லை என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று (ஆகஸ்ட் 23) மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெகதிஷ் சந்திரா அமர்வு முன்பு இன்று (ஆகஸ்ட் 24) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முதல்வர் மீதான புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்
"நெடுஞ்சாலைத் துறை முறைகேடுகள் குறித்து, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஜூன் 13ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் புகார் மனு அளித்திருந்தார். அதன்படி, இதுதொடர்பாக இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதேபோல லலிதாகுமாரி வழக்கில், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள வழிகாட்டுதலின்படி, புகார் அளித்த ஏழு நாட்களுக்குள் முதல் கட்ட விசாரணையை முடித்திருக்க வேண்டும்.
ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இரண்டு மாதங்கள் ஆகியும் லஞ்ச ஒழிப்புத் துறை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார். மேலும், மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து செப்டம்பர் 3ஆம் தேதி பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார். முதல்வர் மீதான புகார் மீது பதிலளிக்க தமிழக அரசுக்கும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
முதல்வர் மீதான ஊழல் வழக்கு: நீதிமன்றம் கேள்வி!
Reviewed by நமதூர் செய்திகள்
on
05:03:00
Rating:
No comments: